உலகில் ஒவ்வொரு மூன்று நொடியிலும் ஒரு பெண்குழந்தைக்குத் திருமணம் செய்து வைக்கப்படுகிறது. உலக அளவில் பெண்குழந்தைகள் எதிர்கொள்ளும் இத்தகைய நெருக்கடிகள்தான், ஐக்கிய நாடுகளின் அவை ‘பெண்குழந்தைகளுக்கான சர்வதேச நாள்’ (அக்டோபர் 11) கொண்டாட வழிவகுத்தன. பெண்குழந்தைகள் எதிர்கொள்ளும் முக்கியப் பிரச்சினைகள் குறித்த அறிதலை ஏற்படுத்துவது, தீர்வுகளை முன்வைப்பது, அவர்களுக்கு அதிகாரம் அளிப்பது ஆகியவற்றை நோக்கிப் பன்னாட்டுச் சமூகத்தை நகர்த்துவதே இதன் நோக்கம்.
பெண் குழந்தைகளுக்கான சர்வதேச நாளின் இந்த ஆண்டுக்கான கருப்பொருள், ‘குழந்தைத் திருமணத்தைத் தடுத்தலும் பெண் குழந்தைகளின் உரிமைகளுக்காக முதலீடு செய்தலும்’தான்.
இந்திய நிலவரம்: சிறுமிகளின் கல்விக்குத் தடை, உடல்நலத்துக்குப் பாதிப்பு, குடும்ப வன்முறை, திறன்களை வெளிப்படுத்தும் வாய்ப்பை இழப்பது ஆகிய பிரச்சினைகளுக்கு மூலக் காரணமாகக் குழந்தைத் திருமணம் அமைகிறது. 2021 நிலவரப்படி இந்தியாவில் அதிகபட்சமாக மேற்கு வங்கத்தில் அதிக எண்ணிக்கையில் குழந்தைத் திருமணங்கள் (41.6%) நடைபெற்றிருக்கின்றன. இரண்டாவது இடத்தில் பிஹாரும் (40.8%) மூன்றாவது இடத்தில் திரிபுராவும் (40.1%) உள்ளன. தமிழ்நாட்டில் இந்தப் பிரச்சினை 12.8%ஆக உள்ளது.
சமூகத்தின் பொறுப்பு: குழந்தைத் திருமணத் தடைச் சட்டம், 2006 இத்தகைய திருமணங்களைத் தடுத்து, பெண் குழந்தைகளுக்குப் பாதுகாப்பையும் நிவாரணத்தையும் அளிக்கிறது. சட்ட நடவடிக்கை களையும் விழிப்புணர்வுப் பணிகளையும் மீறி, ஆங்காங்கே பெண் குழந்தைத் திருமணங்கள் நடந்துகொண்டுதான் உள்ளன.
இதைத் தடுப்பதில் அரசுக்கு உள்ள பொறுப்போடு சமூகத்துக்கும் சில கடமைகள் உள்ளன. வறுமை, குடும்பச் சூழல் காரணமாக ஒரு சிறுமிக்குத் திருமணம் செய்யப்படும் சூழல் இருப்பதாகத் தோன்றினால், சுற்றியுள்ளவர்கள் அதை மௌனமாகக் கடந்து செல்லக் கூடாது. குறைந்தபட்சம் அதை நேரடியாகவோ மறைமுகமாகவோ தடுக்க முயல்வதே நாகரிகம் அடைந்த சமூகத்தின் எதிர்வினையாக இருக்கும்.
திருமணத்தைத் தவிர்க்கத் தேவையான செயல்பாடுகளில் தங்களை இணைத்துக் கொள்ளவும் தயாராக இருக்க வேண்டும். பல குடும்பங்களில் முக்கியமான முடிவுகளின்போது பெண்களுக்கே பேசும் சுதந்திரம் முழுமையாக வாய்க்கவில்லை. சிறுமிகள் பேச இடமே இல்லை. அதேநேரம், தங்களை இந்தப் பேரிடரிலிருந்து காப்பாற்றிய உள்ளங்களை வாழ்நாள் முழுவதும் அவர்கள் மறக்க மாட்டார்கள் என்பது மட்டும் நிச்சயம்.
- ஆதிரையாள்