பெண் இன்று

உழைக்கும் பெண்களின் இரட்டைச் சுமை | வாசகர் வாசல்

Guest Author

நவீனச் சமூகம் பெண்கள் அடைந்திருக்கும் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரச் சுதந்திரம் ஆகியவற்றை மாபெரும் சமூக மாற்றமாகப் பேசிக் கொண்டாடுகிறது. ஆனால், குடும்ப அமைப்புக்குள் ஆழமாகப் புதைந்து கிடக்கும் ஆணாதிக்க நடைமுறைகள், இன்றும் உழைக்கும் பெண்களை உடலாலும் மனதாலும் கடுமையாக வதைத்துக்கொண்டுதான் இருக்கின்றன. கணவன் - மனைவி இருவரும் சமமாகச் சம்பாதித்தாலும் முடிவெடுக்கும் அதிகாரம் ஆணின் கரங்களிலேயே இருக்க வேண்டும் என்கிற எழுதப்படாத சட்டம் பல வீடுகளில் உண்டு.

தான் உழைத்து ஈட்டிய பணத்தைத் தன் விருப்பப்படி சேமிக்கவோ, செலவிடவோ ஒரு பெண் நினைத்தால் அது, ‘சம்பாதிக்கும் திமிர்’ என்று சுலபமாக முத்திரை குத்தப்படுகிறது. சொந்த உழைப்பின் பலனைக்கூடக் கணவனிடமும் குடும்பத்தினரிடமும் கையேந்திப் பெறும் நிலையே ‘குடும்பப் பெண்ணின் அடக்கம்’ எனப் போற்றப்படும். சமூகத்தின் இந்த இரட்டை வேடம், பெண்களின் பொருளாதார விடுதலையை வெறும் ஏட்டளவிலேயே நிறுத்திவிடுகிறது.

உணர்வுரீதியான இடைவெளி: அலுவலகத்தில் எட்டு மணிநேர உழைப்பு, வீட்டுக்குள் நுழைந்தவுடன் சமைத்தல், துவைத்தல், பாத்திரங்களைச் சுத்தம் செய்தல் என இரவு வரை வேலைகள் நீளும். இந்த ‘இரட்டைச் சுமை’ பெரும்பாலும் பெண்களின் தலையிலேயே சுமத்தப்படுகிறது. பெரும்பாலான வீடுகளில் ஆண்கள் வேலை முடிந்து வந்தால் தொலைக்காட்சி பார்ப்பதையோ திறன்பேசியில் மூழ்குவதையோ தங்கள் பிறப்புரிமையாகக் கருதுகின்றனர்.

வீட்டு வேலைகளில் பங்கெடுப்பது ஒருபுறமிருக்க, குறைந்தபட்சம் பெண்ணின் உடல் சோர்வை உணர்ந்து, “களைப்பாக இருக்கிறதா?” என்று கேட்கும் அன்பான ஆறுதல் வார்த்தைகூடப் பல வீடுகளில் கிடைப்பதில்லை. உணர்வுரீதியான பிணைப்பில் இப்படி ஏற்படும் இடைவெளி, பெண்ணுக்கு உடல் உழைப்பைக் காட்டிலும் பன்மடங்கு உளவியல் ரீதியான தனிமையையும் காயத்தையும் பரிசளிக்கிறது.

பெண்ணின் சுயமரியாதை மிகக் கொடூரமாக நசுக்கப்படும் இடம், தன் பெற்றோரைப் பராமரிக்கும் சூழல். கணவரின் பெற்றோரைப் பேணிக் காப்பது மருமகளின் தலையாயக் கடமையாகக் கட்டாயப்படுத்தப்படும் அதேவேளையில், மனைவியின் பெற்றோருக்கு ஆதரவு தேவைப்படும்போது அவர்களைக் கணவன் தன் வீட்டில் வைத்துப் பார்த்துக்கொள்வது பெரிய ‘தியாகம்’ போலவும் ‘தயவு’ போலவும் பார்க்கப்படுகிறது.

அவர்களின் வருகை வீட்டில் ஒருவித இறுக்கத்தை உருவாக்குவதும், குறுகிய மனப்பான்மையோடு நடத்தப்படுவதும் வேதனையான நிதர்சனம். மகனைப் போலவே மகளுக்கும் தன் பெற்றோரைப் பாதுகாக்கும் முழுப் பொறுப்பும் உரிமையும் உண்டு என்பதைச் சமூகம் இன்னும் முழு மனதோடு ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.

பெண் என்பவள் குடும்பத்தின் பொருளாதாரத் தேவைகளை நிரப்பும் இயந்திரமோ வீட்டு வேலைகளை மட்டுமே செய்து தீர்க்கும் கூலி இல்லாத உழைப்பாளியோ அல்ல. அவளும் ஆணைப் போலவே சமமான உணர்வுகளும் சுயமரியாதையும் கொண்ட மனிதப் பிறவிதான். கையில் பணம் புரள்வது மட்டுமே பெண்ணுக்கு விடுதலையைத் தந்துவிடாது; தன் உழைப்பின் மீதான முடிவை எடுப்பதிலும், வீட்டுப் பொறுப்புகளில் சம பங்களிப்பைப் பெறுவதிலும், தன் பெற்றோருக்கான உரிய மரியாதையை நிலைநாட்டுவதிலுமே உண்மையான சமூக விடுதலை அடங்கியுள்ளது.

- இரா. பானுமதி | கட்டுரையாளர், ஆசிரியர்

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT