

கணையம் அல்லது பித்தநீர்ப் பாதை தொடர்பான நோய்களுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர் பரிந்துரைத்தால், ‘பெரிய அறுவைசிகிச்சை’ என்கிற எண்ணம் பலருக்கும் ஏற்படுவது இயல்பு. அறுவைசிகிச்சை என்றால் ‘ஓபன் சர்ஜரி’தான் செய்ய வேண்டுமா, குணமடைய எவ்வளவு காலம் ஆகும் என்பன போன்ற கேள்விகளும் நோயாளிகளிடம் எழும்.
சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் உடலைக் கிழித்து மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சை (Open Surgery) பாதுகாப்பான அணுகுமுறையாக உள்ளது. அதேவேளையில், லேப்ராஸ்கோபிக், ரோபாட்டிக் அறுவை சிகிச்சை முறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற் றங்களால், பல அறுவைசிகிச்சைகளைத் தற்போது மிகச் சிறிய கீறல்கள் மூலமே மேற்கொள்ள முடிகிறது.
பொதுவாக ‘கணையம், பித்தநீர்ப் பாதை நோய்கள்’ என்கிற பிரிவில் அறுவைசிகிச்சை மேற்கொள்வது சவாலானது. காரணம், கணையம் வயிற்றுப் பகுதியில் ஆழமாகவும் கல்லீரல், குடலுக்கு ரத்தத்தை வழங்கும் முக்கிய ரத்த நாளங் களுக்கு மிக அருகிலும் அமைந்துள்ளன.
செரிமானச் சாறுகளை எடுத்துச்செல்லும் கணையக் குழாய் (Pancreatic Duct) சில மில்லிமீட்டர் மட்டுமே அகலம் கொண்ட மிகச் சிறிய அமைப்பு. எனவே, திசுக்களைப் பிரிப்பது அல்லது மிகச் சிறிய அமைப்புகளை ஒன்றுடன் மற்றதை மீண்டும் இணைப்பது போன்ற பணிகளுக்கு அறுவைசிகிச்சை நிபுணருக்கு அதிக அனுபவமும் திறமையும் தேவை.
நோயாளிக்கு ஏற்ற சிகிச்சை
எந்த வகையான அறுவைசிகிச்சையைத் தேர்வுசெய்வது என்பது நோயின் தன்மையைப் பொறுத்தது. பாதிப்பு எந்தப் பகுதியில் உள்ளது, உறுப்பில் எவ்வளவு பகுதி பாதிக்கப் பட்டுள்ளது, அருகில் உள்ள உறுப்புகள்/ரத்த நாளங்கள் பாதிக்கப்பட்டுள்ளனவா, நோயாளியின் ஒட்டு மொத்த உடல்நிலை எப்படி உள்ளது, மிகச் சிறிய அமைப்புகளை மீண்டும் இணைக்க வேண்டியுள்ளதா என்பது போன்ற பல்வேறு அம்சங்களை அறுவைசிகிச்சை நிபுணர் கவனத்தில் கொள்கிறார்.
அதிநவீனத் தொழில்நுட்ப வசதி இருப்பதால், அதைப் பயன்படுத்துவது மட்டுமே நோக்கமாக இருக்கக் கூடாது. குறிப்பிட்ட நோயாளிக்கு எந்த முறையில் அறுவைசிகிச்சை செய்தால் பாது காப்பும் பலனும் அளிக்க முடியும் என்பதுதான் முக்கியம்.