பெண் இன்று

கை தட்டத் தட்ட உயர்ந்தேனே… | என் பாதையில்

Guest Author

நான் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது, ‘நான் விரும்பும் இலக்கியம்’ என்கிற தலைப்பில் பேச்சுப்போட்டி நடைபெற்றது. திருக்குறளைத் தேர்வுசெய்து பேசலாம் என்று நினைத்தபோது அப்பா, ‘பெண்ணியம் பேசும் சிலப்பதிகாரத்தைப் பற்றிப் பெண்கள் பள்ளியில் பேசினால் சிறப்பாக இருக்கும்’ என்றார்.

அவரின் வழிகாட்டுதலில், ‘மண் பார்த்து நடப்பவளே பெண் என்கிற கோட்பாட்டை மாற்றி விண் முட்டும் அரண்மனையையும் அதிகாரத்தின் உச்சம் தொட்ட மன்னனையும் சுட்டெரிக்கும் வல்லமை மிக்கவள் பெண் என்பதை உணர்த்தியதோடு அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்பவையே பெண்ணின் அணிகலன்கள் என்கிற கற்பிதங்களைத் தகர்த்து, அச்சத்தைத் துறந்து ஆவேசமும் கொள்ள உரிமை மிக்கவள் பெண் என்பதை உணர்த்திய இலக்கியம் சிலப்பதிகாரம்’ என்று மேடையில் முழங்கியபோது எழுந்த கரவொலி அடுத்தடுத்த போட்டிகளின் பங்கெடுப்புக்கு அடித்தளம் இட்டது.

அப்பா முற்போக்குக் கருத்தியலை முன்மொழியும் நூல்களை அதிகமாக வாசிப்பார். நானும் அவற்றை வாசிக்க ஆரம்பித்தேன். அக்கருத்தியலை மையமாகக் கொண்டு பேசி, தொடர்ந்து மாவட்டம், மாநில அளவிலான பேச்சுப்போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிபெற்றேன். ஆனால், கல்லூரிக் காலத்துக்குப் பிறகு மேடையேறிப் பேசும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்நிலையில் 10, 12ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கான உயர்கல்வி, வேலைவாய்ப்பு குறித்துப் பேச அழைத்திருந்தார்கள். கல்வியின் தோற்றத்திலிருந்து தற்போது வரை தொடரும் பாகுபாடுகள் குறித்து நான் பேசியது மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து பல கூட்டங்களில் பேச அழைத்தார்கள். ‘பலம் பொருந்தியவர்களையும் பலமற்றவர்களையும் சமமாகப் பார்ப்பது சரியல்ல’ என்கிற கருத்தை மையமாகக் கொண்டு; வரலாற்று ஆதாரங்களோடு இடஒதுக்கீடு குறித்துப் பேசினேன்.

மாற்றுத் திறனாளிகளுக்கான இணையவழிப் பன்னாட்டுக் கருத்தரங்கில், அரசியல் மாற்றங்கள் அவர்களை எவ்வாறு பாதிக்கின்றன என்பது குறித்துப் பேசினேன்.

சமூக அநீதிகளுக்கு எதிரான பெண்களின் போராட்டம் என்கிற தலைப்பில் பேசியபோது டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி முதல் பூலான்தேவி வரை பட்டியலிட்டுப் பேசியது நல்ல வரவேற்பைப் பெற்றது. சில ஆண்கள் தங்கள் மனைவியைக் கல்லூரிகளில் சேர்த்தனர். சில பெண்கள் தாங்களாகவே படிக்கத் தொடங்கினார்கள்.

சமூகக் கருத்துகளைப் படிப்பது, பேசுவது, எழுதுவது எல்லாம் எழுச்சியின் தொடக்கமாகின்றன. இருளுக்குப் பேரொளியையும் பலவீனமானவர்களுக்குப் பேராற்றலையும் தருகின்றன. அனைத்துக்கும் அடிப்படையாக அமைந்தது எட்டாம் வகுப்பு மேடைப்பேச்சின்போது எதிரொலித்த கரவொலிகளே!- யசோதா சரவணன்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT