வீட்டைப் பராமரிப்பதும் நாட்டைப் பராமரிப்பதும் ஒன்றுதான் என்பது மணமாகிப் பல ஆண்டுகள் கழித்துத்தான் என் மூளைக்கு எட்டியது. முன்பெல்லாம் நேரத்துக்குத் தட்டில் உணவு வரவேண்டும். சிறிது தாமதமானாலும் மனைவியைச் சகட்டுமேனிக்குத் திட்டுவேன். உப்பு குறைந்தாலோ சுவை மாறுபட்டாலோ தட்டு பறக்கும். என் மனைவி மிகவும் பொறுமையாக அந்தத் தருணங்களைக் கையாண்டிருக்கிறார்.
இப்போது அந்த நிலை தலைகீழாக மாறிவிட்டது. சமைப்பது, குழந்தை பெறுவது, வீட்டை நிர்வகிப்பது போன்றவை எல்லாம் எளிது என்கிற நினைப்பில் இருந்த நான், என் மனைவியின் உடல்நலம் பாதிக்கப்பட்டபோது தடுமாறி நின்றேன்.
தனிக் குடித்தனம் வந்துவிட்டதால் செய்வதறியாமல் நின்றபோது, ‘ஆம்பளை சமையலறைக்குப் போகக் கூடாது’ என்று சொல்லி என்னுடைய தந்தை என்னை வளர்த்த முறை எவ்வளவு தவறு என்று தோன்றியது. உடல்நலம் குறைந்தபோதும், என் மனைவி சமைப்பதைப் பார்த்த என்னைக் குற்றவுணர்வு வாட்டியது.
அவர் நலமடைந்த பிறகு நானும் களத்தில் இறங்கினேன். காய்கறிகளை வெட்டுவது, வெங்காயத்தை நறுக்குவது, சோறு வடிப்பது எனப் பல வேலைகளில் நுழைந்து இன்று என் மனைவிக்குச் சமையலறையிலும் உறுதுணையாக நிற்கிறேன்.
‘சமையலறைகூட ஒரு பள்ளிக்கூடம்தான். அதைக் கற்றுக்கொள்’ என என் மகனுக்குக் கற்பித்து வளர்த்திருக்கிறேன். சமைப்பது ஒரு தொழில்நுட்பம். அதைப் பகிர்ந்து செய்வது ஒரு கலை நுட்பம். அதைச் சேர்ந்து உண்பது மகிழ்ச்சியின் உச்சம்.
- முல்லை.செல்வராசன், பெங்களூரு.