பெண் இன்று

உரிமையை விட்டுக் கொடுப்பது முன்னுதாரணமல்ல!

பிரியதர்ஷினி ராமமூர்த்தி

பெண்களுக்கு வழங்கப்படும் பேறுகால விடுப்பு, அவர்களின் உடல் நலன், பேறுகாலப் பாதுகாப்பு, குழந்தையின் நலன் போன்றவற்றைக் கருத்தில் கொண்டே உருவாக்கப்பட்டது. இது தாய்-சேய் ஆரோக்கியத்தைப் பராமரிப்பதோடு பணியில் பெண்களின் தொடர்ச்சியை உறுதிப்படுத்தும் அம்சமாகவும் இருக்கிறது. இது விடுப்பு அல்ல; பெண்களின் உரிமை.

இந்தியாவில் பெண்களின் பேறுகால நலன்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், ‘மகப்பேறு நலச் சட்டம் (Maternity benefit Act) 1961’ உருவாக்கப்பட்டது. பின்னர் அதில் செய்யப்பட்ட திருத்தங்களின்படி, முதல் இரண்டு குழந்தைகளுக்கு 26 வாரங்களும் மூன்றாவது குழந்தையில் இருந்து 12 வாரங்கள், தத்துக் குழந்தை அல்லது வாடகைத்தாய் மூலம் பெறும் குழந்தைக்கு 12 வாரங்கள், கருச்சிதைவு ஏற்பட்டால் 6 வாரங்கள், பிரசவ காலத்தில் ஏற்பட்ட பிரச்சினைகளால் உடல் நிலை பாதிப்பு என்றால் கூடுதலாக ஒரு மாதம் என ஊதியத்துடன் கூடிய விடுப்பு எடுத்துக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இன்று பெண்களுக்குக் கிடைத்துள்ள ஒவ்வோர் உரிமையும் அவர்களுக்கு எளிதாகக் கிடைத்துவிடவில்லை. போராடியே பெறப்பட்டன. அதில் பேறுகால விடுப்பு உரிமையும் ஒன்று.

இரண்டு சம்பவங்கள்:

அண்மையில் நடைபெற்ற இரண்டு சம்பவங்கள் சமூகத்தில் விவாதத்தை எழுப்பின. தமிழ்நாட்டில் தவெக எம்எல்ஏ பல்லவி, குழந்தை பிறந்த சில நாள்களிலேயே பச்சிளங்குழந்தையைச் சுமந்தபடி அரசு, கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

கேரள மாநிலம் வயநாடு மாவட்ட ஆட்சியர் மேகா, குழந்தை பெற்ற ஆறு நாள்களில் பணிக்குத் திரும்பியுள்ளார். குழந்தை பிறக்கும் முதல் நாள் வரை அவர் பணியில் இருந்துள்ளார். பின்னர் பணிக்குத் திரும்பி, குறிப்பிட்ட காலம் வேலை செய்துவிட்டு மீண்டும் பேறுகால விடுப்பில் சென்றார்.

இது இந்த இரண்டு பெண்களும் சூழல் காரணமாக எடுத்த தனிப்பட்ட முடிவு. ஆனால், இதை ஊடகங்களில் முன்னுதாரணமாகக் கொண்டாடும்போது

அது சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்தும் சிந்திக்க வேண்டும். ஏனெனில், பேறுகால விடுப்பு, பெண்கள் விரும்பினால் எடுத்துக்கொள்ளும் சலுகை அல்ல; அது அவர்களின் ஆரோக்கியம், குழந்தையின் நலனைப் பாதுகாக்க உருவாக்கப்பட்ட உரிமை.

சமூகத்தின் உயர் பொறுப்புகளில் இருக்கும் பெண்கள் இப்படிச் செய்யும்போது அது மற்ற பெண்களுக்கு, ‘அவர்களால் முடிகிறது. நம்மால் முடியவில்லையே’ என்கிற மனஅழுத்தத்தை ஏற்படுத்தும். நடைமுறையில் ஒவ்வொரு பெண்ணின் பேறுகால அனுபவமும் மாறுபடும்.

இந்தப் பேறுகால விடுப்பு என்பது நிறுவனங்களில் பணிபுரிவோருக்குக் கிடைத்துவிடுகிறது. ஆனால், அமைப்பு சாராப் பணிகளான விவசாயம், கட்டிடத் தொழில் போன்றவற்றில் பணிசெய்யும் பெண் தொழிலாளர்களுக்குக் கிடைப்பதில்லை. அவர்களின் பேறுகால உரிமையும் காக்கப்பட வேண்டும். தனியார் நிறுவனங்கள் சிலவற்றில் 3 மாதங்கள் மட்டுமே பேறுகால விடுப்புகள் வழங்கப்படுகின்றன. அவற்றையும் முறைப்படுத்த வேண்டும்.

ஆண்களுக்கு விடுப்பு: மனைவி குழந்தை பெற்றுக்கொள்ளும்போது ஆண் ஊழியர்களுக்கு மத்திய அரசு 15 நாள்கள் விடுப்பு (paternity Leave) வழங்குகிறது. ஆனால், தனியார் நிறுவனங்கள் இதை வழங்குவதில்லை. குழந்தை வளர்ப்பு, பராமரிப்பில் தந்தையின் பங்களிப்பையும் உறுதிசெய்ய இந்த விடுப்பும் அவசியம்.

பெண்களுக்கு மகப்பேறு விடுப்பு என்பது அவர்களுக் கான உரிமை என்பதை கருத்தில்கொண்டு அதைச் சரியாகப் பயன்படுத்துவதைத்தான் முன்னுதாரணமாகக் காட்டவேண்டும். அவர்கள் விடுப்பின்றிப் பணிக்குத் திரும்புவதை இயல்பானதாக மாற்றக் கூடாது.

SCROLL FOR NEXT