

மனிதர்கள், நாம் வகுத்து வைத்திருக்கும் மதிப்பீட்டு வரையறைகளை வெகு எளிதாக மீறிவிடக் கூடியவர்கள் என்பதை ஆ.மாதவன் தனது பல கதைகளில் வெளிப்படுத்தியுள்ளார். மனித மனத்தின் இருண்ட பக்கங்களை ஆழமாக எழுதிய அவரது முக்கியமான கதைகளுள் ஒன்று ‘ஆனைச்சந்தம்’.
உயர்வகுப்பைச் சேர்ந்த தமயந்தி, தட்டச்சுப் பயிற்சி நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறாள். அங்கு தட்டச்சு செய்ய வரும் பாஸ்கர் என்ற தொழிற்சங்கவாதியின் பேச்சும் தோற்றமும் அவளுக்குப் பிடிக்கத் தொடங்குகின்றன.
ஒரு காலில் யானைக்கால் நோயால் அவதிப்படும் பாஸ்கரனின் குறையைக் கனிவோடு அணுகும் தமயந்தி, ‘நல்ல மனிதனிடம் இக்குறையைப் பெரிதாகப் பார்க்கத் தேவையில்லை’ என எண்ணுகிறாள். பெற்றோர் மற்றும் சுற்றத்தாரின் பலத்த எதிர்ப்பையும் மீறி இருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர். ஆனால், நேசித்துத் தொடங்கிய அந்த மணவாழ்க்கை, விரைவில் கசப்பாக மாறத் தொடங்குகிறது.
“உங்களுக்காகப் பெற்றோரையும் சுற்றத்தையும் துறந்து வந்தேன்; எனக்காக உங்கள் புலால் ருசியைக் கொஞ்சம் மாற்றிக் கொள்ளக் கூடாதா?” எனத் தமயந்தி கேட்கும்போது, “மனத்தைக் கவரும் பிணைப்புகள் வேறு, நாக்கின் ருசி வேறு” என்று கூறித் தனக்குப் பிடித்த பொரோட்டா-சிக்கன் ரோஸ்டைச் சாப்பிடுகிறான் பாஸ்கர். காய்கறிகளில் இந்த மணம் இருப்பதில்லை என்பது அவன் வாதம்.