பெண் இன்று

பெண் கைதிகளுக்குத் திறந்தவெளிச் சிறை | பெண்கள் 360

ப்ரியா

பெண் கைதிகளுக்கான முதல் திறந்தவெளிச் சிறையை அமைக்க மகாராஷ்டிர மாநிலம் திட்டமிட்டுள்ளது. தகுதியுள்ள கைதிகள் தங்கள் குழந்தைகளுடன் இங்கே குடும்பமாகத் தங்கி, வேலைக்குச் சென்று, சிறைக்கு வெளியிலான வாழ்க்கைக்குப் படிப்படியாகத் தயாராகிக்கொள்ளலாம். நாசிக், சத்ரபதி சம்பாஜி நகர் ஆகிய இரண்டு இடங்கள் இதற்காகத் தேர்வுசெய்யப்பட்டுள்ளன.

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தகுதியுடைய கைதிகள், அவர்களுக்கான வேலைவாய்ப்புகளைக் கண்டறியக் குழு அமைக்கப்பட்டுள்ளது. தற்போது பராமரிப்பு இல்லத்தில் உள்ள குழந்தைகள் இங்கே தங்கள் தாயுடன் தங்கி, அருகில் உள்ள பள்ளிகளில் படிக்க வழிவகை செய்யப்படும். பெண் கைதிகளுக்கான வேலைவாய்ப்பும் உள்ளூரிலேயே கண்டறியப்படும்.

பிறந்த சில நிமிடங்களிலே சோகம்

ராமேஸ்வரம், செம்பையைச் சேர்ந்தவர்கள் நாகபாண்டி-லோகநந்தினி தம்பதி. இவர்களுக்கு ஏற்கெனவே ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் நவம்பர் 19ஆம் தேதி மீண்டும் ஒரு பெண் குழந்தை வீட்டுப் பிரசவத்தில் பிறந்தது. பிறந்த சில நிமிடங்களிலேயே அந்தக் குழந்தையை உயிருடன் மண்ணில் புதைத்ததாகக் கூறப்படுகிறது.

வீட்டிலேயே பிரசவம் நடந்ததால் ஏற்பட்ட உடல் உபாதைகளைத் தொடர்ந்து லோகநந்தினி ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கே மருத்துவர்கள் குழந்தை குறித்து விசாரித்தபோதுதான் இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. குழந்தையின் உடலை மீட்டு, நாகபாண்டி உள்ளிட்ட மூவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அறிவியலும் தொழில்நுட்பமும் வளர்ச்சி பெற்றிருக்கும் இந்தக் காலத்திலும் பெண் குழந்தைகள் மீதான பாகுபாடு நம் சமூகத்தில் நிலவுவதைத்தான் இதுபோன்ற சம்பவங்கள் உணர்த்துகின்றன.

பில்கிஸ் பானு வழக்கு: இரண்டு பேருக்கு ஜாமீன்

2002ஆம் ஆண்டு குஜராத் கலவரத்தின்போது கூட்டுப் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர் பில்கிஸ் பானு. இந்த வழக்கில் 2008ஆம் ஆண்டு ஜனவரியில் சிபிஜ சிறப்பு நீதிமன்றம் 11 பேரைக் குற்றவாளிகளாக அறிவித்தது. இந்த நிலையில் அவர்களில் இருவரின் ஆயுள் தண்டனையைத் தற்காலிகமாக நிறுத்திவைத்து அவர்களுக்கு உச்ச நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

அக்டோபர் 28ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் அடிப்படையில் பிபின் சந்த் ஜோஷி, பிரதீப் மோதியா ஆகிய இருவருக்கும் நவம்பர் 16ஆம் தேதி பிணை அளிக்கப்பட்டது. குற்றவாளிகள் பிணையில் விடுவிக்கப்பட்டதை அறிந்த பில்கிஸ் பானு, வேதனையும் அதிர்ச்சியும் அவநம்பிக்கையுமாக இருப்பதாகக் கூறியிருக்கிறார். பில்கிஸ் பானுவின் வழக்கறிஞர் ஷோபா குப்தா, “பில்கிஸ் பானுவை இன்னும் எத்தனை முறைதான் மனிதாபிமானமற்ற முறையில் நடத்துவீர்கள்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT