படைப்பின் வடிவம் எதுவாகவும் இருக்கலாம். ஆனால், படைப்பாளியைப் பாலினப் பாகுபாடு கொண்டு நோக்குவது சில நேரம் அவசியமாகிறது. பெண்களைப் பல நூற்றாண்டுகளாக அடக்கி, ஒடுக்கி வைத்த சமூக வரலாற்றைக் கொண்டிருப்பவர்கள் நாம். ஒடுக்கப்பட்ட பெண்களின் கதையை ஒரு நாவலாகவோ திரைப்படமாகவோ ஒரு பெண் படைக்கும்போது, அதில் பெண் குரலும் பெண் மொழியும் தனித்தும் அசலாகவும் வெளிப்பட்டுவிடுகின்றன. அதனாலேயே பெண் எழுத்தாளர்கள், பெண் திரைப்பட இயக்குநர்கள், பெண் சமூகப் போராளிகளின் செயல்பாடும் செயலூக்கமும் பெண்ணுலகத்துக்கானதாக இருக்கின்றன.
முதலிரண்டு படைப்புகள் இந்தப் புள்ளியில்தான் ‘டாக்ஸிக்’ திரைப்படத்தை எழுதி இயக்கிய கீது மோகன்தாஸ் என்கிற பெண் இயக்குநரின் செயல் விவாதத்துக்கும் கண்டனத்துக்கும் உள்ளாகியிருக்கிறது வன்முறையில் உழலும் மாஸ் மசாலா நாயகனாக யாஷ் நடிப்பில் வெளியான ‘டாக்ஸிக்’ திரைப்படம் சட்டம், காவல் துறையால் கட்டுப்படுத்த முடியாத நாயகனின் சாகசங்களை விரிக்கிறது.
பெருநகரக் குற்றப் பின்னணி கொண்ட ஒரு டான், ஐந்து பெண்களின் உலகில் ஊடாடும் அவனது எழுச்சியையும் வீழ்ச்சியையும் உளவியல் திரில்லராக மாற்றும் முயற்சியில் கொடூரமான வன்முறைக் காட்சிகளுடன் இதைப் படமாக்கியிருக்கிறார் நடிகை, திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர் எனப் பன்முகத் திறன்கொண்ட கீது.
ஓர் இயக்குநராக அவர் தன்னை அடையாளம் காட்டிய முதல் படமான ‘லையர்ஸ் டைஸ்’ (Liar’s Dice), இந்தியாவிலும் உலக அரங்கிலும் பெரிதும் பாராட்டப்பட்டது. ஏனென்றால், பொருளாதாரப் பாதுகாப்பின்மையால் வர்க்க அடுக்கில் சக்கையாகப் பிழியப்படும் எளிய ஏழைப் பெண்களின் அக உலகை, கமலா என்கிற அபலைக் கதாபாத்திரத்தின் மூலம் காட்சிப்படுத்தினார். இப்படம் சிறந்த நடிப்பு, ஒளிப்பதிவு ஆகியவற்றுக்கு இரண்டு தேசிய விருதுகளை வென்றது. சர்வதேசப் படவிழாக்களில் பல விருதுகளைப் பெற்றது.
அவரின் இரண்டாவது படமான ‘மூத்தோன்’, லட்சத்தீவின் மீனவக் கிராமத்திலிருந்து மும்பைக்கு ஓடிப்போன ஒருவனின் வாழ்க்கையையும் அவனைத் தேடி மும்பைக்குச் செல்லும் அவனுடைய 13 வயதுத் தங்கையின் பாசம் நிரம்பிய ஏக்கத்தையும் எந்தவித மசாலாப் பூச்சுமின்றி வெளிப்படுத்திய ஒரு துணிச்சலான படைப்பு.
பெண்கள் வெறும் உடல்களா? - வெகுஜன சினிமாவின் பிரம்மாண்டப் பரப்புக்குள் நுழைந்த பின் கீது மோகன்தாஸ் உருவாக்கிய ‘டாக்ஸிக்’, ஓர் அப்பட்டமான ஆண் மைய சினிமாவாகக் குறுகிவிட்டது. தனது தனித்துவமான படைப்புக் குரலையும் பெண் மைய அரசியலையும் ‘டாக்ஸிக்’ படத்தில் அவர் முழுமையாக இழந்து நிற்கிறார்.
காரணம், இப்படத்தில் எழுதியிருக்கும் ஐந்து முக்கியப் பெண் கதாபாத்திரங்களையும் மாஸ் மசாலா நாயக சினிமாவின் வரையறைக்கு அவர் பலிகொடுத்துவிட்டார். நாயகன் ராயாவின் அக்காவான கங்கா, ராயா திருமணம் செய்ய ஒப்புக்கொள்ளும் தாதாவின் மகள் ரெபேக்கா, ராயா காதலிக்கும் சர்க்கஸ் கலைஞரான நதியா, ராயாவை மணந்துகொண்டு வாழும் மெலிசா, கோவா நகரத்தை நிழலாட்சி செய்யும் மாபியா குழுவின் தலைவன் சால்வடோருடன் திருமணம் கடந்த உறவில் இருக்கும் எலிசபெத்.
இந்த ஐந்து கதாபாத்திரங்களுமே ஆண்களின் அகந்தையைத் தாங்கும் அலங்காரப் பொருள்களாகவும் ஆண் மைய உலகை அழகுபடுத்தும் பின்னணிக் கித்தானாகவும் சுருக்கப்பட்டுவிட்டனர். ஒரு பெண் இயக்குநர், தாம் படைத்த பெண் கதைமாந்தர்களை வெறும் உடல்களாகக் காட்டியிருக்கிறார். இது விமர்சனத்துக்கு உள்ளாகும் என்பதை நன்கு அறிந்திருந்தும் அதிலிருந்து தப்பித்துக்கொள்ள, அவை வாழ்ந்தது அந்நியர்கள் ஆட்சிசெய்த காலக்கட்டம் என்கிற ‘பீரியட் ஃபிலிம்’ முகமூடிக்குள் தன் கதையாடலை ஒளித்து வைத்திருக்கிறார்.
கதைக் களத்தில் எலிசபெத்தும் கங்காவும் வன்மத்துடன் காத்திருந்து ஒருவரை அடுத்தவர் பழிவாங்கிக்கொள்கிறார்கள். தன் இருப்பை இல்லாமல் ஆக்கிய கங்காவைக் கொல்ல, அவளுக்கு நெருக்கமான இன்னொரு பெண்ணான நதியாவை மிரட்டியே அவளைக் கொல்லும்படி செய்கிறாள் எலிசபெத். தான் துப்பாக்கி முனையில் செய்த கொலையின் குற்றவுணர்வுடன் பத்து வயது மகனை, பொறுப்பற்ற ஒரு குடிகார ‘டானா’கிய அவனது உயிரியல் தந்தை பார்த்துக்கொள்வான் என அசட்டுத்தனமாக நம்பி, உடலில் வெடிகுண்டைக் கட்டிக்கொண்டு தன்னைத் தானே கொலை செய்துகொள்கிறாள் நதியா.
விளிம்புக்குத் தள்ளப்படும் பெண்கள்: கங்கா, தன் தம்பியின் வயிற்றுப் பசியைத் தீர்க்கத் தன் உடலை விற்றுச் சோறிட்டாள் என்கிற சித்தரிப்பும் அதை ராயா புகழ்ந்துசொல்வதும் ஒரு பெண் இயக்குநரின் பார்வையாக ஒருபோதும் இருக்க வாய்ப்பில்லை. யாஷும் சேர்ந்துதான் திரைக்கதை எழுதினார் என கீது தப்பித்துக்கொள்ளக்கூடும். ஆனால், யாஷ் ஏற்ற ராயா கதாபாத்திரம் தன் வாழ்க்கைக்குள் வந்துசெல்லும் பெண்களை விளிம்பு நிலைக்குத் தள்ளுவதும் அவனது நிழலில் ஒடுங்க வைப்பதும் ஒரு பெண் இயக்குநரிடம் வெளிப்பட்டுள்ள ஆணாதிக்கப் பார்வையாகவே கொள்ளப்படும்.
கங்கா (நயன்தாரா), நதியா (கியாரா அத்வானி), ரெபேக்கா (தாரா சுதாரியா), எலிசபெத் (ஹுமா குரேஷி), மெலிசா (ருக்மணி வசந்த்) எனப் பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியப் பெண் கதாபாத்திரங்களை ஏற்றிருந்தபோதும் அவற்றின் ஒட்டுமொத்த இருப்பும் நாயகன் ராயாவை (யாஷ்) மையமாகக் கொண்டே கட்டமைக்கப்பட்டுள்ளது. இக்கதாபாத்திரங்களுக்கு இயக்குநர் கீது கொடுத்திருக்கும் தனித்துவமான அடையாளங்கள் அனைத்துமே ஆண்களின் வன்முறையை ஆராதிப்பவையாகவும் அதற்குப் பயந்து பின்வாங்கு பவையாகவும் அவர்களின் பாலியல் இச்சைக்குப் பலியாடுகளாகவும் சுருக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஐந்து கதாபாத்திரங்கள் எடுக்கும் முடிவுகளும் எதேச்சாதிகாரம் மிக்க ஆண் மைய உலகத்தால் தீர்மானிக்கப்படுகின்றன. ஒரு திரைப்படத்தின் உரையாடல்கள் அது கொண்டுள்ள கதாபாத்திரங்களின் உளவியலைப் பிரதிபலிப்பவை. இப்படத்தில் அவை பேசும் பல வசனங்களும் அவை காட்டும் உணர்வு வண்ணங்களும் ஆண்களின் அகந்தைக்குத் தீனிபோடும் கருவிகளாகவே சித்தரிக்கப்பட்டுள்ளன. ‘பெண் இயக்குநர்’ என்கிற முத்திரைக்கு வலிமை சேர்க்கப் படத்தின் இறுதிக் கட்டத்தில் அமைதியான வாழ்க்கைக்கு வன்முறை ஒருபோதும் தீர்வாகாது என்பதைச் சொல்ல முயலும்போது, பெண்களை அந்த வன்முறைத் தீயில் எரித்துச் சாம்பலாக்கியிருப்பது கீது மோகன்தாஸ் என்கிற இயக்குநரைக் காணாமல் அடித்திருக்கிறது.