பெண் இன்று

பாராட்டுப் பெற்றுத்தந்த படக்கதை | வாசிப்பை நேசிப்போம்

Guest Author

நான் மூன்றாம் வகுப்பு படித்தபோதுதான் எனக்குத் தமிழ் சரளமாக வாசிக்கத் தெரிந்தது. அம்மா நிறைய புத்தகங்கள் வாசிப்பார். அவரைப் பார்த்து எனக்கும் வாசிக்கும் ஆர்வம் வந்தது. பக்கத்து வீட்டில் வாங்கும் ஆனந்த விகடன், எங்கள் வீட்டில் வாங்கும் குமுதம், தோழிகளின் வீட்டில் வாங்கும் காமிக்ஸ் என எல்லாப் புத்தகங்களையும் வாசிப்பேன்.

கோடை விடுமுறையில் சுழற்சி முறையில் புத்தகங்கள் வாசிக்க அம்மா பணம் கட்டி ஏற்பாடு செய்வார். அன்றன்று வரும் வாரப் பத்திரிகைகளைக் காலையில் தருவார்கள். அடுத்த நாள் வேறு புத்தகம் தருவார்கள். ஆனால், புத்தகம் நமக்குச் சொந்தமாகாது.

தற்போது நான் ஒரு தொடக்கப் பள்ளி ஆசிரியை. மூன்றாம் வகுப்பாக இருந்தாலும் மாணவியருக்கு வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிப்பேன். ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் வந்த ‘மகி, மதி’ படக்கதைகளை வெட்டி வகுப்பறையில் ஒட்டி வைப்பேன். உணவு இடைவேளையின்போது அதை மாணவியர் ஆர்வமாகப் படிப்பார்கள்.

ஒருமுறை கல்வி அதிகாரி திடீரென ஆய்வுக்கு வந்தபோது என் வகுப்பு மாணவியர் அவர்கள் படித்த படக்கதையை நடித்துக் காட்டி அதற்குரிய திருக்குறளையும் கூறினர். அந்த அதிகாரி மிகவும் மகிழ்ச்சியடைந்தார். வகுப்பைப் பார்வையிட்டுப் பாராட்டினார். - ந. லிட்டில் ப்ளவர் பாலா, சென்னை - 16.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT