பெண் இன்று

நாமே முன்னோடியாக இருப்போம் | வாசிப்பை நேசிப்போம்

Guest Author

திருநெல்வேலி மாவட்டம் செட்டிகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் முதுகலைத் தமிழாசிரியராகப் பணிபுரிந்து வருகிறேன். என் மாணவப் பருவத்தில் எங்கள் ஊர் நூலகத்துக்கு அன்றாடம் வரும் நாளிதழ்களைப் படிக்கத் தொடங்கியதே பாடப்புத்தகத்தைத் தாண்டிய உலகை அறியும் வழியாக அமைந்தது. எங்கள் கிராமத்தின் ஒவ்வொரு வீட்டிலும் வெவ்வேறு விதமான வார, மாத இதழ்களை வாங்குவார்கள். எல்லாரும் அவரவர் வாங்கும் இதழ்களைப் பரிமாறிக்கொள்வோம். அவற்றில் வரும் கதைகள் விரிவான வாசிப்புக்கு அடித்தளமிட்டன.

‘கண்மணி’யின் அட்டைப்படமும், அதில் கதை எழுதும் பெண் எழுத்தாளர்களும் எழுத்தின் படிநிலையில் என்னுள் தாக்கத்தை ஏற்படுத்தினர். எழுத்தாளர்கள் மணிமாலா, ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், பாலகுமாரன் ஆகியோரின் நாவல்களைப் பெரும்பாலும் தவறவிட்டதில்லை. பின்பு மேற்படிப்பு முடித்து ஆசிரியப் பணியில் சேர்ந்ததும் தமிழின் மீதான ஆர்வம் ஊற்றாகப் பெருக்கெடுத்ததன் விளைவால் மேலும் பல எழுத்தாளர்களின் எழுத்து வலைகளில், என் வாசிப்பு சிக்கியது. அவர்களில் குறிப்பிடத்தகுந்தவர்கள் புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், அம்பை, சிவசங்கரி, பாவண்ணன், விந்தன் போன்றோர்.

இன்றைய எழுத்தாளர்களில் இறையன்பு, ஆர்.பாலகிருஷ்ணன் போன்றோரின் ஆராயத் தூண்டும் சிந்தனைகளும், சிந்திக்கத் தூண்டும் வகையில் எழுதும் உதயச்சந்திரன், கோபிநாத் ஆகியோரின் எழுத்துகளும் என்னுள் தாக்கத்தை ஏற்படுத்தியதன் விளைவு என்னையும் ஒரு எழுத்தாளராக உயர்த்தியிருக்கிறது. என் மாணவர்களையும், ‘பள்ளி மாணவர் வாசக வட்டம்’ மூலம் கதைகள், கவிதைகள், நூல் விமர்சனம் என ஆக்கபூர்வமாக வழிநடத்துவதுடன் அவர்களின் படைப்புகள் நூல்களாக வர உதவுகிறேன்.

என் வீட்டு நூலகத்தில் பல்வேறு எழுத்தாளர்களின் நூல்கள் நிரம்பியிருப்பினும் இன்னும் என் வாசிப்புத் தேடல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இலக்கியங்கள் அறிவின் வாயில்கள் மட்டுமல்ல; நம் உணர்வோடு கலந்தவை என்பதை இளம் தலைமுறையினருக்குக் கூற நாமே முன்னோடியாக இருப்போம்.

- வி. லெட்சுமி, செட்டிகுளம்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT