கேரளத்தின் காந்தபுரம் சமஸ்தா இஸ்லாமிய அமைப்பின் தலைவர் சுலைமான் முஸ்லியார், செயலாளர் அபூபக்கர் முஸ்லியார் இருவரும் இணைந்து அண்மையில் வெளியிட்ட அறிக்கையில், ‘பெண்கள் பொதுவெளிக்கு வருவதோ ஆண்களோடு மேடையைப் பகிர்ந்துகொள்வதோ கூடாது’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதற்குப் பொதுவெளியிலும் சமூக வலைத்தளங்களிலும் கடும் கண்டனங்கள் எழுந்தன. இதற்கிடையே ஆகஸ்ட் 30 அன்று கொச்சியில் நடைபெற்ற இஸ்லாமிய மாநாட்டில் பேசிய அபூபக்கர் முஸ்லியார், “பெண்கள் பொதுவெளிக்கு வருவது பெரும் பேரழிவுகளை ஏற்படுத்தும்.
அதைத் தடுப்பதற்காகத்தான் இஸ்லாமிய மதம் அவர்களுக்கு ‘பர்தா’வைப் பரிந்துரைக்கிறது. பெண்கள் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும் எனவும் பொதுவெளிக்கு வரக் கூடாது எனவும் புனித குரானில் கூறப்பட்டுள்ளது.
இஸ்லாமிய அறிஞர்களும் ‘சமஸ்தா’ அமைப்பின் தலைவர்களும் கடந்த நூறு ஆண்டுகளாக நமக்கு இதைத்தான் கற்பித்து வருகின்றனர். பெண்கள் தங்கள் பெருமையையும் கண்ணியத்தையும் காக்க வேண்டும் என்பதற்காகத்தான் இது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்” என்று பேசினார்.
இதுவும் பலத்த கண்டனங்களை எழுப்பியது. அபூபக்கர் முஸ்லியாரின் பேச்சைக் கண்டித்த கேரள முதல்வர் சதீசன், “பெண்களை வீட்டுக்குள்ளேயே அடைத்து வைக்க வேண்டும் என்று இஸ்லாம் கூறவில்லை. இதுபோன்ற கருத்துகளைத் தெரிவிக்க இது 19ஆம் நூற்றாண்டும் அல்ல. சமூகத்தின் மைய நீரோட்டத்தில் ஆண்களோடு பெண்களும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பதுதான் அரசின் நிலைப்பாடு” என்றார்.
பெண்களுக்கு எதிரான பிற்போக்குக் கருத்துகளும் சிந்தனைகளும் எழும்போதெல்லாம் பொதுச் சமூகம் அதற்கு எதிராக வலுவான குரல்களை எழுப்புவதன் மூலமே அவற்றைக் கட்டுப்படுத்த முடியும்.