பெண் இன்று

தேர்தல் வாக்குறுதிகளும் இடஒதுக்கீடும்

கோகிலா

2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் அனைத்துக் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதி களில் இருக்கும் முக்கியமான ஒற்றுமை, ‘பெண்கள் முன்னேற்றம்’.

வீட்டு பயன்பாட்டுப் பொருள்கள் எல்லாமே பெண்களுக் கானதாகவே கருதப்பட்டு அத்தகைய வாக்குறுதிகள் பெண்களை மையமாக வைத்துச் சொல்லப்படுகின்றன. தாங்கள் சமைத்தவற்றைக் குளிர்பதனப் பெட்டியில் வைத்துப் பெண்கள் மட்டுமே உண்பதுபோலத்தான் அறிக்கையில் இடம்பெற்றிருக்கும் சொற்கள் இருக்கின்றன.

மலட்டுத்தன்மை நீக்கும் சிகிச்சைக்கு அளிக்கப்படும் நிதியுதவி பெண்களுக்குப் பலன் தரும் என ஒரு பத்திரிகை எழுதியிருந்ததைப் போலவே இத்தகைய வாக்குறுதிகள் இருக்கின்றன.

தவெக அறிவித்துள்ள ‘அண்ணன் சீர்’ திட்டமெல்லாம் பிற்போக்குச் சிந்தனையின் வெளிப்பாடே. இதில் மாற்றம் உண்டாகப் பலன் பெறுபவர்களாக இருக்கும் பெண்கள், பலன்களை நிர்ணயிக்கும் அதிகாரத்துக்கு வரவேண்டும்.

பெயரளவுக்கு வாய்ப்பு:

தமிழ்நாட்டில் அரசியல் அதிகாரத்துக்குப் பெண்கள் பெருமளவில் வருவதற்கு இன்னும் காலம் கனியவில்லை என முதன்மைக் கட்சிகள் நினைக்கின்றன.

2026 தேர்தலில் திமுக 18, அதிமுக 20 என்கிற எண்ணிக்கையில் பெண் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. வாரிசு அரசியல் முக்கியமான பேசுபொருளாக இருக்கும் தமிழ்நாட்டில் அரசியல்வாதிகளின் பெண் வாரிசுகள் களம் கண்டால்கூட இந்நிலை மாறும்.

ஆமையைவிட மெதுவாகப் பெண்களின் வளர்ச்சி இருக்கும் துறை என்றால் அது அரசியல்தான். போட்டி போட்டுக்கொண்டு பெண்கள் நலத்திட்டங்களை அறிவிக்கும் கட்சிகளின் வேட்பாளர் பட்டியலைப் பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. இவற்றில் நாம் தமிழர் கட்சி மட்டும் எப்போதும் சம அளவில் பெண் வேட்பாளர்களைக் களமிறக்குகிறது.

‘வெற்றி பெற்றால்தானே..’ என்கிற சிந்தனையோடு அளிக்கப்படும் இட ஒதுக்கீடு இது!

நேராக முதல்வர் நாற்காலிதான் எனப்​ பேசும் தவெக, அதைக்கூடச் செய்யவில்லை என்பதைப் பார்க்கையில் நாம் தமிழர் கட்சியின் செயல்பாடு பாராட்டத்தக்கதே.

வாய்ப்புகள் தரப்படாத நிலையில் பெண்களுக்கும் ஜனநாயகத்துக்கும் எதிரான கட்சிகளில் தங்களை இணைத்துக்கொள்ளவும் சில பெண்கள் தயங்குவதில்லை. உலக அளவிலும் தமிழ்நாட்டிலும் இந்த அவலநிலை இருக்கத்தான் செய்கிறது.

அதிகாரத்துக்கு வர வாய்ப்பிருக்கும் திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் போன்ற கட்சிகளின் வேட்பாளர்களில் கணிசமான பெண் வேட்பாளர்கள் வரும்போதுதான் உண்மையான மாற்றம் நிகழும்.

வழிநடத்தும் பெண்கள்: அமெரிக்காவின் கடந்த தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளர்களில் 16% பெண்கள். ஜனநாயகக் கட்சியில் 46% பெண் வேட்பாளர்கள்.

மொத்தமாகப் பார்க்கையில் 30% பெண்கள் காங்கிரஸ் சபைக்குள் நுழைய முடிந்தது. பெண்கள் அதிகாரத்தில் இருந்து வழிநடத்திய நியூசிலாந்து, ஐஸ்லாந்து போன்ற நாடுகள் பெருந்தொற்றுக் கால நெருக்கடியைத் திறமையாகக் கையாண்டன.

பாலினச் சமத்துவம் உள்ள நாடுகளில் பொருளாதார வளர்ச்சி சீராக இருப்பதை ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. இந்தியாவிலும்கூடப் பெண்கள் தலைவர்களாக இருக்கும் ஊராட்சிகளில் குடிநீர்த் திட்டங்கள் அதிகமாகச் செயல்படுத்தப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

வேறெந்தத் துறையில் முன்னேறினாலும் பெண்கள் அரசியல் அதிகாரத்தை அடைய முடியாதபடி சமூகக் காரணங்கள் தடுக்கின்றன. எவ்வளவு உயரம் போனாலும் கண்ணுக்குத் தெரியாத கண்ணாடிக்கூரையில் முட்டிக்கொண்டு நிற்கிறார்கள் பெண்கள். இதை உடைக்கும் பொறுப்பு நம் சமூகத்துக்கு இருக்கிறது. பெண்கள் முன்னேற்றம் பற்றிப் பேசும் கட்சிகளுக்கு இந்தப் பொறுப்பு அதிகமாக இருக்கிறது.

SCROLL FOR NEXT