ஒரு பெண்ணின் மார்பை அழுத்துவதும் அவரது கீழாடையைக் கழற்ற முயல்வதும் பாலியல் வல்லுறவுக்கான முயற்சியல்ல என்று பாட்னா உயர் நீதிமன்றம் அளித்திருந்த தீர்ப்பு குறித்து அதிருப்தி தெரிவித்த உச்ச நீதிமன்றம் அந்தத் தீர்ப்பை ரத்து செய்தது.
ஒரு பெண்ணின் மார்பை அழுத்துவதும் அவரது கீழாடையைக் கழற்றுவதும் பாலியல் குற்றத்துக்கான முகாந்திரத்தின் கீழ் வராது என 2025 மார்ச்சில் அலகாபாத் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு ஏற்றது. அந்த வழக்கின் மீதான விசாரணையின் போதுதான் பாட்னா உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து மூத்த வழக்கறிஞர்கள் ஷோபா குப்தா, பூல்கா இருவரும் நீதிபதிகள் சூரிய காந்த், ஜாய்மால்ய பக்சி, வி.மோகனா அடங்கிய அமர்வின் கவனத்துக்குக் கொண்டுவந்தனர்.
பாட்னாவில் 2008ஆம் ஆண்டு நடைபெற்ற சம்பவம் அது. ஒளிப்பட நிறுவனத்தை நடத்திவந்த ஹிமான்ஷு பதக் என்பவர் ஒளிப்படம் எடுப்பதற்காகத் தன் கடைக்கு வந்த இளம்பெண்ணைத் தனி அறைக்கு அழைத்துச் சென்று அந்தப் பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொண்டார்.
பதக்கின் அநாகரிகச் செயலால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் சத்தம் போட்டு அலற, பூட்டிய அறைக்கு வெளியே நின்றிருந்த பெண்ணின் தந்தை கதவை உடைத்துக்கொண்டு உள்ளே வந்தார். இருவரையும் தள்ளிவிட்டு பதக் தப்பியோடினார்.
இந்த வழக்கில் ஐந்து ஆண்டுகள் கழித்துப் பாலியல் வல்லுறவு, சட்ட விரோதமாக அடைத்துவைத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் பதக்குக்கு மூன்றாண்டுக் கடுங்காவல் தண்டனை விதித்து விசாரணை நீதிமன்றம் 2013இல் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து ஹிமான்ஷு பதக், பாட்னா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், “போதுமான ஆதாரங்கள் இல்லை.
மருத்துவப் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படவில்லை. மார்பை அழுத்துவதும் கீழாடையைக் களைவதும் ஒரு பெண்ணின் கண்ணியத்தைக் குலைக்கும் செயல்களே தவிர, அவை பாலியல் வல்லுறவுக்கான முயற்சியாக எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது” என்று கூறி பதக்கை விடுவித்தது.
பாட்னா உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை ரத்து செய்துள்ள நீதிமன்றம், பாலியல் குற்றங்களை நுண்ணுணர்வோடு அணுகுவது குறித்த தேசிய நீதித்துறை அகாடமி குழுவின் வழிகாட்டு நெறிமுறைகளை உச்ச நீதிமன்ற, அனைத்து உயர் நீதிமன்றங்களின் இணையப்பக்கங்களிலும் வெளியிடும்படி அறிவுறுத்தியுள்ளது. ‘இந்தக் கையேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றை உயர் நீதிமறங்கள் பின்பற்ற வேண்டும்.
முதல் தகவல் அறிக்கையையும் குற்றப் பத்திரிகையையும் இந்தக் கையேட்டின் அடிப்படையில் தாக்கல் செய்யும்படி அனைத்துக் காவல் நிலையங்களுக்கும் மாநில அரசுகள் அறிவுறுத்த வேண்டும்’ எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.