

அண்மையில் வெளியாகி உலக அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது, ‘தி பெங்குவின் புக் ஆஃப் தி இன்டர்நேஷனல் ஷார்ட் ஸ்டோரி’ (The Penguin Book of the International Short Story) என்னும் சிறுகதைத் தொகுப்பு.
இந்தியாவின் அவசரநிலைக் காலத்தைப் பின்னணியாகக் கொண்ட சல்மான் ருஷ்டியின் எழுத்து உள்பட, ஆறு கண்டங்களைச் சேர்ந்த எழுத்தாளர்களின் தனித்துவமான கலைப் பார்வையாகவும், அந்தந்த நிலப்பரப்பின் வாழ்வைக் காட்டும் சாளரமாகவும் இத்தொகுப்பு உருவாகியுள்ளது.
இந்நூலைத் தொகுத்த அமெரிக்க எழுத்தாளர்களான ரபி அலமேடின், ஜான் ஃப்ரீமேன் ஆகியோர், இதில் இடம்பெற்றுள்ள கதைகளின் பன்முகத்தன்மை குறித்து உற்சாகத்துடன் பேசும் அதேவேளையில், நவீன அமெரிக்கச் சிறுகதைச் சூழல் அடைந்துள்ள அழகியல் தேக்கம் குறித்த தங்களின் கவலையையும் ஆழமாகப் பதிவு செய்திருக்கிறார்கள்.
அமெரிக்க இலக்கிய வரலாற்றில் சிறுகதை வடிவம் எப்போதுமே ஒரு தனித்துவமான ஆளுமையைக் கொண்டிருந்ததை இவர்கள் நினைவுகூர்கிறார்கள்.
1960-70களில் தீவிரமாக இயங்கிவந்த டோனி கேட் பாம்பாரா, உர்சுலா லே குவின், சார்லஸ் ஜான்சன், லூயிஸ் எர்ட்ரிச், ரேமண்ட் கார்பர், ஜமைக்கா கின்கேட் போன்ற முன்னோடி எழுத்தாளர்களின் காலகட்டம் அமெரிக்கச் சிறுகதைகளின் பொற்காலமாகக் கருதப்படுகிறது.
மேலும், ‘கறுப்பினக் கலைகள் இயக்கம்’ போன்றவை அமெரிக்க இலக்கிய உலகில் புதிய குரல்கள் எழுவதற்கான கதவுகளை அகலத் திறந்தன. ஆனால், தற்போதைய முதலாளித்துவச் சந்தையானது, ‘வாசிப்பு என்பது உடனடிப் பயனைத் தர வேண்டும்’ என்ற நுகர்வு மனநிலையை வாசகர்களிடம் வளர்த்துவிட்டதாக இவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.