பெண் இன்று

மனமொத்த செயல் குற்றமல்ல | பெண்கள் 360

செய்திப்பிரிவு

ஓர் உறவு முடிவுக்கு வந்துவிட்ட காரணத்தால் அந்த உறவில் நிகழ்ந்த மனமொத்த பாலியல் உறவைக் குற்றமாகக் கருத முடியாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள ஒருவர் தன்னை ஏமாற்றி மணந்துகொண்டதாகவும் ஏழு வருட வாழ்க்கையில் தன்னைப் பாலியல் வல்லுறவுக்கு அந்த நபர் ஆளாக்கியதாகவும் கேரளத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, ஆர்.மகாதேவன் அடங்கிய அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

“ஏமாற்றிப் பெறப்பட்ட சம்மதத்துக்கும் மனமொத்து ஒன்றாக இந்துவிட்டு, அந்த உறவு முடிவுக்கு வந்த பிறகு ஏன் பாலியல் உறவுக்குச் சம்மதித்தோம் என்று நினைத்து வருந்துவதற்குமான வேறுபாட்டை மிகத் துல்லியமாக வரையறுக்க வேண்டும்” என நீதிபதி பி.வி.நாகரத்னா தீர்ப்பின்போது தெரிவித்தார்.

பாலியல் வல்லுறவு என்பது பெண்ணுக்கு எதிரான கொடூரக் குற்றம். இதுபோன்ற போலி வழக்குகள் வருகிறபோது ஏராளமான உண்மையான வழக்குகள் வெளிச்சத்துக்கே வராமல் போவது குறித்த கவலையையும் உச்ச நீதிமன்றம் பதிவுசெய்தது.

பெண்களுக்கும் இடமுண்டு

கேரளக் கள்ளுக்கடைகளில் பெண்களைப் பணியமர்த்த விதிக்கப்பட்டிருந்த தடையை விலக்கி கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எந்தவொரு பணியையும் செய்வதற்குப் பாலினம் தடையாக இருக்கக் கூடாது எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

திருச்சூரைச் சேர்ந்த சோபி என்பவர், ‘கேரளா அப்காரி டிஸ்போசல் விதிகள் 2002’இன் படி கள்ளுக்கடையில் பணியாற்ற தனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தை நாடினார். “மதுக்கடைகளில் பெண்களுக்குப் பாதுகாப்பான சூழல் இல்லை. அவர்கள் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களை எதிர்கொள்ள நேரிடலாம். சில கடைகள் உள்ளடங்கிய பகுதிகளில் இருக்கின்றன” என அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது.

‘எல்லாப் பணிகளிலும் ஆணுக்கும் பெண்ணுக்கும் சம வாய்ப்பு வழங்க வேண்டிய அவசியமில்லை. புறச்சூழல், பாலினம் சார்ந்தும் வேலைகள் ஒதுக்கப்பட வேண்டும்’ என்கிற உச்ச நீதிமன்றத் தீர்ப்பும் அரசுத் தரப்பில் மேற்கோள் காட்டப்பட்டது. ஆனால், கேரள உயர் நீதிமன்றமோ, “பெண்களுக்குப் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தித்தர வேண்டியது அரசின் பொறுப்பே தவிர, பெண்களுக்கு வாய்ப்பு மறுப்பது அதற்குத் தீர்வாகாது” எனக் கூறி, கள்ளுக்கடைகளில் பெண்களுக்கு வாய்ப்பு வழங்க மறுத்த விதியை நீக்கி உத்தரவிட்டது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT