

உலக அரங்கில் இந்தியாவை, தமிழகத்தை வலுப்படுத்த மக்களின் பங்கு பற்றி அரசமைப்புச் சட்டம் ஏதாவது சொல்லி இருக்கிறதா என்று தமிழரசியின் மனதில் ஒரு சந்தேகம் ஓடிக்கொண்டிருந்தது. அதைத் தீர்த்துக்கொள்ள கலைவாணியிடம் கேட்டார்.
தமிழரசி: என்ன கலைவாணி அக்கா, தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக நாம் மாற்ற வேண்டும் என்றால் நம் கடமைகள் குறித்து அரசமைப்புச் சட்டம் ஏதாவது சொல்லி இருக்கிறதா?
கலைவாணி: ஆமாம் தமிழரசி. அரசமைப்பு நமக்கு உரிமைகளை மட்டும் வழங்கவில்லை; கடமைகளையும் வகுத்துள்ளது. ‘ஒரு குடிமகனின் கடமை என்பது வெறும் வரிகளைச் செலுத்துவது மட்டுமல்ல; தேசத்தின் அமைதி, ஒருமைப்பாடு, வளர்ச்சிக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொள்வதும் ஆகும்’ என்கிற அப்துல் கலாமின் கருத்துதான் நினைவுக்கு வருகிறது.
தமிழரசி: கடமைகளும் உரிமைகள் அளவுக்கு முக்கியமானவையா?
கலைவாணி: நிச்சயமாக. உரிமைகளும் கடமைகளும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள்; ஒன்றில்லாமல் மற்றொன்று முழுமை பெறாது. 1976ஆம் ஆண்டின் 42ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தின் மூலம் பகுதி IV-A, ஷரத்து 51A-இல் அடிப்படைக் கடமைகள் இணைக்கப்பட்டன. தொடக்கத்தில் 10 கடமைகள் இருந்தன; 2002ஆம் ஆண்டு 86ஆவது திருத்தத்தின் மூலம் அவை 11ஆக உயர்ந்தன.