

ஆசிரியை என்றால் புடவைதான் அணிந்திருக்க வேண்டும் என்பது இந்தியாவில் எழுதப்படாத விதியாகவே உள்ளது. ஒருவேளை அவர் சுடிதார் அணிய விரும்பினால்? அதற்குப் பெரும்பாலான பள்ளிக்கூடங்களில் அனுமதிக்கப்படுவதில்லை என்பதுதான் யதார்த்தம்.
நெடுங்காலமாகப் பின்பற்றப்படும் இந்த விதிமுறையை அண்மையில் கேள்விக்கு உட்படுத்தியிருக்கிறது கேரள உயர் நீதிமன்றம். பள்ளிக்கூடத்துக்கு சுடிதார் அணிந்து வர மறுக்கப்பட்ட தலைமை ஆசிரியைத் தொடுத்த வழக்கில், உடை குறித்த தனிநபர்களின் சுதந்திரத்தை கேரள உயர் நீதிமன்றம் உறுதிபடுத்தியுள்ளது.
மிரட்டிய பள்ளி மேலாளர்: கொல்லம் கொட்டாரக்கராவில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் தலைமை ஆசிரியைப் பணிக்கு சுடிதார் அணிந்து வந்துள்ளார். அதற்குப்பள்ளியின் மேலாளர் எதிர்ப்பு தெரிவித்ததோடு, அவரை வளாகத்துக்குள் அனுமதிக்கவில்லை. காவல்துறையின் பாதுகாப்போடுதான் அவர் பள்ளிக்குள் செல்ல முடிந்தது.
மேலாளர் தன்னை மிரட்டுவதாகவும் தன்னை உள்ளே விடக் கூடாது என வாயிற்காவலர்களுக்கு அறிவுறுத்துவதாகவும் கூறி காவல்துறையில் அவர் புகார் அளித்தார். இன்னொரு பக்கம், பள்ளிக்கு சுடிதார் அணிந்து செல்ல கேரளப் பள்ளிக் கல்வி இயக்குநரகத்திடம் அனுமதியும் பெற்றார். மேலாளரைப் பணியிலிருந்து தகுதிநீக்கம் செய்யும்படி உத்தரவிடக் கோரி அவர் கேரள உயர் நீதிமன்றத்தில் அவர் வழக்குத் தொடுத்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.வி.குன்னிகிருஷ்ணன், “உடை என்பது ஒருவரது தெரிவு. அது சமூக வழக்கங்களை உறுதிப்படுத்துவதாக இருக்க வேண்டும் என மற்றவர்கள் வற்புறுத்த முடியாது. அப்படி எந்தச் சட்டமும் சொல்லவும் இல்லை” எனக் கூறியுள்ளார்.
மேலாளருக்கு எதிராகக் காவல்துறையின் விசாரணை நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, அவரது தகுதிநீக்கம் குறித்து நீதிமன்றம் வழிகாட்டத் தேவை இல்லை எனக் கூறிய நீதிபதி, ஆசிரியைக்குத் தொந்தரவை உண்டாக்கும் வகையில் மேலாளர் நடந்துகொள்ளாதபடி பாதுகாப்பு வழங்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.