

‘போதைக்கு அடிமையா நீங்கள்?
எதிர்காலத்தின் சிற்பிகள் தாங்கள்...
மயக்கத்தின் வாயிலா நீங்கள்?
மரணத்தின் பிடியிலே நீங்க...
மறுவாழ்வு தர்றோம் நாங்க...
இளையோர் கூட்டம் தாங்க...
எதிர்காலத்தைச் செதுக்குவோம் வாங்க...
எதிர்காலத்தை செதுக்குவோம் வாங்க...’
- அரசுப் பள்ளி மாணவிகள் நரம்பு புடைக்கக் கணீரென்று எழுப்பும் குரல், மேற்குத் தொடர்ச்சி மலையோரக் கிராமங்களில் வெளிச்சம் பாய்ச்சுகிறது!
கோவை அருகே கல்வீரம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியின் சமூக அறிவியல் ஆசிரியை வை.சசிகலாவின் முன்னெடுப்பால் நிகழ்ந்திருக்கும் மாற்றம் இது. வீதிநாடகத்துக்குக் கதை, காட்சியமைப்பு, பாடல்கள் எழுதி, கருத்தாலும் காட்சியாலும் கவனம் ஈர்க்கிறார் சசிகலா. தமிழக அளவில் அரசுப் பள்ளிகளுக்கு இடையே நடைபெறும் கலைத்திருவிழாவில், மாணவர்களை வீதிநாடகங்களை அரங்கேற்ற வைத்து மாநில அளவில் தொடர் வெற்றியாளராகவும் மிளிர்கிறார்!
சசிகலா, 1999இல் பெரம்பலூர் அருகே பசும்பலூர் கிராமத்தில் இடைநிலை அரசுப் பள்ளி ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். தொடர்ந்து திருப்பூர் இடுவம்பாளையம், கோவை மாவட்டத்தில் தேவராயபுரம் எனப் பணியாற்றினார்.