வீட்டு வேலைகளைப் பகிர்ந்துகொள்ளும் ஆண்களின் அனுபவங்களைத் தாங்கிய ‘ஆண்கள் ஸ்பெஷல்’ பகுதியைத் தொடர்ந்து வாசித்துவருகிறேன். காலங்காலமாகப் பெண்கள் மட்டுமே செய்துவந்த வீட்டு வேலைகளில் ஆண்களும் முன்வந்து பங்கெடுப்பது, சமைப்பது என ஓய்வுபெற்ற, நடுத்தர வயது ஆண்கள் பகிரும் அனுபவங்கள் இளம் தலைமுறையினரான எங்களுக்குக் கடத்தப்படுவதோடு நல்ல மாற்றத்தையும் ஏற்படுத்துகின்றன.
சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ திரைப்படம், பெண்கள் தலைமுறை தலைமுறையாக எதிர்கொள்ளும் வீட்டு உழைப்பு சார்ந்த சிக்கல்களைப் பதிவுசெய்திருந்தது நினைவுக்கு வருகிறது. அதேபோல், தமிழகப் பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டிருக்கும் மூன்றாம் வகுப்பு ஆங்கிலப் பாடப்புத்தகத்தில், குடும்பத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வேலையைச் செய்வது போலவும், தந்தை பாத்திரம் கழுவுவது போலவும் இடம்பெற்றிருப்பது கவனிக்கத்தக்கது.
அதன் கீழ், ‘யார் பாத்திரம் தேய்த்தாலும் அது சுத்தமாகும் / பிரகாசிக்கும்’ என்கிற பொருளில் இடம்பெற்றிருக்கும் வாசகமும் அருமை. வீட்டு வேலை என்பது பெண்களுக்கானது மட்டுமல்ல என்கிற எண்ணத்தைச் சிறு வயதிலேயே குழந்தைகளிடம் விதைப்பது வரவேற்கத்தக்கது.
மற்றொரு பகுதியில் குடும்ப உறுப்பினர்களைப் பட்டியலிடும் வகையில், ஒரு குழந்தை தன் வீட்டில் அம்மா, மகள், செல்லப்பிராணிகள் இருப்பதாகக் குறிப்பிடுவது போன்று அமைக்கப்பட்டுள்ளது. அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி என்கிற வழக்கமான அமைப்பு மட்டுமே குடும்பம் அல்ல; ஒற்றைப் பெற்றோர் நடத்தும் குடும்பமும் குடும்பம்தான் என்கிற உள்ளடக்கிய பார்வையை இது இயல்பாகக் குழந்தைகளிடம் கொண்டுசெல்கிறது. இத்தகைய சிறிய மாற்றங்கள், ஊடக முன்னெடுப்புகள் இளம் வயதிலேயே சிந்தனையில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தி, சமத்துவமான சமூகத்தை நோக்கிய பயணத்துக்கு அடித்தளமாக அமையும்.
- அல்மாஸ் அகமது.