அது கரோனா காலம். அரசுப் பணியில் சுகாதாரத் துறையில் இருந்த மனைவிக்கு எங்கள் வீட்டில் இருந்து சுமார் ஐந்து கி.மீ. தொலைவில் உள்ள கிராமத்தில் வேலை. ஊரடங்கு நேரத்தில் பேருந்துகள் எதுவும் இல்லாததால் இருசக்கர வாகனத்தில் சீக்கிரமே வேலைக்குச் செல்லவேண்டிய நிலைமை. அப்போதுதான் சமையலில் ‘கூட மாட’ உதவத் தொடங்கினேன். முதலில் கடினமாக இருந்தது. போகப் போக ஆர்வம் தொற்றிக்கொள்ள பிறகு நானே தனியாகச் சமையலில் எல்லா வேலைகளையும் செய்யத் தொடங்கிவிட்டேன். அப்போது மனைவிக்கு அது பெரும் உதவியாக இருந்தது.
சமையலில் ஓரளவுக்குத் தேறிவிட்டேன். நான் செய்யும் உப்புமாவுக்குச் சில ரசிகக் குழந்தைளும் உண்டு என்பதில் எனக்குப் பெருமை. ‘சமையல் வேலையை ஏன் நீங்களே செய்கிறீர்கள்?’ என்று கேட்கும் சில நண்பர்களுக்கு, ‘ஏன் செய்யக் கூடாது?’ என்பதுதான் என் பதில். இவ்வளவு காலம் நமக்காகச் செய்தவர்களுக்கு சற்று ஓய்வு கொடுத்துவிட்டு, நாம் அதை அவர்களுக்குத் திருப்பிச் செய்வோமே!
- மு.மதிவாணன், அரூர்.