கல்விதான் ஒரு பெண்ணுக்கு வாழ்நாள் துணை என்று சொல்லிச் சொல்லியே வளர்க்கப்பட்டவள் நான். அதனாலேயே படிக்கிற காலத்தில் பாடநூல்களைத் தாண்டி வேறு நூல்களை வாசிக்கும் வாய்ப்பு எனக்கு அமையவில்லை. திருமணத்துக்குப் பிறகுதான் வாசிப்பு வசப்பட்டது.
என் கணவர் என்னைப் பெண் பார்த்துச் சென்ற சில நாள்கள் கழித்து, அவர் எழுதிய, ‘விழிநீர் வழியே விழுகிறாய்’ என்கிற கவிதைத் தொகுப்பை வாசிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அது ஒரு காதல் கவிதைத் தொகுப்பு. காதலில் தோற்றுப்போன பெண் ஒருத்தி தன் துயரங்களைப் பேசுவதுபோல் அந்த நூல் அமைந்திருந்தது. அதிலிருந்த கவிதைகள் என்னைப் பிரமிக்க வைத்தன.
என் கணவர் பன்னிரண்டு நூல்கள் எழுதியுள்ளார். வீட்டில் சிறிய அளவிலான நூலகமும் வைத்துள்ளார். அதிலிருந்து அவ்வப்போது சில நூல்களை எடுத்துப் படிக்கத் தொடங்கினேன். வைரமுத்து சிறுகதைகள், வீடும் வீடு சார்ந்தும், நிற்க கற்க, மகனுக்கு அப்பா என்றும் பெயர் என்பது போன்ற நூல்களை அப்படித்தான் வாசிக்கத் தொடங்கினேன்.
‘நம் கல்வி நம் உரிமை’ என்கிற நூலில் எழுத்தாளர் ஜெயமோகன் தன் மகன் குறித்து எழுதியிருந்த கட்டுரையைப் படித்துக் கொண்டிருக்கையில் என்னை அறியாமல் கண்ணீர் வழியத் தொடங்கியது. அன்றுதான் எழுத்து என்னவெல்லாம் செய்யும் என்பதை உணர்ந்துகொண்டேன்.
எங்கள் வீட்டுக்கு அருகில் இருந்த எண்பது வயது முதியவர் ஒருவர் தன் மனைவியை இழந்த துயரத்தை ஒருநாள் பகிர்ந்து கொண்டபோது மனம் கனக்கத் தொடங்கியது. அப்போது என் கணவர், அந்த மனநிலையில் இருந்து என்னை மாற்றும் பொருட்டுக் கவிஞர் பழ.புகழேந்தி எழுதிய, ‘உதிரிலையில் மீந்த பச்சையம்’ என்கிற கவிதை நூலை வாசிக்கக் கொடுத்தார். அந்த நூல் முதிய தம்பதியரின் காதல் வாழ்க்கையைப் பேசுகிற அற்புதமான நூல். என் கணவர் ஒவ்வொரு நூல் எழுதும்போதும் என்னிடம் அணிந்துரை கேட்பார்.
எனக்குத் தயக்கமாக இருக்கும். மறுத்து விடுவேன். பன்னிரண்டாவது நூலான, ‘மகள் கையளித்த மயிற்பீலிகள்’ என்கிற நூலுக்கும் அணிந்துரை கேட்டார். இந்நூல் தந்தை - மகளுக்கு இடையிலான அன்பைப் பேசுகிற நூல். கவிதைகளைப் படிக்கையில் எனக்கு என் தந்தையின் நினைவு வந்தது. எனவே, அணிந்துரை எழுத ஒப்புக்கொண்டு எழுதிக் கொடுத்தேன். கவிதை நூலை வாசித்த பலரும் என் அணிந்துரையையும் வெகுவாகப் பாராட்டிப் பேசினர்.
இது, எனக்குப் புதிய நம்பிக்கையையும் உற்சாகத்தையும் வழங்கியது. பாடநூல் தாண்டி வேறு நூல்களை வாசிக்காத நான், இன்றைக்கு நல்ல நூல்களைத் தேடித் தேடி வாசிக்கத் தொடங்கியிருக்கிறேன். வாசிப்பு என்னையும் எழுத வைத்திருக்கிறது. சாவிக்கொத்தும் கைக் குட்டையும் ஹேர்பின்களும் மட்டுமே இருந்த என் கைப்பைக்குள் தற்போது புத்தகங்களும் இடம்பெறத் தொடங்கிவிட்டன.
- அ. இராஜலெட்சுமி, தேவகோட்டை.