பெண் இன்று

புத்தகத்தில் கிடைத்த புதையல் | வாசிப்பை நேசிப்போம்

Guest Author

மூன்று பேரக்குழந்தைகளின் (ஒரே பிரசவத்தில் பிறந்தவர்கள்) பராமரிப்பு, வீட்டுவேலைகள், துரத்தும் தொலைக்காட்சித் தொடர்கள் பிடியில் சிக்கிய எனக்குக் கனமான நூலாக இருந்தாலும் கனமான விஷயமாக இருந்தாலும் படிப்பது சிரமமாக இருந்தது.

‘கதை, கதை’ எனக் கேட்கும் பேரக்குழந்தைகளுக்காக எங்கள் பணகுடி பொது நூலகத்துக்குச் சென்றேன். அப்போது ‘ராணி’ ஆசிரியர் அ.மா.சாமி தொகுத்த ‘கொறிக்க’ என்கிற நூலைக் காண நேர்ந்தது. அ.மா.சாமி எங்களைப் போன்றோரின் சிரமத்தை உணர்ந்தவர்போல. தனது முன்னுரையில், ‘கையில் எடுத்தால் எளிமையாகப் படிக்கலாம்.

எந்த இடத்தில் விட்டோம் என நினைவு வைக்கத் தேவையில்லை. எந்தப் பக்கத்தில் இருந்தும் படிக்கலாம். பயணத்திலும் படிக்கலாம்’ எனக் குறிப்பிட்டுள்ளதைப் பார்த்து மகிழ்ந்தேன், படித்தும் மகிழ்ந்தேன். சுவையான நிகழ்வுகளை மட்டுமல்ல; சாதாரண நிகழ்வுகளைக்கூட சுவாரசியமாகப் பதிவுசெய்துள்ளார்.

பெரியாரின் மனைவி நாகம்மாள் இறந்தபோது பெரியார் எழுதியதை, ‘இரங்கல் இலக்கியத்தின் இமயம் இது’ எனக் குறிப்பிட்டு அ.மா.சாமி பகிர்ந்துள்ளார்.

‘துக்கப்படுவதா, மகிழ்ச்சியடைவதா? அவர் மறைவு எனக்கு லாபமா, நஷ்டமா? அவர்தான் எனக்குத் துணையாக இருந்தார். நான் அவருக்குத் துணையாக இருந்தேனா என்பது கேள்விக்குறி்தான். நான் போதித்த அளவு நூற்றில் ஒரு பங்குவீதமாவது, நாகம்மாள் விஷயத்தில் நடந்துகொண்டேன் எனச் சொல்லிக்கொள்ள எனக்கு முழு யோக்கியதை இல்லை.

நாகம்மாள் மறைவை நான் எவ்வளவு மகிழ்ச்சியான காரியத்திற்கும் லாபமான காரியத்திற்கும் பயன்படுத்திக்கொள்கிறேனோ அந்த மாதிரி என் மறைவையோ, நலிவையோ நாகம்மாள் பயன்படுத்த மாட்டாள் என்பது சர்வ நிச்சயம்.’ பெரியாரின் இந்தச் சுயவிமர்சனம் வெளியான ஆண்டு 1933. வெறும் பொழுதுபோக்குக்காக எடுத்த புத்தகத்தில் கிடைத்த புதையல் இது. பெரியாரைப் பெரியாராக உணர்த்தும் தருணம். நேசிப்பவர்களுக்காக வாசிக்கத் தொடங்கி வாசிப்பை நேசிக்கத் தொடங்கிவிட்டேன்!

- வேலம்மாள் முத்துக்குமார், பணகுடி.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT