எங்கள் வீட்டில் என் அன்றாட வேலைகள் அம்மாவுக்கு உதவுவதில் இருந்தே தொடங்குகின்றன. காலையில் எழுந்ததும் வீட்டைப் பெருக்குவது, பாத்திரங்களைக் கழுவி வைப்பது என அனைத்து வேலைகளையும் நான் விரும்பிச் செய்கிறேன். அது மட்டுமன்றி, அதிகாலையிலேயே எழுந்து வாசல் தெளித்துக் கோலமிடுவதிலும் அம்மாவுக்குத் துணையாக இருக்கிறேன்.
அம்மா வாஷிங் மெஷினில் துணிகளைத் துவைத்து முடித்ததும் மாடிக்கு எடுத்துச் சென்று காயப்போடுவதிலும், மடித்து வைப்பதிலும் உதவுகிறேன். காய்கறிகள், மளிகைப் பொருள்கள் வாங்கி வருவது முதல் வீட்டில் இருக்கும் சின்ன சின்ன வேலைகள்வரை அனைத்தையும் நானே முன்னின்று கவனிக்கிறேன்.
வீட்டு வேலைகள் பெண்களுக்கு மட்டுமேயானவை அல்ல என்பதை நான் முழுமையாக நம்புகிறேன். வயதான என் அம்மாவுக்கு என்னால் முடிந்த இந்தச் சிறு உதவிகளைச் செய்யும்போது, அவரின் முகத்தில் தெரியும் நிம்மதியும் புன்னகையும்தான் எனக்குக் கிடைக்கும் மிகப்பெரிய மகிழ்ச்சி.- பா.ச. ஸ்ரீதர், கோவில்பட்டி.