பண்டைய கிரேக்கத்தில் மாரத்தான் என்கிற பகுதியில் நடைபெற்ற போரில் தங்கள் படை வென்றுவிட்டதை அறிவிக்க 40 கி.மீ. தொலைவில் இருந்த ஏதென்ஸுக்கு ஓடியே சென்றார் ஃபேடிப்படீஸ். அவரது நினைவாகவே மாரத்தான் போட்டிகள் ஒலிம்பிக்கில் உருவாக்கப்பட்டன.
2,500 ஆண்டுகளுக்கு முன் போர் வெற்றியை அறிவிப்பதற்குத் தொடங்கிய எளிய மக்களின் ஓட்டம், இன்றுவரை நிற்கவில்லை. மகாராஷ்டிரத்தின் பீட் மாவட்டத்தைச் சேர்ந்த சமையலர் ரமாபாய் (47) வெறும் ரூ. 3,000 பரிசுத்தொகைக்காக 3 கி.மீ. தொலைவுக்கு வெறுங்காலில் சமீபத்தில் ஓடிய செய்தி அதை உறுதிப்படுத்துகிறது.
நீண்ட தூர ஓட்டத்துக்கு வசதியான ஆடைகளோ காலணிகளோ அவரிடம் இருந்திருக்கவில்லை. வழக்கமாக அவர் கட்டிக்கொள்ளும் சேலையும் காயங்களில் இருந்து காலைக் காக்கும் சாதாரண செருப்பும் மட்டுமே அவரிடம் இருந்தன. அதிலும் ஓடும்போது செருப்பு வேகத்தைக் குறைக்க, அந்தச் செருப்பையும் கையில் பிடித்துக்கொண்டு அவர் ஓடிய காட்சி இன்னும் பல ஆண்டுகள் கடந்தாலும் அவ்வளவு எளிதில் மக்கள் மனங்களில் இருந்து மறைந்துவிடுமா என்கிற கேள்வி வலுவாக எழுகிறது.
பனிமலையின் நுனி: தன் உடலைக் கரைக்கவோ, கட்டுக் கோப்பாக வைத்துக்கொள்ளவோ அவர் ஓடவில்லை. அவரது வாழ்க்கையின் அடிப்படை வசதிகள் எதுவும் பூர்த்தி பெறவில்லை. தன்னைப் போல தன் மகள்களுக்கும் படிப்பு இல்லாமல் போனால், இந்த உலகத் துன்பங்களில் சிக்குண்டு உழல்வார்களோ என்கிற கேள்வி அவருக்கு எழுந்திருக்கும். கணவரும் இல்லாத நிலையில், இந்தத் துயரங்களில் இருந்து படிப்பு ஓரளவுக்காவது விடுதலை தந்துவிடும் என்கிற நம்பிக்கையில் தன் செருப்புகளைக் கையில் பிடித்துக்கொண்டு ரமாபாய் ஓடியிருக்கிறார்.
அவர் ஓடியது வெறும் 3 கி.மீ. தொலைவாக இருக்கலாம். ஆனால், அவரது ஓட்டம் இத்துடன் நிற்கப்போவதில்லை. ரமாபாயின் ஓட்டம் என்பது இந்திய மக்கள்தொகை எனும் கடலில் தலைகாட்டும் பனிச்சிகரத்தின் முனை மட்டுமே. அந்த நுனிக்குக் கீழே கோடானு கோடி மக்கள் தத்தளித்துக்கொண்டிருப்பதன் உருவகமாகத்தான் ரமாபாய் நம் முன் தோன்றியிருக்கிறார். நெருக்கடிகள் மிகுந்த ஒரு வளரும் நாட்டில் எப்படியாவது நீந்திக் கரையேறிவிட மாட்டோமா என்கிற நம்பிக்கையுடன்.
உண்மை உரைத்த படம்: ரமாபாய் ஓடும் காட்சியைப் பார்த்தவுடன் என் மனதில் சட்டென்று பளிச்சிட்டது புகழ்பெற்ற ஈரானியத் திரைப்படம் ‘சில்ரன் ஆஃப் ஹெவன்’. குழந்தைகளை வைத்து உலக நிதர்சனங்களை மனதில் தைப்பதுபோல் சொல்வதற்காக அறியப்பட்ட பிரபல இயக்குநர் மஜித் மஜிதி இயக்கிய படம் அது. இரண்டு குழந்தைகளின் வாழ்க்கையை வறுமை எப்படி இடைவிடாது தொந்தரவு செய்துகொண்டே இருக்கிறது என்பதே அப்படத்தின் கதை.
அலியும் ஸாஹ்ராவும் அண்ணன், தங்கை. செருப்பு தைப்பவரிடம் இருந்து ஸாஹ்ராவின் தைக்கப்பட்ட காலணிகளை வாங்கிவரும்போது, திறந்தவெளிச் சாக்கடையில் தவறுதலாக அவற்றைத் தவறவிடுகிறான் அலி. அதை எடுக்க எவ்வளவோ முயன்றும் முடிவதில்லை. கடும் வறுமையில் உழலும் அப்பா, அம்மாவுக்குத் தெரிந்தால் உதை விழும்.
இதனால், காலணி காணாமல் போன விஷயத்தை இருவரும் மறைக்கிறார்கள். அலியின் காலணியை அணிந்துகொண்டு காலையில் ஸாஹ்ரா பள்ளிக்குச் செல்கிறாள். மதியம் வீட்டுக்கு ஓடி வந்து அலியிடம் காலணியைத் தருகிறாள். இப்படிச் செய்வதால் வீட்டிலும் பள்ளியிலும் புதிய பிரச்சினைகள் முளைக்கின்றன.
இந்நிலையில் 5,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் மூன்றாவது பரிசாகக் காலணி அறிவிக்கப்படுகிறது. அதை வென்றுவிட்டால் தங்கையின் காலணித் துயரம் தீரும். பெரிய பயிற்சிகள் இன்றிப் போட்டியில் பங்கேற்கிறான் அலி. காலணி மட்டுமே நோக்கமாக இருக்க, ஆச்சரியம் அளிக்கும் விதமாக அவன் முதலிடத்தையே பிடித்துவிடுகிறான்.
அதன் காரணமாகச் சோகமடைகிறான், அவன் எதிர்பார்த்தது காலணி என்கிற மூன்றாவது பரிசைத் தானே. வீடு திரும்பி கொப்புளங்கள் வெடித்த பாதங்களை, தங்க மீன்கள் நீந்தும் மீன் தொட்டியில் நுழைத்து அலி குளிர்வித்துக்கொள்ளும் காட்சியில் படம் முடியத் தொடங்கும். ஓட்டத்தின் காரணமாக அவனுடைய காலணிகளும் கிழிந்துவிடும். அதேநேரம், இரண்டு ஜோடி புதிய காலணிகளுடன் அவனின் தந்தை வீடு திரும்பிக் கொண்டிருப்பார்.
சிறந்த கவிதை, கதை, திரைப்படங்கள் நிதர்சனங்களைக் காட்சிப்படுத்துகின்றன. அந்தப் படைப்புகளில் எளிய மக்களின் அன்றாடப் பாடுகள், துயரங்கள் காட்சிகளாக உறைவது, இவ்வளவு வளர்ச்சிகளுக்குப் பின்னும் இந்த உலகம் ஏற்றத்தாழ்வுடன் இருப்பதன் அப்பட்டமான அடையாளம். ஒரு ஜனநாயக, சமத்துவச் சமூகம் எல்லாருக்கும் அடிப்படை வசதிகளை உறுதிப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், அது நிகழ்வதில்லை. அதற்காக யாரும் குற்ற உணர்வும் கொள்வதில்லை.
‘சில்ரன் ஆஃப் ஹெவன்’ திரைப்படத்தில் மூச்சுவாங்க அலி ஓடுவதைப் பார்க்கும்போது, ரமாபாயின் நிஜ ஓட்டம் நம் மனக் கண்களைக் கடந்து செல்லும். அலியைப் போலவே ரமாபாயும் வெறும் ரூ.3,000 பரிசுக்காக ஓடியிருக்கிறார். அலியைப் போலவே, இந்தப் பரிசுத் தொகையைக் கொண்டு தன் மகள் பூஜாவுக்கு நோட்டு, பேனா வாங்குவேன்.
மீதமுள்ள பணத்தை மற்றொரு மகள் ஆர்த்திக்காகச் செலவு செய்வேன் என்று ரமாபாய் கூறியிருக்கிறார். அந்தத் தாயின் மனோதிடம் பாராட்டத்தக்கதுதான். ஆனால், அடிப்படைத் தேவைகளான கல்விக்குத் தேவையான நோட்டு, பேனா வாங்கக் காசில்லாமல், வெறும் 3000 ரூபாய் பரிசுக்காக, ஒரு தாயை இப்படி ஓட வைக்கும் சமூகமாக, அரசாக நாம் இருப்பது எப்படிப் பெருமிதம் ஆகும்?