பெண் இன்று

ஏன் கொண்டாட வேண்டும் மகளிர் தினம்?

பிருந்தா சீனிவாசன்

இந்த ஆண்டுக்கான மகளிர் தினக் கொண்டாட்டக் கருப்பொருளாக ஐ.நா. அறிவித்திருக்கும் உரிமை, நீதி, இவற்றைப் பெறுவதற்கான செயல்பாடு ஆகிய மூன்றும் சாதாரண நாள்களிலேயே பெண்களுக்குக் கிடைப்பது அரிது. போர் போன்ற அசாதாரண சூழல் நிலவுகிற நாள்களிலோ இவை கற்பனைக்கும் எட்டாதவையாகிவிடும். மத்தியக் கிழக்கு நாடுகளில் போர் நீடித்துவரும் நிலையில், “ஈரானியப் பெண்கள் இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் கைதிகளைப் போலவும் அடிமைகளைப் போலவும் நடத்தப்படுகிறார்கள்.

வன்கொடுமையிலிருந்தும் குழந்தைத் திருமணங்களில் இருந்தும் அவர்களை விடுவிக்கத்தான் இந்தப் போர்” என்று ஈரான் மீதான அமெரிக்கா – இஸ்ரேல் கூட்டுப்படைகளின் தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சொல்லியிருக்கிற காரணம் எவ்வளவு நகைமுரண்!

“பிற நோக்கங்களை அடைவதற்காக நடத்தப்படும் போருக்கு ஒருபோதும் பெண் விடுதலையைச் சாக்காகப் பயன்படுத்தக் கூடாது. உண்மையிலேயே நாம் ஈரானியப் பெண்களின் விடுதலையை விரும்பினால் அதற்கான எதிர்வினை மோசமான வன்முறையாக இருக்க முடியாது” என ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் சொல்லியிருக்கும் கருத்து, போர்களில் எளிய இலக்காக ஆக்கப்படும் பெண்களையும் குழந்தைகளையும் நம் கண்முன் நிறுத்துகிறது.

          

வரலாற்றுத் தருணம்: இன்று, நேற்றல்ல… காலந்தோறும் போர்களால் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்படுகிற பெண்கள்தான் அதற்கு எதிரான குரலாகவும் ஒலித்துக் கொண்டிருக்கிறார்கள். மகளிர் தின வரலாறும் அதைத்தான் சொல்கிறது. டென்மார்க்கின் கோபன்ஹேகன் நகரில் 1910இல் ஜெர்மனியின் மார்க்ஸிய பெண்ணியவாதியும் பொதுவுடைமைப் போராளியுமான கிளாரா ஜெட்கின் தலைமையில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பெண் பிரதிநிதிகள் பங்கேற்ற ‘உலக சோஷலிஸ்ட் பெண்கள் மாநாடு’ நடைபெற்றது.

ஆண்டுதோறும் ஒரு நாளை மகளிர் தினமாகக் கொண்டாட வேண்டும் என்கிற வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்மானம் அந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது (மகளிர் தினம் உண்மை வரலாறு, ஆசிரியர்: இரா.ஜவஹர்). அந்த மாநாட்டில் மகளிர் தினத்துக்கான தேதி எதுவும் குறிப்பிடப்படவில்லை. அதனால், பல்வேறு நாடுகளிலும் பிப்ரவரி முதல் மே வரை ஏதாவதொரு ஞாயிற்றுக்கிழமை மகளிர் தினமாகக் கொண்டாடப்பட்டு, பெண்களின் உரிமையை வலியுறுத்திப் பேரணிகள் நடத்தப்பட்டன. அன்று ஒருநாள் மட்டும் குழந்தைகளை ஆண்கள் கவனித்துக்கொள்ள பெண்கள் வீட்டைவிட்டு வெளியேறி, பேரணிகளில் பங்கேற்றனர், பெண்களுக்கான உரிமைகள் சார்ந்த விவாதங்களில் ஈடுபட்டனர்.

ரஷ்யாவில் 1913இல் மார்ச் 2 அன்றும் 1914இல் மார்ச் 8 அன்றும் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. 1914இல் தொடங்கிய முதல் உலகப்போர் 1917இல் தீவிரமடைந்தது. அந்தப் போரில் ரஷ்யாவில் மட்டும் 17 லட்சம் பேர் கொல்லப்பட்டனர். கணவனையும் மகனையும் சகோதரனையும் போரில் பறிகொடுத்த பெண்கள் ஆதரவின்றித் தவித்தனர். தாங்களும் குழந்தைகளும் பசியாற ஒரு ரொட்டித் துண்டுகூடக் கிடைக்காத அவலநிலை அவர்களைக் கொதித்தெழச் செய்தது. 1917 மார்ச் 8 அன்று ரஷ்யாவின் ஆடை தயாரிப்பு ஆலைகளில் பணியாற்றிய பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

‘எங்கள் குழந்தைகளுக்கு உணவு வேண்டும்’ என்பதைத் தொடர்ந்து அவர்கள் முன்வைத்த போராட்ட முழக்கம் ‘போரை நிறுத்து’ என்பதுதான். ‘படைவீரர்களின் தாய்மார்களும் மனைவிகளும் கேட்கிறோம்: போரை நிறுத்து’ என்று முழக்கமிட்டபடி சமாதானத்தை வலியுறுத்தி அன்றைய ரஷ்ய தலைநகர் பெட்ரோகிராட்டில் பெண் தொழிலாளர்கள் முன்னெடுத்த போராட்டமே ரஷ்யப் புரட்சியாகப் பரிணமித்தது.

தனித்த பிரச்சினையல்ல:

மார்ச் 8 அன்று பெண் தொழிலாளர்கள் தொடங்கி வைத்த போராட்டத்தில் ஆண்களும் இளைஞர்களும் படைவீரர்களும் பங்கேற்றது வரலாறு. செல்வமும் அதிகாரமும் பேராசையுமே போர்களுக்கான காரணங்களாக இருக்கிறபோது அதைக் கைவிட்டு அமைதிக்குத் திரும்பும்படி வலியுறுத்திய பெண்களின் வீரத்தை அடியொற்றித்தான் தற்போது ஆண்டுதோறும் மார்ச் 8 அன்று மகளிர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. ஆனால், இன்றைக்கும், ‘போர்களை நிறுத்து’ என்கிற கோரிக்கை எழுந்தபடி இருப்பது வேதனைக்குரியது.

எங்கோ நடைபெறுகிற போரை அந்தந்த நாடுகளின் பிரச்சினையாக மட்டுமே சுருக்கிப் பார்க்கும்படி உலகமயமாக்கல் மனிதர்களை மாற்றிவைத்திருக்கிறது. ஈரானில் பள்ளியொன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 165க்கும் மேற்பட்ட குழந்தைகள் செத்து மடிந்தது அவர்களின் தனிப்பட்ட பிரச்சினையா? அந்தக் குழந்தைகளைப் பறிகொடுத்த பெண்களின், அவர்களது குடும்பத்தின், அந்தச் சமூகத்தின், அந்த நாட்டின், ஒட்டுமொத்த மனிதகுலத்தின் பிரச்சினையும்கூடத்தானே. அதுபோலத்தான் பெண்களின் பிரச்சினைகளும். அவை பெண்களின் பிரச்சினைகள் மட்டுமல்ல; உலகளாவிய பிரச்சினையும்தான் என்கிற விரிவான கண்ணோட்டத்துடன் அணுகப்பட வேண்டும்.

பிற நாடுகளால் ஆயுதங்கள் தாங்கி நடத்தப்படும் போர்கள் மட்டுமல்ல, சொந்த நாட்டுக்குள்ளேயே அதிகார வர்க்கத்தாலும் ஆதிக்கமனம் கொண்டவர்களாலும் ஆணாதிக்கத்தின் பெயராலும் நிகழ்த்தப்படுகிற போர்களைப் பெண்கள் நாள்தோறும் எதிர்கொண்டபடிதான் இருக்கிறார்கள்.

‘போரை நிறுத்து’ என்று நூற்றாண்டுகளுக்கு முன் சோவியத் ஒன்றியத்தில் ஒலித்த குரல்களும், இருபது ஆண்டுகளுக்கு முன், ‘இந்திய ராணுவமே எங்களை வல்லுறவு செய்’ என்று மணிப்பூரில் ஒலித்த தாய்மார்களின் குரல்களும் ஒன்றல்ல என்றாலும் வன்முறைக்கு எதிரான புள்ளியில் அவை ஒற்றைக் குரலாகலே ஒலிக்கின்றன.

பெண்கள் அன்றிருந்த நிலையில் இன்றில்லை. உலகம் நவீனமயப்பட்டிருக்கிறது. அதற்கேற்ப பெண்களுக்கு எதிரான வன்முறையின் வடிவங்களும் நவீனமயப்பட்டிருக்கின்றன. குடும்ப கௌரவத்தின் பெயராலும் காதலின் பெயராலும் திருமண உறவின் பெயராலும் பெண்களின் உயிர்கள்எளிதாகப் பறிக்கப்படுகின்றன.

வீடுகளிலும் கல்வி நிலையங்களிலும் பணியிடங்களிலும் பொதுவெளிகளிலும் பெண்களின் உடல்கள் வயது வேறுபாடின்றி வன்முறைக்கு ஆளாக்கப்படுகின்றன. அவர்களது உரிமைகள் மறுக்கப்படுகின்றன.

நீதி கேட்டு எழும் குரல்கள் ஒடுக்கப்படுகின்றன. அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பெண்கள் அடைந்திருக்கும் உயரம், பெண்கள் அனைவரும் உன்னத நிலையை அடைந்துவிட்டார்கள் என்பதற்கான சான்றல்ல. அனைத்து விதமான வன்முறைகளில் இருந்தும் சமூகத்தின் அனைத்துத் தரப்புப் பெண்களும் விடுதலை பெறுவதுதான் மகளிர் தினக் கொண்டாட்டத்தின் நோக்கமே தவிர, ஆடையலங்காரங்களோ பரிசுப் பொருள்களோ அல்ல.

brindha.s@hindutamil.co.in

SCROLL FOR NEXT