பெண் இன்று

மகள் கற்கும் பாடம் | ஆண்கள் ஸ்பெஷல்

Guest Author

வீட்டுவேலை பெண்களுக்கானது என்கிற எண்ணம் நம் சமூகத்தில் இன்னும் சில இடங்களில் நிலவுகிறது. ஆனால், ஒரு குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்றால் வீட்டுவேலை என்பது குடும்பத்தில் உள்ள அனைவரின் பொறுப்பாக இருக்க வேண்டும். நான் ஒரு தனியார் நிறுவனத்தில் திட்ட மேலாளராகப் பணியாற்றுகிறேன்.

வேலை, பொறுப்புகள் அதிகமாக இருந்தாலும், வீட்டுக்கு வந்த பிறகு என்னால் முடிந்த அளவு வீட்டுவேலையில் பங்கேற்க முயல்கிறேன். பாத்திரங்களை அடுக்கி வைப்பது, வீட்டைச் சுத்தப்படுத்துவது, காய்கறிகளை நறுக்கிக் கொடுப்பது, மளிகைப் பொருள்கள் வாங்குவது போன்ற சிறிய வேலைகளில் இருந்து என் பங்களிப்பு தொடங்குகிறது.

என் மனைவி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியாகப் பணிபுரிகிறார். அவருடைய பணியும் நேரம் பார்க்க இயலாத சேவை. சில நாள்களில் அவர் மிகவும் களைப்புடன் வீட்டுக்கு வருவார். அப்போதெல்லாம் சமையலில் உதவுவது அல்லது வீட்டின் மற்ற வேலைகளைக் கவனிப்பதன் மூலம், அவரது சுமையைக் குறைக்க முயல்வேன். அதை ஓர் உதவியாக நான் நினைப்பதில்லை; குடும்பத்தின் மீதான என் பொறுப்புதானே.

நாங்கள் இருவரும் இணைந்து வீட்டு வேலை செய்வதை எங்கள் மகள் பார்க்கிறாள். இதனால், ஆண்கள் செய்யும் வேலை, பெண்கள் செய்யும் வேலை என்கிற பிரிவினை இல்லாமல், குடும்பத்தில் அனைவரும் வேலையைப் பகிர்ந்து செய்ய வேண்டும் என்கிற எண்ணம் அவளுக்குள் இயல்பாக உருவாகும் என்று நம்புகிறேன்.

வீட்டுவேலை செய்வதால் இன்னொரு மாற்றத்தையும் நான் உணர்ந்தேன். அலுவலகப் பணியின் அழுத்தத்தில் இருந்து மனம் சற்று விடுபடுகிறது. குடும்பத்துடன் செலவிடும் நேரம் அதிகரிக்கிறது. எங்கள் இருவருக்குமான புரிதலும் அன்பும் மேலும் வலுப்பெறுகின்றன. என் பெற்றோரும் எங்களுடன் வசிக் கிறார்கள்.

நான் அலுவலகத்துக்குச் சென்றிருக்கும் நேரத்தில், எங்கள் மகளை அன்புடன் கவனித்துக்கொள்வதில் அவர்கள் மிகப் பெரிய பங்காற்றுகிறார்கள். அவர்களுடைய ஆதரவால்தான் நானும் என் மனைவியும் எங்கள் பணியில் முழுக் கவனத்துடன் ஈடுபட முடிகிறது. குடும்பம் என்பது கணவன்-மனைவி மட்டுமல்ல; தலைமுறைகள் இணைந்து ஒருவருக்கு அடுத்தவர் துணை நிற்கும் இடம் என்பதை ஒவ்வொரு நாளும் உணர்கிறேன்.

- வேல்முருகன், மழையூர் கிராமம், ராணிப்பேட்டை.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT