பெண் இன்று

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் | பெண்கள் 360

செய்திப்பிரிவு

இந்தியாவில் 2024ஆம் ஆண்டு நிலவரப்படி 5,737 வரதட்சணை மரணங்கள் நிகழ்ந்துள்ளதாகத் தேசியக் குற்ற ஆவணக் காப்பகத் தரவுகள் தெரிவிக்கின்றன. 2015ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது குறைவு என்கிறபோதும் இந்தியாவில் நாள்தோறும் 16 பெண்கள் வரதட்சணை காரணமாகக் கொல்லப்படுகிறார்கள் அல்லது தற்கொலைக்குத் தூண்டப்படுகிறார்கள் என்பது புறக்கணிக்கக்கூடியது அல்ல.

பெரும்பாலும் வட மாநிலங்களில்தான் வரதட்சணை மரணங்கள் அதிகமாக நிகழ்கின்றன. 2024ஆம் ஆண்டு புள்ளிவிவரப்படி மூன்றில் ஒரு பங்கு வரதட்சணை மரணங்கள் (2,038) உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்றுள்ளன.

அதற்கு அடுத்த இடத்தை பிஹாரும் (1,078) மத்தியப் பிரதேசமும் (450) பிடித்துள்ளன. வரதட்சணை வழக்குகள் நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்குள் முடிக்கப்படுவதில்லை. கடந்த பத்து ஆண்டுகளாக மூன்றில் ஒரு வழக்கு காவல் நிலைய விசாரணை நிலையிலேயே இருப்பதாகத் தேசியக் குற்ற ஆவணக் காப்பகத் தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைகளுக்கும் குறைவில்லை. 2024ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிராகக் கணவன் அல்லது பிற உறவினர்களால் 1.20 லட்சம் வன்முறைகள் அரங்கேறியுள்ளன; அதாவது நாள்தோறும் 300 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவாகின்றன. இதிலும் 21 ஆயிரம் வழக்குகளோடு உத்தரப்பிரதேசம்தான் முதலிடம் வகிக்கிறது. 19 ஆயிரம் வழக்கு களோடு மேற்கு வங்கம் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. ராஜஸ்தான், மகாராஷ்டிரம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான குடும்ப வன்முறை வழக்குகள் பதிவாகியுள்ளன.

கடந்த பத்து ஆண்டுகளாகக் குடும்ப வன்முறைப் புகார்களின் எண்ணிக்கையில் ஏற்ற இறக்கங்கள் இருக்கிறபோதும் அது ஒருமுறைகூட ஒரு லட்சத்துக்குக் கீழே இறங்கவில்லை. குடும்ப கௌரவம், ஆணாதிக்கம், சமூகக் கட்டமைப்பு, விழிப்புணர்வின்மை போன்ற காரணங்களால் பெரும்பாலான குடும்ப வன்முறைகள் புகார்களாகப் பதிவாவதில்லை. பதிவு செய்யப்பட்ட குற்றங்களின் எண்ணிக் கையே ஒரு லட்சத்தைத் தாண்டுகிறபோது உண்மையிலேயே பாதிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை அதைவிட அதிகமாகத்தான் இருக்கும் எனச் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

SCROLL FOR NEXT