பெண் இன்று

அன்னை தெரசாவும் நானும் | புதிய வானம் புதிய பூமி

Guest Author

பத்து வருடங்களுக்கு முன் மதுரையிலிருந்து மைத்துனர் குடும்பத்தினர் திருநெல்வேலி வந்து இரவு எங்களுடன் தங்கிவிட்டு மறுநாள் கன்னியாகுமரிக்கு ஒருநாள் சுற்றுலா செல்வதாகத் தகவல் வந்தது. ‘கன்னியாகுமரியில் மெழுகுச் சிலைகள் தத்ரூபமாக இருக்குமாம்’ என என் கணவரிடம் சொன்னேன். என் ஆசையைப் புரிந்துகொண்டவர் “சரி... நாமும் போவோம்” என்றார்.

அந்த நாளும் வந்தது. அதிகாலையிலேயே கன்னியாகுமரிக்குச் சென்றோம். கண்காட்சியில் ஓரிடத்தில் ‘7D ஷோ’ என்கிற அறிவிப்பைப் பார்த்ததும் உள்ளே நுழைந் தோம். காட்சிகள் அபாரம். பல முறை திரையினுள் நுழைந்து வெளியேறினோம். திரையில் மழை பெய்தபோது பார்வை யாளர்களும் நனைந்தோம். அப்படி ஓர் ஏற்பாடு!

பிரமிப்பு விலகாமல், மெழுகுச்சிலை அரங்குக்குள் நுழைந்தோம். அம்மாடி.. விரிந்த விழிகள் இணையவில்லை. காந்தி தாத்தா, அன்னை தெரசா, மைக்கேல் ஜாக்சன் என உலகப் பிரபலங்கள் ஒரே இடத்தில் தத்ரூபமாக இருந்தனர். பிரபலங்களுடன் நின்று படம் எடுத்துக்கொண்டேன்.அடுத்து ஓர் அறை வாசலில் ‘3D’ என்கிற அறிவிப்பு. உள்ளே போனால் யாருமே இல்லை.

வெளியே வந்து கேட்டால், சுவர்களிலும் தரையிலும் வரைந்துள்ள படங்கள் அருகில் நின்று போட்டோ எடுத்தால் உண்மை அதில் பிரதிபலிக்கும் என்றார்கள். திரும்பிச் சென்று சுவரில் வரையப்பட்டிருந்த யானையின் அருகில் நின்று படம் எடுத்துப் பார்த்தேன். யானை என்னை நீர் தெளித்து ஆசிர்வாதம் செய்கிறது! ரசித்து ரசித்து நிறைய இடங்களில் படங்களாக எடுத்துக் குவித்துத் திரும்பினோம்.

ஊருக்கு வந்து எங்கள் குடியிருப்பு வாண்டுவிடம், “நான் அந்தக் காலத்துல அன்னை தெரசாவுடன் நின்று போட்டோ எடுத்துக்கிட்டேன் பாருடா” என்று பெருமையுடன் காட்டினேன். “பாட்டி, இது நிஜ போட்டோ இல்லை. உங்க கையில போன் இருக்கே” என்று கேட்டு வியக்கவைத்தான். என் கையில் கைபேசி இருந்ததை அப்போதுதான் கவனித்தேன். இனி படம் எடுக்கும்போது அலர்ட்டாக இருக்க வேண்டும். இப்போது கன்னியாகுமரியில் கண்ணாடிப் பாலம் உள்பட மனதுக்கு மகிழ்ச்சி தரும் நிறைய இடங்கள் சுற்றுலாப் பட்டியலில் இணைந்திருக்கின்றன.

- என்.கோமதி, பெருமாள்புரம், நெல்லை.

SCROLL FOR NEXT