பெண் இன்று

ஒரு கரண்டியைக் கையில் எடுத்தேன்! | ஆண்கள் ஸ்பெஷல்

Guest Author

தென்கொரியாவுக்குக் குடும்பத்துடன் வந்திறங்கி ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆய்வாளரும் பேராசிரியருமான நான், நேரம் கடந்தும் பணியிடத்திலேயே இருக்கவேண்டிய நிலை காரணமாக எந்தவோர் உதவியையும் இந்தியாவில் இருந்தபோது செய்ய முடியவில்லை. பெரியாரியவாதியான எனக்கு அது மிகவும் அவமானமாகவே தோன்றியது. சமையலறைக்குப் பூட்டு போடும் மாற்றத்தை வீட்டிலேயே தொடங்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பமாக இருந்தது.

சமையலுக்கென ஆளைப் பணியமர்த்தலாம் என்பது மனைவிக்கு ஒவ்வாமையாகவே இருந்ததால், காலம் அப்படியே கடந்துபோய்விட்டது. வெளி உணவின் மீதான நம்பகத்தன்மையற்ற நிலை, வீட்டுச் சமையலறைக்குப் பாரமாக இருந்தது. என்னால் அதிகபட்சமாகப் பாத்திரம் கழுவிக் கொடுக்கமுடிந்தது, அதுவும் சில நாள்களுக்கு மட்டும்.

தென்கொரியாவில் வேலை அழுத்தமோ இரவுவரை பணியிடத்தில் இருக்கவேண்டிய நிர்ப்பந்தமோ இல்லை. ஓய்வு நேரம் அதிகமாகவே கிடைத்ததால் சமையலறை வேலைகளைப் பகிர்ந்துகொள்ள முடிகிறது. பூட்டுப் போடும் திருவிழாவை இங்கே நிகழ்த்தலாமே என்கிற எண்ணத்தில் கொரிய உணவை உண்பது என்கிற முடிவுக்கு வந்தோம். கொரியர்கள் பெரும்பாலும் அப்படித்தான்.

பெரும்பாலான பெண்கள் பணிக்குச் செல்வதால் இங்கே ‘சமூக உணவகங்கள்’ உண்டு. பெண்களின் உரிமைகள் நிலைநாட்டப்படக் காரணம் இந்தச் சமூக உணவகங்கள்தான். மிகவும் தரமான, சத்தான உணவு கிடைப்பதால், அது சாத்தியமாகி இருக்கிறது.

தென்கொரியப் பள்ளிகளிலும் மதிய, மாலை (இரவு உணவை ஆறு மணிக்கே முடித்துக்கொள்வார்கள்) உணவை விலையேதுமின்றிக் கொடுத்துவிடுவார்கள். எந்தெந்த உணவு, எந்தெந்த வேளைகளில், நாள்களில் கொடுக்கப்படுகின்றன, அவற்றில் எவ்வளவு சத்துகள் இருக்கின்றன, அவை தவிர்த்து வீட்டில் என்ன மாதிரியான உணவை உட்கொள்ள வேண்டும் என்பதையெல்லாம் பள்ளியிலிருந்து கைபேசிவழிச் செய்தியாக ஒவ்வொரு பெற்றோருக்கும் அனுப்பிடுவார்கள்.

பூட்டுப் போடும் முயற்சிக்கு ஓரளவு வெற்றி கிடைத்தாலும், அந்த நாக்கு இருக்கிறதே, அது நம்மூர் சாப்பாட்டுக்கு ஏங்க ஆரம்பித்தது. குறைந்தது மாலையில் ஒரு நொறுக்குத்தீனியாவது கிடைக்காதா எனச் சஞ்சலப்பட்டுக்கொண்டே இருந்தது. இப்போது சமையலறை என் கைக்கு வந்தது. இப்போதெல்லாம் வாரத்துக்கு ஒரு முறை ஏதேனும் ஒரு நொறுக்குத்தீனியைச் செய்து கொடுக்கிறேன்.

மனைவியும் குழந்தைகளும் விரும்பிச் சாப்பிடுகிறார்கள். பெரும்பாலும் தேன்குழல் முறுக்கு, அரிசி முறுக்கு, கார சேவு, மிக்சர் என்று செய்வதுண்டு. ஆண்டுக்கு ஒருமுறை ஊருக்குச் சென்று வரும்போது முறுக்குடன் முறுக்கு மாவையும் எடுத்துவந்துவிடுகிறோம். முறுக்கை ஒரு வாரத்துக்குதான் வைத்துக்கொள்ள முடியும். ஆனால், முறுக்கு மாவைப் பக்குவமாக அரைத்தால் பல மாதங்கள் வைத்துக்கொள்ளலாம். அப்படித்தான் முறுக்கு செய்துகொடுக்கிறேன்.

அன்பைப் பெருக்கும் முறுக்கு

அரிசி முறுக்கு செய்ய, பொட்டுக்கடலை மாவையும் அரிசி மாவையும் மூன்றுக்கு நான்கு என்கிற விகிதத்தில் எடுத்துக்கொள்ளுங்கள். அதில் சிறிது மிளகாய்த் தூள், உப்பு, வெண்ணெய், சீரகம் போட்டுக் கலந்து தண்ணீர்விட்டுப் பிசைந்து முள் முறுக்கு அச்சில் போட்டுப் பிழிந்தால் அவ்வளவு சுவையாக இருக்கும். மிளகாய்த் தூளுக்குப் பதில் சிறிது தேங்காய்ப் பால், சர்க்கரை போட்டுப் பிழிந்தால் மகிழம்பூ முறுக்கு தயார்.

கார சேவு செய்வது மிகவும் எளிது. கடலைமாவில், உப்பு, மிளகுத் தூள், வெண்ணெய், ஓமம் சேர்த்துத் தண்ணீர்விட்டுப் பிசைந்து பிழிய வேண்டியதுதான். பொதுவாகச் சாரணிக்கரண்டியில் (சல்லிக்கரண்டி) பிழிவார்கள். நான் முறுக்கு அச்சில் போட்டுப் பிழிந்துவிடுகிறேன். மிளகுத் தூள் இன்றி இதே சேர்மானத்தில் இன்னும் தளர்வாகப் பிசைந்து, சிறு துளைகள் இருக்கும் அச்சில் போட்டுப் பிழிந்தால் ஓமப்பொடி தயாராகிவிடும்.

அந்த ஓமப்பொடியுடன், அவல், பொட்டுக்கடலை, நிலக்கடலை போன்றவற்றைப் பொரித்துச் சேர்த்து, பின் அதே கடலைமாவு கரைசலில் இன்னும் தண்ணீர் ஊற்றிக் குழம்பு பதத்துக்குத் தளர்வாக்கி, சாரணிக் கரண்டியில் ஊற்றிப் பொரித்தெடுத்த முத்து காராபூந்தியையும் அதில் சேர்த்துச் சிறிது மஞ்சள் பொடி, சீரகப் பொடி, மிளகாய்ப் பொடி, உப்பு சேர்த்துக் குலுக்கி எடுத்தால் மிக்சர். இன்னும் பல வகையான பலகாரங்களையும் முயன்று பார்க்கப்போகிறேன். நண்பர்களே, நீங்களும் செய்துபாருங்கள். பலகாரத்தின் சுவையில் காதல் பெருகட்டும்!- சக்திவேல் காந்தி, தென் கொரியா.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT