விருதுநகர் மாவட்டத்தில் வானம் பார்த்த பூமியாக இருந்தாலும் ஓரளவு வளர்ச்சிகண்ட பந்தல்குடி கிராமத்தில் 1960களில் பிறந்த எனக்கு எட்டு வயதிலேயே வாசிப்பில் மிகுந்த ஆர்வம் ஏற்பட்டது. நாளிதழ் வாசிக்கப் பெற்றோர் கற்றுத்தர அதன் பிறகு எங்கள் ஊரில் ராணி, குமுதம், குங்குமம், கல்கண்டு, தாய், இதயம், அம்புலிமாமா போன்ற வார இதழ்களை வாங்கும் வீடுகளுக்குச் சென்று கேட்டு வாங்கி வாசித்தேன். எங்கள் ஊரில் நூலகம் இருந்தாலும் பெண் பிள்ளைகள் அங்கே போக முடியாது. என் அண்ணன், தம்பிகளின் உதவியோடு நூலகத்தில் இருந்த நாவல்கள், பெருங்கதைகளை வாசித்தேன்.
ஜெயகாந்தனின், ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’ நான் வாசித்த முதல் நாவல். அதை ஆசை ஆசையாகத் திரும்பத் திரும்ப வாசித்தது மறக்க முடியாத அனுபவம். கல்கியின் வரலற்றுப் புதினங்கள், லக்ஷ்மி, சிவசங்கரி, இந்துமதி ஆகியோரின் நாவல்கள், அகிலன், கோவி மணிசேகரன் படைப்புகளோடு தமிழ்வாணனின் துப்பறியும் கதைகள் என எல்லாவற்றையுமே ஆவலோடு படித்தேன். பாலகுமாரனின் எழுத்து நடை பிடிக்கும். சுஜாதாவின் அறிவியல் கதைகளையும் விரும்பி வாசித்தேன்.
கவிதை வாசிப்பில் ஏற்பட்ட ஆர்வத்தால் மு.மேத்தா, அப்துல் ரகுமான், வைரமுத்துவின் நூல்களை வாசித்தேன். பட்டப் படிப்பு முடிக்கும் முன் திருமணம். பிறகு குழந்தைகள், வீட்டு வேலை என்னும் வாழ்க்கையின் பரபரப்பான ஓட்டத்தில் வாசிக்க நேரமின்றிப் போனாலும், வாசிப்பின் ஆர்வம் குறையவே இல்லை.
அதுதான் விட்டுப்போன பட்டப் படிப்பைத் தொடர வைத்தது; என்னைப் பட்டதாரியாக்கி 50 வயதில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்று அரசுப் பணி கிடைக்க உதவியது. பணி ஓய்வு பெற்ற பிறகும் தனியார் பள்ளியில் பணியாற்றும் நான் வாசிப்பையே வெறுக்கும், தவிர்க்கும் இன்றைய மாணவர்களைப் பார்த்து மனம் நொந்து போகிறேன். அதை மாற்றுவதற்காக என் மாணவர்களிடம் வாசிப்பின் சுவையை, பலனை அன்றும் இன்றும் சொல்லிக்கொண்டே இருக்கிறேன்.- அருணா திலகர், மதுரை.