

மதராஸ் மூங்கணத்தான் | படம் உதவி: டேவிட் ராஜு |
காட்டில் ஓடும் அந்தச் சிறிய உயிரினத்தைப் பார்த்தவுடன், ‘அணில்!’ என்று பலரும் நினைக்கலாம். ஆனால், அந்த உயிரினம் அணில் அல்ல. அதைவிட ஆச்சரியமான ஓர் உயிரினம், கோடிக்கணக்கான ஆண்டுக் காலப் பரிணாம வரலாற்றைச் சுமந்து நிற்கும் மூங்கணத்தானாக அது இருக்கலாம்.
நீண்ட மூக்கு, பெரிய கண்கள், வட்டமான காதுகள், மெலிந்த உடல், நீண்ட வால் என அணிலைப் போன்ற தோற்றத்தில் இருந்தாலும், மூங்கணத்தான் அணிலும் அல்ல; அணிலைப் போல இவற்றின் உடலின் மேல் கோடுகளும் இல்லை.
இது மூஞ்சூறும் அல்ல. Scandentia என்கிற தனித்துவமான பாலூட்டி வரிசையைச் சேர்ந்த இவை தெற்கு, தென்கிழக்கு ஆசியாவில் காணப்படுகின்றன. இந்தியாவில் மதராஸ் மூங்கணத்தான் (Anathana ellioti), வடக்கு மூங்கணத்தான் (Tupaia belangeri), நிக்கோபார் மூங்கணத்தான் (Tupaia nicobarica) குறிப்பிடத்தக்கவை. தமிழகத்தின் கிழக்குத் தொடர்ச்சி மலையில் பரவலாகக் காணப்படக்கூடிய ஒரு விலங்கு இது. சேர்வராயன் மலை, கொல்லி மலைப்பகுதியில் இவற்றைக் காணலாம்.
உடல் அமைப்பில் தனித்துவம்
மதராஸ் மூங்கணத்தான் உடலின் நீளம் பொதுவாக 14–23 செ.மீ. அளவிலும், எடை சுமார் 90–160 கிராம் வரையிலும் இருக்கும். உடலைவிட வால் நீளமாக இருக்கக்கூடும்.
நீண்ட மூக்கு, கூர்மையான நகங்கள், துல்லியமான பார்வை, நன்கு வளர்ந்த உணர்திறன்கள் போன்றவை அதன் வாழ்க்கை முறைக்கு ஏற்றவாறு அமைந்துள்ளன.
மரங்களில் மட்டுமே வாழும் உயிரினம் என்கிற பெயர் இருந்தாலும், எல்லா மூங்கணத்தான்களும் மர வாழ் உயிரினங்கள் அல்ல. சில இனங்கள் தரையில் அதிக நேரம் செலவிடுகின்றன. இலைக் குப்பைகள், மரப்பொந்துகள், பாறை இடுக்குகள், அடர்ந்த காட்டுப் பகுதிகள் போன்றவை அவற்றுக்கு முக்கியமான வாழிடங்கள்.
எதை உண்கின்றன?
கிடைக்கும் உணவை உண்ணக்கூடிய அனைத்துண்ணி மூங்கணத்தான். பூச்சிகள், சிறிய முதுகெலும்பில்லா உயிரினங்களுடன் பழங்கள், விதைகள் போன்ற தாவர உணவு வகைகளையும் உட்கொள்கின்றன.
சிறிய பல்லிகள், சிறிய பாலூட்டிகள் அல்லது பறவைக் குஞ்சுகளையும் உண்ணும். உணவை முன்கால்களால் பிடித்துக்கொண்டு உண்பது அவற்றின் குறிப்பிடத்தக்க நடத்தைகளில் ஒன்று.
இந்த உணவுப் பழக்கம் காட்டின் உணவுச் சங்கிலியில் முக்கியமான சிறிய வேட்டையாடியாகவும்,விதைப்பரவலில் பங்காற்றும் உயிரினமாகவும் அவற்றை மாற்றுகிறது.