

‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் ‘பெண் இன்று’ சிறப்புப் பக்கம் சார்பாக சென்னை திருவான்மியூரில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழக வளாகத்தில் அக்டோபர் 25 ஞாயிறு அன்று மகளிர் திருவிழா நடைபெற்றது. மழையையும் பொருட்படுத்தாமல் வாசகியர் உற்சாகமாகப் பங்கேற்றனர்.
மகளிர் திருவிழாவில் காவல்துறை முன்னாள் கூடுதல் இயக்குநர் வே. வனிதா, திருவான்மியூர் வேல்ஸ் பல்கலைக்கழக கல்வி மற்றும் நிர்வாகத்துக்கான வளாக இயக்குநர் வி. சசிரேகா, ரெயின்போ குழந்தைகள் நல மருத்துவமனையின் மூத்த மருத்துவ நிபுணர் ஷீலா ஆகியோர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றனர். நிகழ்ச்சியின் தொடக்க நிகழ்வாக, தமிழக அரசின் கலை இளமணி விருது பெற்ற கடலூரைச் சேர்ந்த மோகன சங்கரியின் பரத நாட்டியம் வாசகியரின் கண்களுக்கு விருந்து படைத்தது.
சிந்திக்கத் தூண்டிய பேச்சரங்கம்: பெண்கள் தற்சார்புடன் வாழவேண்டும் என்பதை வலியுறுத்திப் பேசினார் காவல்துறை முன்னாள் கூடுதல் இயக்குநர் வனிதா. மேலும், “பெண்கள் தங்கள் உடை, வாழ்க்கை முறை, தனிப்பட்ட முடிவுகள் ஆகியவற்றில் சுயமாக முடிவெடுக்க வேண்டும். அதேநேரத்தில், குடும்பத்தினரிடையே உரையாடலும் பரஸ்பர புரிதலும் இருக்க வேண்டும். எதையும் ஏன், எதற்கு, எப்படி என்று கேள்வி கேட்கும் சிந்தனையைத் தூண்டும் கல்வியே பயனுள்ளதாக இருக்கும்” என்றார்.