வெர்டிகோ (Vertigo) என்கிற தலைசுற்றல் பிரச்சினை களைப் பலரும் எதிர்கொள்கிறார்கள். இதனால், பாதிக்கப்பட்ட நபருக்கு உடல் சமநிலை இழப்பு, குமட்டல், வாந்தி, கிறுகிறுப்பு, கீழே விழும் நிலை போன்ற அறிகுறிகள் ஏற்படும்.
உடலைச் சமநிலைப்படுத்த உதவும் உறுப்புகளில் முக்கியமானவை காதுகள்தான். நம் உடலைச் சமநிலையில் வைப்பதற்கு இரண்டு காதுகளிலும் மூன்று அரைவட்ட, மோதிர வடிவிலான குழாய்கள் உள்ளன. அக்குழாய்களில் ‘எண்டோலிம்ப்’ என்கிற சிறப்பு வாய்ந்த திரவம் உள்ளது.
இதில் பொட்டாசியம் மிகுதியாகவும் சோடியம் குறைவாகவும் உள்ளது. இது வற்றாத திரவம். தலையை மேலும் கீழும்; வலம் இடமாகத் திருப்பும் போது எல்லாம் எதிர்திசையில் இத்திரவம் நகர்ந்து தலை அசைகிற செய்தியை நரம்பின் மூலம் மூளைக்குக் கடத்தும்.
இந்தத் திரவம் தன்னிச்சையாகச் சுழலும்போதுதான் தலைசுற்றல் ஏற்படுகிறது. படுத்திருந்தால் வீடே சுற்றுவதுபோல இருக்கும்.
புரியும்படி சொல்ல வேண்டுமென்றால், ஒரு கோப்பையில் தண்ணீரை நிரப்பி அதைச் சுழற்றினால் கோப்பையில் நீர் சுற்றும்; கோப்பை சுற்றுவதை நிறுத்திய பிறகும் தண்ணீர் மட்டும் சிறிது நேரத்துக்குச் சுற்றிக்கொண்டே இருக்கும் அல்லவா? அப்படித்தான் இந்தத் தலைசுற்றல் இருக்கும்.