பெண் இன்று

ஆணுக்கும் தேவை பயிற்சி | என் பாதையில்

Guest Author

ஆசிரியர்களுக்கு நடைபெற்ற பணியிடைப் பயிற்சியின் நிறைவுநாளில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், அங்கிருந்த ஆசிரியர்களிடம் (அனைவருமே பெண்கள்) ஒரு கேள்வி எழுப்பினார். ‘உங்களின் மிகப்பெரிய சொத்தாக நீங்கள் நினைப்பது எது?’ என்கிற அந்தக் கேள்விக்குக் கிட்டத்தட்ட அனைவரும், ‘கணவர், குடும்பம், குழந்தைகள்’ என்று பெருமிதத்துடன் சொன்னோம்.

அவர் சிரித்துக்கொண்டே, “யாரேனும் ஒருவராவது எங்கள் ஆரோக்கியம்தான் என்று சொல்வீர்கள் என எதிர்பார்த்தேன்” என்று சொன்னவுடன் யாருக்கும் என்ன சொல்வது என்றே தெரியவில்லை. வீடு திரும்பிய பிறகும் அந்தக் கேள்வி உள்ளுக்குள் எதிரொலித்தபடியே இருந்தது. உடனே முதல் நாள் நினைவும் வந்தது.

பெண்பிள்ளைகளின் உடல்நலம், சுய சுத்தம், மனநலம் பற்றிய பயிற்சிக்கு ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் பெண் ஆசிரியர்தான் கலந்துகொள்ள வேண்டும் என்று உத்தரவு வந்தது. உடனே சக ஆசிரிய நண்பர், “பெண்களுக்குத் தனிப் பயிற்சி. ம்ம்...” என்று சிரித்ததும் நினைவுக்கு வந்தது.

ஆண் ஆசிரியர்களின் வீட்டில் தாயாக, சகோதரியாக, மனைவியாக, மகளாக, உறவினராகப் பெண்கள் இருக்க மாட்டார்களா? பெண்களோடு வாழும் ஆண்களுக்கு ஏன் அந்தப் பயிற்சி அளிக்கப்படவில்லை? மாதவிடாய் சார்ந்த விவாதத்தை இன்னும் ரகசியமாகவே ஏன் வைத்திருக்கிறோம்? அரசும் அப்படித்தான் நினைக்கிறதா என எனக்குள் அடுத்தடுத்து கேள்விகள் ஓடிக்கொண்டே இருந்தன.

பெண்களிடம் எங்கே தொடங்குகிறது இந்தத் தயக்கம்? தந்தையைச் சார்ந்து, சகோதரனைச் சார்ந்து, கணவனைச் சார்ந்து, மகனைச் சார்ந்து சக ஆசிரிய நண்பர்களைச் சார்ந்து வாழ்வதால் தானோ.. அன்று அந்த அதிகாரியின் கேள்விக்கு, “உடல் ஆரோக்கியம்தான் என் சொத்து” என்று சொல்லத் தோன்றவில்லை.

அண்மையில், ‘பெண் பிள்ளை களுக்கான இணையவழிப் பாதுகாப்பு’ பயிற்சி நடைபெற்றது. அதிலும் பெண் ஆசிரியர்கள்தான் பங்கேற்க வேண்டும் என்று உத்தரவு. பெண்களே கூடி பெண்களுக்கான பிரச்சினைகளைப் பேசி அதற்கான தீர்வுகளைப் பெற்றிட முடியுமா?

ஒவ்வொரு முறை பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை செய்திகளைப் படிக்கின்றபோதும் இவற்றுக்கு உண்மையில் என்ன காரணம், எதை நோக்கி நாம் நகர வேண்டும் என்கிற நிலைக்கு நாம் இன்னும் தயாராகவில்லையா என்று அயர்ச்சியாக இருக்கிறது. பெண்களுக்கு எதிரான குற்ற நிகழ்வுகளில் பெரும்பாலும் பெண்ணையே குற்றவாளியாக்கி மிக எளிதாக தீர்ப்பும் கூறுகிறோம்.

ஆணுக்கு என்ன பிரச்சினை, பெண்ணுக்கு என்ன பிரச்சினை என்று இருபாலரும் கலந்துரையாடும்போதுதானே புரிதல் மேம்படும். அப்போதுதானே ஆணுக்கு நம்பிக்கையாகப் பெண்ணும் பெண்ணுக்கு நம்பிக்கையாக ஆணும் இருக்க முடியும். அப்படியொரு பரஸ்பர புரிதல் வரும்போதுதான், ‘பெண் என்பவள் வெறும் உடல் அல்ல. அவளும் ஆணைப் போல அனைத்து உரிமைகளோடும் இந்த உலகில் வாழ வேண்டியவர்’ என்கிற எண்ணம் சமூகத்தில் ஏற்படும்.

- அ. அமலா, திருவண்ணாமலை

SCROLL FOR NEXT