சிறு வயதில் நாங்கள் வசித்தது திருவாரூர். எங்கள் பாட்டி 20 கி.மீ தள்ளி மடப்புரத்தில் வசித்தார். எல்லாப் பிள்ளைகளைப் போலவே நாங்களும் கோடை விடுமுறை தொடங்கியதும் பாட்டி வீட்டுக்குக் புறப்பட்டுவிடுவோம். எங்கள் அம்மாவழித் தாத்தா பிரபல வக்கீல். மிகப்பெரிய வீடு. வாசலில் பெரிய பந்தல். படிகள் ஏறினால் கம்பி மறைவோடு கூடிய திண்ணை. வழக்கு தொடர்பாகப் பேச வருபவர்கள் உட்கார்ந்து பேச ஆறேழு நாற்காலிகள்.
காலை உணவு பெரும்பாலும் தாத்தாவோடுதான். பெரியம்மா, சித்தி பிள்ளைகளோடு சிரித்துப் பேசி சாப்பிட்டுவிட்டு தாயம், பல்லாங்குழி விளையாடுவோம். பிறகு கொல்லையில் இருக்கும் பெரிய கிணற்றுக்குச் செல்வோம். மர நிழலில் அமைந்திருக்கும் அந்தக் கிணற்றில் தண்ணீர் எப்போதும் சில்லென்று இருக்கும். அங்கிருக்கும் குளியல் தொட்டியில் ஆட்டம் போடுவோம்.
பெரிய கொல்லை நிறைய மரங்கள் இருப்பதால் வெயிலே தெரியாது. எங்களோடு அக்கம் பக்கத்து வீட்டுக் குழந்தைகளும் சேர்ந்துகொள்வார்கள். கதை, பாட்டு, நாடகம் என அன்றைய பொழுது களைகட்டும். வீட்டில் நிறைய மாடுகள் இருந்ததால் பாலுக்குப் பஞ்சமே இருக்காது. தரமான பாலில் செய்வதால் குலாப்ஜாமுன் தனிச்சுவையோடு இருக்கும். உரலில் இடித்த மாவில் பாட்டி கையால் செய்யும் தட்டையும் முறுக்கும் எங்கள் மாலைநேரத் தின்பண்டம்.
எப்போது சூரியன் மறையும் எனக் காத்திருந்து கிளித்தட்டு, பாண்டி, நொண்டியாட்டம், கல்லா மண்ணா, கயிறு விளையாட்டு இவற்றோடு கிட்டிப்புள், பம்பரம், கோலி, பச்சைக் குதிரை தாண்டுதல் என இருட்டும்வரை விளையாடுவோம். இப்போதுள்ள பிள்ளைகளுக்கு இந்த விளையாட்டுகளின் பெயர்கள்கூடத் தெரியாது.
எங்களது உச்சபட்ச மகிழ்ச்சியே இரவுச் சாப்பாடுதான். பாட்டி வீட்டு நடுமுற்றம் மிகப் பெரியது. எங்கள் பெரியம்மா ஒரு பெரிய சட்டியில் சோறு, குழம்பு, தொட்டுக்கொள்ளும் காய்கறிகள் அனைத்தையும் ஒன்றாகப் போட்டு பிசைந்து ஆளுக்கொரு உருண்டையாக எங்களுக்குக் கொடுப்பார். ஆஹா.. 60 ஆண்டுகளுக்கு முந்தைய அந்த ருசி இப்போது நினைத்தாலும் நாவில் இனிக்கிறது! நாங்கள் அனுபவித்தவற்றை இப்போதுள்ள பிள்ளைகள் அனுபவிக்க முடியவில்லையே என்கிற வருத்தமும் ஏற்படுகிறது.
- பார்வதி கோவிந்தராஜ், நாகப்பட்டினம்.