பெண் இன்று

புகுந்த வீட்டு ‘அம்மூம்மா’! | ஆயிரத்தில் ஒருவர்

Guest Author

நான் சென்னை உயர் நீதிமன்றத்தில் 24 ஆண்டுகளாக வழக்குரைஞராக இருக்கிறேன். பிறந்தது கோவையில் என்றாலும் சிறு வயது முதல் படித்தது, வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான். எனக்குத் திருமணமாகி பல்லாவரத்தில் உள்ள என் இணையர் வீட்டில் குடியேறினேன். எல்லாப் பெண்களைப் போல் எனக்கும் புதிய வீட்டில் அனைவரிடத்திலும் சகஜமாகப் பேசுவதில், பழகுவதில் சற்றுத் தயக்கம் இருந்தது. அந்தச் சூழலில் எனக்கு அரவணைப்பாகவும் ஆறுதலாகவும் இருந்தவர் என் இணையரின் 77 வயது பாட்டி சரஸ்வதியம்மாதான்.

என் மாமனார் தொழிற்சங்கத் தலைவராக அறியப் பட்டாலும், அவரைவிடப் அப்பகுதியில் மிகவும் பிரபலமானவர் அவரது அம்மா சரஸ்வதியம்மா என்கிற அம்மூம்மா. அனைவரையும் சிரித்த முகத்துடன் வரவேற்பதும் அன்பு பாராட்டுவதும் அவரது இயல்பு. அப்பகுதிக்கு வரும் வியாபாரிகள் அனைவருக்கும் அறிமுகமானவர். முன்பின் அறிமுகம் இல்லாதவர்களிடமும் கனிவுடன் பேசுவார். அவர்கள் பசியோடு இருந்தால் உணவளித்து உதவுவார்.

நாளிதழ்கள் முதல் வாரப் பத்திரிகைகள்வரை அனைத்தையும் ஆர்வமாகப் படித்துக் காட்டுவார். இதில் சுவாரசியம் என்னவென்றால் தமிழ்நாட்டுக்கு வந்த பின்தான் அவர் தமிழ் மொழியையே படிக்கக் கற்றுக்கொண்டிருக்கிறார்.

அருமையான கைப்பக்குவத்தில் மிளகாய்ச் சம்மந்தி, ஸ்ட்யூ, மீன் கறி எனச் சைவ, அசைவ உணவு வகைகளை நொடிப்பொழுதில் சமைத்து அசத்துவார். அவருக்கு இயற்கை வைத்தியம் தெரிந்திருந்ததால் மக்களுக்கு இலவசமாக உதவுவார். அவருடன் இருந்த காலம் கொஞ்சம்தான் என்றாலும், அவர் விட்டுச் சென்ற பசுமையான நினைவுகள் இன்னும் கண்ணில் நிழலாடுகின்றன. - வா.பொற்கொடி, சென்னை.

SCROLL FOR NEXT