படங்கள்: மு.லெட்சுமி அருண்

 
பெண் இன்று

முத்துநகர் பெண்களைக் கவர்ந்த முத்தான திருவிழா | மகளிர் திருவிழா

ஜெ.ராய்சன்

‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் ‘பெண் இன்று’ சார்பில் தூத்துக் குடியில் முதல் முறையாக நடைபெற்ற மகளிர் திருவிழா வாசகியர் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலையில் அமைந்துள்ள காமராஜ் கல்லூரியில் மார்ச் 1 அன்று நடைபெற்ற இந்த விழாவில் வாசகியர் தங்கள் வரவால் அரங்கத்தை நிறைத்தனர்.

தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் எஸ்.பிரியங்கா பேசுகையில், “பெண்கள் வேலைக்குப் போகும் இடங்களில் பல பிரச்சினைகளைச் சந்திக்கின்றனர். குறிப்பாகப் பாலியல் தொந்தரவுகள். வேலைக்குச் செல்லும் இடத்தில் ஏதாவது தொந்தரவு இருந்தால், அதை அவமானமாக நினைத்து மௌனமாக இருக்கக் கூடாது. உடனே புகார் அளிக்க முன்வரவேண்டும். எதற்கும் அச்சப்படக் கூடாது.

எந்தவிதப் பிரச்சினை என்றாலும் பெண் குழந்தைகளுக்குப் பெற்றோர் துணைநிற்க வேண்டும். பெண்களுக்குக் குடும்பம் துணையாக இருந்தால்தான் வாழ்க்கையில் அவர்கள் முன்னேற முடியும்” என்றார். காமராஜ் கல்லூரி முதல்வர் முனைவர் கே.பானுமதி, மகளிர் தொழில் முனைவோர் நலச்சங்கத் தலைவர் கிருஷ்ணா ராதாகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றுப் பேசினர்.

          

புள்ளி விவரங்களோடு பெண் கல்வி குறித்துப் பேசினார் காமராஜ் கல்லூரி முதல்வர் முனைவர் கே.பானுமதி. “பெண்களுக்கு அணிகலன்களோ ஆடைகளோ அழகல்ல. தன்னம்பிக்கைதான் அழகு. ஆண்களையும் குடும்பத்தையும் சமுதாயத்தையும் சார்ந்து இருக்கக்கூடியவர்கள் அல்ல பெண்கள். எல்லாருடனும் சேர்ந்து இருக்கக்கூடியவர்கள். யாருடனும் நம்மை ஒப்பிடக் கூடாது. நீங்கள் உங்களைப் போலவே இருங்கள். சவால்களைத் துணிச்சலோடு எதிர்கொண்டு வெற்றிபெற வேண்டும்” என்றார்.

மகளிர் தொழில் முனைவோர் நலச்சங்கத் தலைவர் கிருஷ்ணா ராதாகிருஷ்ணன், பெண்களுக்கான சுயதொழில் வாய்ப்புகள் குறித்துப் பேசினார்.

“நலிவடைந்த பெண்களுக்கு மனவலிமை அளித்து, கைத்தொழில்களைக் கற்றுக் கொடுக்கிறோம். பெண்கள் எல்லா இடங்களிலும் சிறப்புப் பெற்று விளங்க கையில் பொருளாதாரம் வேண்டும். அந்தப் பொருளாதாரத்தை ஈட்ட நேரம் தவறாமை முக்கியம். உங்கள் நேரத்தைச் சரியாக மேலாண்மை செய்யக் கற்றுக்கொண்டால் வாழ்க்கையில் அடுத்த கட்டத்துக்கு எளிதாகச் சென்றுவிடலாம்” என்றார்.

எஸ்.பிரியங்கா, கே.பானுமதி, கிருஷ்ணா ராதாகிருஷ்ணன்

களைகட்டிய கலைநிகழ்ச்சிகள்: நிகழ்ச்சியின் தொடக்கமாக தூத்துக்குடி ஜனா நாட்டியப்பள்ளி மாணவிகள் அரங்கேற்றிய பரதநாட்டியம் வாசகியரை வெகுவாகக் கவர்ந்தது. தொடர்ந்து ‘தமிழன்டா கலைக்குழு’வினர் நடத்தியபொய்க்கால் குதிரை ஆட்டம், கட்டைக்கால் ஆட்டம், பறை யாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம் போன்ற நாட்டுப்புற நடனங்கள் அரங்கையே அதிர வைத்தன.

தொடர்ந்து வாசகியருக்கு பலூன் உடைத்தல், கயிறு இழுத்தல், ஃபேஷன் ஷோ, மைம் எனப்படும் மௌன நாடகம் என உற்சாகமூட்டும் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் இளம்பெண்கள் முதல் மூதாட்டிகள் வரை அனைவரும் உற்சாகமாகப் பங்கேற்றுப் பரிசுகளை அள்ளினர். போட்டிகளில் பங்கேற்றவர்கள் மட்டுமன்றி பங்கேற்ற அனைவருக்குமே பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியைச் சின்னத்திரை தொகுப்பாளினி தேவிகிருபா தனக்கே உரிய பாணியில் கலகலப்பாகத் தொகுத்து வழங்கி வாசகியரின் அன்பையும் வாழ்த்தையும் பெற்றார்.

தூத்துக்குடி பெண்களுக்கு மிகப்பெரிய விருந்தாக இவ்விழா அமைந்தது. நாள் முழுக்கத் தங்களது வேலைப்பளு, கவலைகளை மறந்து உற்சாகமாகக் கொண்டாடினர். ‘இந்து தமிழ் திசை’ மகளிர் திருவிழாவை தூத்துக்குடியில் ஆண்டுதோறும் நடத்த வேண்டும் என்று அன்புக் கோரிக்கையும் விடுத்தனர்.

உதயம் - இட்லி அரிசி, பருப்பு வகைகள் நிறுவனத்துடன் இணைந்து ‘இந்து தமிழ் திசை’ இந்த விழாவை நடத்தியது. லலிதா ஜூவல்லரி, பிளாசம் அக்ரிடெக், சத்யா ஏஜென்சீஸ், கறி லீப் - கிச்சன்வேர், ராஜேஸ் எலெக்ட்ரிக்கல்ஸ் மற்றும் வென்யூ பார்ட்னர் காமராஜ் கல்லூரி, டிவி பார்ட்னர் கிங்ஸ் டிவி உள்ளிட்ட நிறுவனங்களும் நிகழ்ச்சியை இணைந்து வழங்கின. வாசகியர் அனைவருக்கும் மதிய உணவும் நிச்சயப் பரிசும் வழங்கப்பட்டன.

SCROLL FOR NEXT