நலம் வாழ

தூக்கத்தைக் கெடுக்கும் திறன்பேசிகள்

செய்திப்பிரிவு

இரவு 9 மணி ஆனாலே தூங்குவதற்குப் படுக்கைக்குச் சென்றது பழங்கதையாகிவிட்டது. இன்று இரவில் வெகுநேரம் திறன்பேசியில் மூழ்கிக் கிடப்பது, தொலைக்காட்சித் தொடர்கள் - ஓடிடியில் படங்கள் பார்ப்பது அதிகரித்துவிட்டது.

இதனால், மிகவும் தாமதமாகவே பலரும் தூங்கச் செல்கிறார்கள். தூக்கத்தை இழந்து வெகுநேரம் திறன்பேசியில் நேரத்தைக் கழிப்பது உடல் - மனரீதியாகப் பாதிப்பை ஏற்படுத்துவதுடன் அறிவாற்றல் திறனையும் குலைக்கும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

மனிதனின் வாழ்க்கை முறை எவ்வளவு மாறியிருந்தாலும் உடல் பல ஆயிரம் ஆண்டுகளாக இரவில் தூங்கவே பழக்கப்பட்டுள்ளது. அதை வலுக்கட்டாயமாக மாற்றினால், உடலில் சுரப்பிகளின் சமநிலையின்மை உருவாகிவிடலாம்.

அதிக நேரம் திறன்பேசித் திரையைப் பார்ப்பதால், மூளையிலும் பாதிப்பு ஏற்படலாம் என்றும் மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. திரையிலிருந்து வரும் நீலநிற வெளிச்சத்தைக் கண்கள் நீண்ட நேரத்துக்குப் பார்க்கும்போது, இன்னும் இரவு நேரம் வரவில்லை என்று மூளை கருதி, உடல் ஓய்வெடுக்கத் தயார் ஆகாது.

எனவே, படுப்பதற்கு இரண்டு மணிநேரம் முன்பாகவே திறன்பேசியைத் தொலைவில் வைத்துவிட வேண்டும்.

இரவில் கூடுதலாகத் திரையைப் பார்த்தால் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் மனப் பதற்றம். மனச்சோர்வு 10% அதிகரிக்கிறது என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். எனவே, இனி இரவில் சரியான நேரத்துக்குள் தூங்கச் செல்வதை உறுதிப்படுத்துவோம்.

SCROLL FOR NEXT