பெண்களுக்குச் சமத்துவமும் சம உரிமையும் முழுமையாகக் கிடைக்கப்பெறாத சூழலில் தங்கள் ஒவ்வொரு நகர்வுக்கும் அவர்கள் போராட வேண்டியிருக்கிறது. 2025ஆம் ஆண்டு பெண்களுக்குச் சில ஏற்றங்களையும் ஏராளமான இறக்கங்களையும் அளித்திருக்கிறது. அவற்றைப் பற்றிய தொகுப்பு இது:
மகப்பேறு விடுப்பு: தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் தன் மூன்றாவது கர்ப்பத்தின் போது மகப்பேறு விடுப்பு கோரிய வழக்கில் முக்கிய மான தீர்ப்பை 2025 மே 23 அன்று உச்ச நீதிமன்றம் வழங்கியது. முதல் இரண்டு பிரசவங்களுக்கு வழங்கப்படும் சலுகை, மூன்றாவது பிரசவத்துக்கு மறுக்கப்படுவதை அது கண்டித்தது. மகப்பேறு விடுப்பு என்பது பெண்களின் மகப்பேறு நலன் – இனப்பெருக்க உரிமை சார்ந்த அடிப்படையான அம்சம் என்பதை வலியுறுத்தியது.
மாதவிடாய் விடுப்பு: பணிபுரியும் பெண்களுக்கு மாதம்தோறும் ஒருநாள் வீதம் ஆண்டுக்கு 12 நாள்கள் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பை கர்நாடக அரசு அறிவித்தது. அரசு ஊழியர்களுக்கு மட்டுமல்லாமல் தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் மாதவிடாய் விடுப்பு அறிவித்திருக்கும் இந்தியாவின் முதல் மாநிலம் கர்நாடகம். உழைப்பாளர் சந்தையில் பெண்கள் அதிக அளவில் பங்கேற்பதற்கான வாய்ப்பாகவும் இது அமையும். மாணவியருக்கும் இந்தத் திட்டத்தை நீட்டித்துப் பிறகு அறிவிப்பு வெளியிடப்பட்டது.
திருநர் மாணவர்களுக்கான விடுதி: கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள மகாத்மா காந்தி பல்கலைக்கழக வளாகத்தில் திருநர் சமூகத்தினருக்கான விடுதி தொடங்கப்பட்டது.
நீதி நம் பக்கம்: தன் வீட்டுப் பணிப்பெண்ணை (48) பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கிய வழக்கில் மதச்சார் பற்ற ஜனதா தளக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனுமான பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு (33) இறக்கும்வரை சிறை தண்டனை விதித்துத் தீர்ப்பு வழங்கப்பட்டது.
பெண்கள் – சிறுமியருக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கான தண்டனைகளைத் தமிழக அரசு கடுமையாக்கியது. காவல் துறையினர், ஆயுதப்படையைச் சேர்ந்தவர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்கள், மக்களுடன் நேரடித் தொடர்பில் இருக்கும் அதிகாரிகள் போன்றோர் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபட்டால் தண்டனைக் காலத்தை இரட்டிப்பாக்கி 20 ஆண்டுகளாக உயர்த்தியிருக்கிறது. பாலியல் குற்றவாளிகள் தண்டனைக் காலத்துக்கு முன்னர் விடுதலை செய்யப்பட மாட்டார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி மீது கடந்த 2024 டிசம்பர் 23 அன்று நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கில் சென்னை கோட்டுரைச் சேர்ந்த 37 வயது ஞானசேகரனைக் குற்றவாளி என்று அறிவித்த சென்னை மகளிர் நீதிமன்றம் அவருக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. 2025 மார்ச் மாதம் இந்த வழக்கு சென்னை மகளிர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்ட மூன்று மாதங்களுக்குள் நாள்தோறும் விசாரணை நடத்தப்பட்டுக் குற்றவாளிக்குத் தண்டனை அளிக்கப்பட்டது. இந்த வழக்கில் திறம்பட விசாரணையை மேற்கொண்ட ஐபிஎஸ் அதிகாரிகள் மூவருமே பெண்கள்!
சாதியை வென்ற காதல்: நாடு முழுவதும் சாதி ஆணவக் கொலைகள் அதிகரித்துவரும் நிலையில் தமிழகத்திலும் பல இடங்களில் சாதி ஆணவக் கொலைகள் 2025இல் நடைபெற்றன. மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த ஆஞ்சல் என்கிற 21 வயதுப் பெண், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த சாக்ஷம் என்பவரைக் காதலித்தார். ஆஞ்சலின் தந்தையும் சகோதரரும் சாக்ஷமைக் கொன்றுவிட, இறந்த தன் காதலைனை மணந்துகொண்டார் ஆஞ்சல்.
பெருமிதப் பட்டியல்: தமிழக அரசின் 2025-26ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் பெண்கள் நலன் சார்ந்து சில அறிவிப்புகள் வெளியாகின.
வெளியூரில் தங்கும் பெண்களுக்காக ஏற்கெனவே 13 ‘தோழி’ மகளிர் தங்கும் விடுதிகள் செயல்பட்டுவரும் நிலையில் தற்போது மேலும் 10 விடுதிகள் அமைக்க ரூ.77 கோடி ஒதுக்கீடு.
பெண்கள் பெயரில் பத்திரப்பதிவு செய்தால் பதிவுக் கட்டணத்தில் 1% குறைக்கப்படும். ரூ.10 லட்சம் வரை மதிப்பிலான வீடு, மனை, விவசாய நிலம் உள்ளிட்ட அனைத்து வகையான அசையாச் சொத்துகளின் பத்திரப் பதிவுக்கும் இது பொருந்தும்.
மகளிர் உரிமைத் தொகை பெற விண்ணப்பித்தும் பயனாளர் பட்டியலில் இணையாத தகுதியுள்ள மகளிர் அந்தத் திட்டத்தின்கீழ் விரைவில் இணைக்கப்படுவர்.
கருப்பை வாய்ப் புற்றுநோய்த் தடுப்பூசியான ஹெச்.பி.வி. தடுப்பூசியை 14 வயதுடைய அனைத்துப் பெண் குழந்தைகளுக்கும் படிப்படியாகச் செலுத்த ரூ.36 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
பிற்போக்குத்தனத்தின் உச்சம்: மகாராஷ்டிர மாநிலம் மும்பையை அடுத்த தாணேவில் உள்ள ஒரு பள்ளியில் 5 முதல் 10ஆம் வகுப்புவரை பயிலும் மாணவியரின் ஆடைகளை அவிழ்த்து மாதவிடாய் பரிசோதனை நடத்தப்பட்டது. பள்ளிக் கழிவறையின் சுவரில் ரத்தக்கறை இருந்ததால் யார் அதைச் செய்திருப்பார்கள் என்பதற்காக இந்தப் பரிசோதனை நடத்தப்பட்டிருக்கிறது. பள்ளி முதல்வர் உள்பட இதில் தொடர்புடையவர்கள் அனைவருமே பெண்கள் என்பதுதான் கொடுமை.
ஆண் குழந்தை ஆசையால் பறிக்கப்பட்ட உயிர்கள் திருவண்ணாமலையைச் சேர்ந்த உமாதேவி (25) என்பவரது கருவில் இருக்கும் குழந்தையின் பாலினம் சட்டவிரோதமாகக் கண்டறியப்பட்டது. உமாதேவிக்கு ஏற்கெனவே ஒன்றரை வயதில் ஒரு பெண் குழந்தை இருந்ததால் கருவைக் கலைத்துவிடும்படி அவரது புகுந்த வீட்டினர் கட்டாயப்படுத்தினர். கருவைக் கலைக்க மறுத்ததால் உமாதேவியை அவருடைய கணவரும் புகுந்த வீட்டினரும் அடித்துத் துன்புறுத்தியிருக்கிறார்கள். உமாதேவியும் அவருடைய ஒன்றரை வயது குழந்தையும் அவர்கள் வீட்டுக்கு அருகில் உள்ள கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டனர். 2025இல் வரதட்சிணை மரணங்களுக்கும் குறைவில்லை. திருப்பூர் ரிதன்யாவின் தற்கொலையைத் தொடர்ந்து திருவள்ளூர், அம்பத்தூர், ராமநாதபுரம் எனப் பல்வேறு நகரங்களில் பெண்கள் வரதட்சிணைக்குப் பலியாகினர்.
பெண் வெறுப்புப் பேச்சு: தமிழக வனத்துறை முன்னாள் அமைச்சர் க.பொன்முடி 2025, ஏப்ரல் 6 அன்று நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பெண்களை அநாகரிகமாகச் சித்தரித்துப் பேசினார். மக்களவை உறுப்பினர் கனிமொழி, ‘அமைச்சர் பொன்முடி அவர்களின் பேச்சு ஏற்றுக் கொள்ள முடியாதது. எந்தக் காரணத்திற்காகப் பேசப்பட்டிருந்தாலும் இத்தகைய கொச்சையான பேச்சுகள் கண்டிக்கத்தக்கது’ என்று X தளத்தில் பதிவிட்டார்.
சீர்காழியில் மூன்று வயதுக் குழந்தையை 16 வயதுச் சிறுவன் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கியதோடு குழந்தையின் முகத்தில் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் குறித்து மயிலாடுதுறை மாவட்ட முன்னாள் ஆட்சியர் தெரிவித்த கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தின.
காணாமல் போன குழந்தைகள்: இந்தியாவில் கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் மூன்று லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் காணாமல் போயுள்ளனர்; அவர்களில் 36 ஆயிரம் குழந்தைகள் மீட்கப்படவில்லை. 2022ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் காணாமல் போயிருக்கிறார்கள். இவர்களில் 70%க்கும் அதிகமானோர் பெண் குழந்தைகள்.
அதிகரித்த போக்சோ குற்றங்கள்: சென்னை, திருவள்ளூர், திருச்சி, கிருஷ்ணகிரி, தர்மபுரி என தமிழகம் முழுவதும் பல்வேறு நகரங்களில் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் பதிவாகின.
கைக்கு எட்டாத நீதி: மலையாள முன்னணி நடிகை கடத்தப்பட்டுப் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகள் கழித்து ஆறு பேருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் நடிகர் திலீப் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டது பல்வேறு விமர்சனங்களை எழுப்பியது. பாலினப் பாகுபாடும் அதிகாரமும் தீர்ப்பில் செல்வாக்குச் செலுத்தியிருப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
சென்னை சிறுமி ஹாசினி பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தஷ்வந்தின் மரண தண்டனையை ரத்து செய்ததோடு விசாரணையில் விடுபடல்கள் இருப்பதால் அவரை விடுவித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சரியும் பிறப்பு விகிதம்: ஹரியாணா மாநிலத்தில் உள்ள 481 கிராமங்களில் பெண் குழந்தை பிறப்பு விகிதம் 100 ஆண்களுக்கு 700 என்கிற நிலையில் மிகக் குறைவாக இருக்கிறது. ஆண் - பெண் பாலினச் சமத்துவத்தில் உலக அளவில் 236 நாடுகள் கொண்ட பட்டியலில் இந்தியா 214ஆவது இடத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கிறது.
குற்றத்தில் ஈடுபட்ட காவலர்கள்: திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த காவ லர்கள் இருவர் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரைப் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கினர். கிழக்குக் காவல் நிலையத்தைச் சேர்ந்த சுரேஷ் ராஜ், சுந்தர் ஆகிய இருவரையும் அரசமைப்புச் சட்டம் சட்டக்கூறு 311இன் அடிப்படையில் பணி நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டது.
போர் என்னும் வன்முறை: உலகம் முழுவதும் அதிகாரத்துக்காக நடத்தப் படும் போர்களால் பாதிக்கப் படுகிறவர்களில் பெண்களும் குழந்தைகளும் 92%ஆக இருக்கின்றனர் என ஐ.நா.வின் ஆய்வறிக்கை தெரிவித்தது. உலகம் முழுவதும் மோதல் களின்போது நிகழும் பாலியல் வன்முறைகளும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளும் அதிகரித்துள்ளன.
கருக்கலைப்பு உரிமை: பிரிட்டனில் 24 வாரக் கருவை இரண்டு மருத்துவர்கள் ஒப்பு தலோடு கலைப்பதற்கு அனுமதி உண்டு. ‘24 வாரங்களுக்கு மேற்பட்ட கருவைக் கலைப்பது குற்றம்; இதை மீறுவோருக்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை வரை விதிக்கப்படும்’ என்கிற சட்டம் விக்டோரியா மகாராணி காலத்தில் உருவாக்கப்பட்டது. காலத்துக்கு ஒவ்வாத இந்தச் சட்டத்தைத் திருத்தும் - கருக்கலைப்பைச் சட்டப்பூர்வமாக்கும் மசோதாவுக்கு ஆதரவாக பிரிட்டன் நாடாளுமன்றத்தில் கட்சி பேதமின்றிப் பலரும் வாக்களித்தனர்.