மத்திய அரசு ஒய்வூதியரான எனக்கு 83 வயது. கூட்டுக் குடும்பம். மனைவிக்கு 78 வயது, மருமகளுக்கு 53. மாற்றுத் திறனாளியான என் மகனை 55 வயதுவரை கவனித்துக்கொண்டேன். கடந்த பிப்ரவரி மாதம் மாரடைப்பால் எங்களைவிட்டு அவர் பிரிந்துவிட்டார். காலையில் எழுந்து பேப்பர், பால் வாங்குவது, மோட்டர் போடுவது, சமையலுக்கு வேண்டிய காய்கறிகளைப் பக்குவமாகச் சமையலுக்கு ஏற்ற விதத்தில் நறுக்குவது, காய்கறிக் கடை, மளிகைக் கடை, ரேஷன் கடை என அனைத்துவிதமான கடைகளுக்குச் செல்வது எனச் சகலமும் என் வேலைதான்.
பட்டியல் இன்னும் முடியவில்லை. மனைவியை அவ்வப்போது கோயிலுக்கும் மருத்துவமனைக்கும் அழைத்துச் சென்று வருவது, ஒரே ஒரு அருமைப் பேத்தியைப் பள்ளிக்கும் மாலை நேர வகுப்புக்கும் அழைத்துச் சென்று வருவதும் அடியேனின் பணிதான். சுருக்கமாகச் சொன்னால் நான் ஓய்வூதியத்தை முழுதாகச் செலவிடும் ஊதியம் வாங்காத வீட்டுப் பணியாளர். வீட்டுக்காகப் பணி செய்து என் குடும்பத்துடன் அமைதியாகவும் மகிழ்ச்சி யாகவும் இருப்பதுதான் என் கடன்.
- ஆ. நாகராஜன், கடலூர்.