சென்னையில் வசித்தவர் கௌரி அத்தை. அந்தக் காலத்தில் கிராமங்களில் இருந்து சென்னைக்கு வரும் எங்களைப் போன்ற உறவினர்களை முகம் சுளிக்காமல் உற்சாகமாகக் கடற்கரை, மாமல்லபுரம், பிரசித்தி பெற்ற கோயில்கள் என அழைத்துச் செல்வார். அதிகாலையிலே எழுந்து உணவு தயாரிப்பில் சுறுசுறுப்பாகிவிடுவார். இட்லி காய்ந்துவிடாமல் இருக்க இட்லியைச் சுற்றி நல்லெண்ணெய்யைத் தடவி வைப்பார். பூண்டுத் துவையல் எண்ணெய்யில் மிதக்கும்.
எலுமிச்சை - தயிர் சாதமும் ரெடியாகிவிடும். அத்தை இவ்வளவையும் சமைத்து வைத்ததைப் பார்த்துவிட்டுச் சிலர் பார்சல்களைத் தூக்கக் கொஞ்சம் முனங்குவார்கள்.
பேருந்து எண்கள், நிறுத்தங்கள் எல்லாம் கௌரி அத்தைக்கு தலைகீழ் பாடங்கள். எங்களை ஒரு தலைமை ஆசிரியரைப் போல வழிநடத்துவார். வாடகை கார் தராத மகிழ்வை அரசுப் பேருந்தில் தந்தவர் இவர். ஏதாவது விவரம், விசாரணை என்றால் தயங்காமல் முன்நிற்பார்.
சாப்பிடும்போது இட்லியும் எண்ணெயில் ஊறிய பூண்டுத் துவையலும் தேவாமிர்தம்தான். பார்சல்களைச் சுமந்துவந்த எரிச்சல் மாறி மனநிறைவுதான் மேலோங்கும். இப்போது பார்க்க இடங்கள் ஏராளம், போக்குவரத்து வசதிகள் தாராளம். ஆனாலும் பார்த்துப் பார்த்து வழிநடத்தும் வானவில் மனுஷியான எங்கள் கௌரி அத்தை இல்லையே. - வேலம்மாள் முத்துக்குமார், பணகுடி.