நான் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவள். மருத்துவராக வேண்டும் என்பது என் சிறு வயது கனவு. அந்தக் கனவை நனவாக்க வேண்டும் என்பதற்காக, பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவுடன் தனியார் நீட் தேர்வுப் பயிற்சி மையத்தில் பெற்றோர் என்னைப் படிக்க வைத்தனர்.
ஆனால், அந்த ஆண்டு நீட் தேர்வு வினாத்தாள் மிகவும் கடினமாக இருந்ததால், எனக்கு அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை. ஒரு வருடக் கடின உழைப்பும் வீணாகிவிட்டது. என்னை நம்பி என் பெற்றோர் செலவழித்த பணமும் பயனின்றிப் போனது. அவர்கள் மிகுந்த மனவேதனையடைந்தனர். என் குடும்பமே சோகத்தில் மூழ்கியது.
அடுத்த ஆண்டு மீண்டும் முயற்சி செய்ய வேண்டும் என்று அப்பாவிடம் கேட்டேன். ஆனால், குடும்பத்தின் பொருளாதாரச் சூழ்நிலை அதற்கு இடமளிக்கவில்லை. ஒரு பக்கம், “இனி முடியாது” என்று வேதனையுடன் கூறிய அப்பா; மறுபக்கம், எதுவும் பேச முடியாமல் அமைதியாக நின்ற அம்மா; இன்னொரு பக்கம், ‘ஒரே ஒரு வாய்ப்பு மட்டும் கொடுங்கள். இந்த முறை நான் கண்டிப்பாக வெற்றி பெறுவேன்’ என்று கண்ணீருடன் நான்.
அந்த நேரத்தில், உறவினர் ஒருவர் வந்து, “ஏன் இந்தப் பெண்ணை இன்னும் படிக்க வைக்கிறீர்கள்? இவளுக்கு வயது ஏறிக்கொண்டே போகிறது. சரியான வயதில் திருமணம் செய்துவைக்க வேண்டும். இனி படிப்புக்காகப் பணத்தைச் செலவழிக்க வேண்டாம். அதற்குப் பதிலாக திருமணத்துக்குத் தேவையான நகையைச் சேர்த்து வையுங்கள்” என்று கூறினார்.
அந்த வார்த்தைகள் என்னை மிகவும் காயப்படுத்தின. என் கனவைவிட, என் வயதையும் திருமணத்தையும் பற்றித்தான் சமூகம் அதிகம் கவலைப்படுவதை அப்போதுதான் முதன் முறையாக உணர்ந்தேன்.
ஒரு பெண் படிக்க வேண்டும் என்று நினைத்தாலே, அவளுடைய பெற்றோர் முதலில் எதிர்கொள்வது பொருளாதாரச் சுமையை அல்ல; உறவினர்கள், அக்கம்பக்கத்தினரின் விமர்சனங்களைத்தான்.
‘இன்னும் எவ்வளவு நாள் படிக்க வைப்பீர்கள்?’, ‘பெண் பிள்ளைக்கு இவ்வளவு படிப்பு எதற்கு?’, ‘திருமண வயது கடந்துவிடும்’ என்று ஆலோசனை என்கிற பெயரில் அவர்கள் கூறும் வார்த்தைகள், அந்தக் குடும்பத்தின் நம்பிக்கையையே குலைத்துவிடுகின்றன.
ஆனால், இப்படி ‘ஆலோசனை’ வழங்கும் யாரும் அந்தப் பெண்ணின் வாழ்க்கையைப் பற்றி ஒரு நொடியாவது சிந்திக்கிறார்களா? தன் கனவைக் கைக்கொள்வதற்காக அந்தப் பெண் எப்படியெல்லாம் உழைத்தாள் என்று யாரும் பார்ப்பதில்லை. தன் விருப்பங்களையும் ஆசைகளையும் மகிழ்ச்சியையும் ஒதுக்கிவைத்து, ஓராண்டைத் தன் இலக்குக்காக அர்ப்பணித்தது குறித்து அறிவார்களா?
மருத்துவக் கல்லூரியில் சேர வேண்டும் என்கிற ஒரே கனவுக்காகத்தான் நானும் அவ்வளவு துன்பங்களையும் தாங்கினேன். ஆனால், அந்தக் கனவை நிறைவேற்றுவதற்கு என் பெற்றோர் எடுக்கும் துணிச்சலான முடிவுகளைப் பல நேரம் உறவினர்களின் தேவையற்ற பேச்சுகளே சிதைத்துவிடுகின்றன.
ஏன் ஒரு பெண்ணின் கல்வியை, அவளுடைய திறமையை வைத்து மதிப்பிடாமல் அவளுடைய வயதையும் திருமணத்தையும் வைத்து மட்டுமே அளவிடுகிறார்கள்? ஒரு பெண்ணைப் படிக்க வைப்பது செலவு அல்ல; அது ஒரு குடும்பத்தின் எதிர்காலத்திலும் ஒரு சமூகத்தின் முன்னேற்றத்திலும் செய்யப்படும் முதலீடு. அந்த உண்மையைச் சமூகம் எப்போது முழுமையாகப் புரிந்துகொள்ளப்போகிறது? - எஸ். தேவி, நாமக்கல்.