சாதாரணக் கொசு, டெங்குக் கொசு
ஒவ்வோர் ஆண்டும் ஜூலை - டிசம்பர் காலக்கட்டத்தில் டெங்கு காய்ச்சலால் குழந்தைகள் அதிகமாகப் பாதிக்கப்படுவதைப் பார்க்க முடிகிறது. இந்த ஆண்டில் ஆகஸ்ட் வரை 12,543 பேருக்கு டெங்கு பாதிப்பு இருந்தது.
இதுவரை இந்த ஆண்டில் 4 டெங்கு இறப்புகள் பதிவாகி உள்ளன. மாவட்ட அளவில் சென்னையில்தான் டெங்கு பாதிப்பு அதிகம். கோவை, காஞ்சிபுரம், ஈரோடு, திருவள்ளூர், தென்காசியிலும் டெங்கு பாதிப்பு அதிகமாக உள்ளது என்று அரசு தெரிவிக்கிறது. டெங்குவிலிருந்து நம்மைக் காக்கும் வழியைத் தெரிந்துகொள்வோம்.
டெங்கு அறிகுறிகள்
டெங்கு காய்ச்சல் என்பது ஏடிஸ் என்கிற கொசுக்கள் மூலம் பரவக்கூடிய ஒரு தீவிரமான வைரஸ் நோய். தூய்மையான, தேங்கி நிற்கும் தண்ணீரில் இந்தக் கொசுக்கள் இனப்பெருக்கம் செய்கின்றன.
உரிய விழிப்புணர்வுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டால் டெங்கு பரவலை முற்றிலும் தடுக்க முடியும்.
திடீரென ஏற்படும் அதிகப்படியான காய்ச்சல், கடுமையான தலைவலி, கண் விழிகளுக்குப் பின்னால் வலி, எலும்பு, தசை, மூட்டுகளில் கடுமையான வலி, கடுமையான சோர்வு, வாந்தி உணர்வு, உடலில் சிவப்பு நிறப் புள்ளிகள் - தடிப்புகள் ஏற்படுதல் போன்றவை டெங்குவின் அறிகுறிகள்.
முக்கியமான கட்டம்
டெங்குவில் மிகவும் ஆபத்தான காலக்கட்டம் என்பது காய்ச்சல் குறையும்போதுதான் (பொதுவாக அறிகுறிகள் தொடங்கிய 3 முதல் 8 நாள்களுக்குப் பிறகு) இருக்கும். இது நெருக்கடியான கட்டம் (Critical phase) என்றழைக்கப்படுகிறது. இந்தக் கட்டத்தில் ரத்த நாளங்களில் இருந்து பிளாஸ்மா கசிவதால் உறுப்புச் செயலிழப்பு, உள் ரத்தப் போக்கு, உயிரிழப்பு போன்றவை ஏற்படலாம்.
எச்சரிக்கை அறிகுறிகள்
கடுமையான வயிற்று வலி, தொடர்ச்சியான வாந்தி (24 மணி நேரத்தில் குறைந்தது 3 முறை), ஈறுகள் அல்லது மூக்கிலிருந்து ரத்தம் வருதல், வாந்தி அல்லது மலத்தில் ரத்தம், அதீதச் சோர்வு, அமைதியின்மை அல்லது குழப்பம், வேகமாகச் சுவாசித்தல் அல்லது சுவாசிப்பதில் சிரமம், திரவம் தேங்குதல் (வயிற்றில் அல்லது கை கால்களில் ஏற்படும் வீக்கம்) போன்றவை எச்சரிக்கை அறிகுறிகள்.
மருந்துகள் என்னென்ன?
அதிகக் காய்ச்சல், உடல் வலியை நிர்வகிக்க பாராசிட்டமால் பயன்படுத்திக் கொள்ளலாம். டெங்குவின்போது இபுப்ரோஃபென், ஆஸ்பிரின் போன்ற NSAIDs மருந்துகளை உட்கொள்ள வேண்டாம். இந்த மருந்துகள் கடுமையான ரத்தப்போக்கு ஏற்படும் அபாயத்தை அதிகரித்துவிடும்.
டெங்கு ஒரு வைரஸ் நோய் என்பதால் நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் (ஆன்டிபயாடிக்) பலனளிக்காது. அதைப்போல ஸ்டீராய்டுகள் பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும் என உலகச் சுகாதார நிறுவனம் வலியுறுத்துகிறது.
நீரிழப்பு, கடுமையான பிளாஸ்மா கசிவு ஆகியவை டெங்கு அதிர்ச்சிக்கு முக்கியக் காரணிகள். எனவே உடலில் நீர்ச்சத்து, எலெக்ட்ரோலைட் சமநிலையைப் பராமரிக்க ஓ.ஆர்.எஸ். கரைசல், இளநீர், சூப்புகள், பழச்சாறுகள் போன்ற திரவங்களை அதிகமாகப் பருக வேண்டும்.
தொடர்ச்சியான வாந்தியின் காரணமாக ஒரு நோயாளியால் திரவங்களை உடலில் தக்கவைக்க முடியாவிட்டால், அவருக்கு நரம்பு வழி (IV) திரவ சிகிச்சைக்காக உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட வேண்டும்.
தடுப்பு என்ன?
மருத்துவரின் வழிகாட்டுதலின் கீழ் ரத்தப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். ரத்தத் தட்டுகளின் எண்ணிக்கை, ஹீமோகுளோபின் அளவைத் (ரத்தத்தில் உள்ள திரவங்களின் அளவு) தவறாமல் கண்காணிப்பது, கடுமையான சிக்கல்கள், உயிருக்கு ஆபத்தான நிலையை அடைவதற்கு முன்பே அவற்றைக் கண்டறிய மருத்துவர்களுக்கு உதவுகிறது.
ரத்தத் தட்டுகளின் எண்ணிக்கை குறையும்போது, உடல் உழைப்பு உடலுக்குச் சிரமத்தை ஏற்படுத்துகிறது. அதனால் முழு ஓய்வு எடுப்பது நல்லது. வீட்டில் யாருக்காவது ஏற்கெனவே டெங்கு இருந்தால், அவர்கள் கொசு வலைக்குக் கீழ் உறங்க வேண்டும்.
கொசு விரட்டியைப் பயன்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட நபரைக் கொசு கடித்தால், அது மற்ற குடும்ப உறுப்பினர்களுக்கு வைரஸைப் பரப்பி, அடுத்தடுத்த நோய்த் தொற்று களின் அபாயத்தை அதிகரிக்கும்.
வெவ்வேறு வகைகளால் ஏற்படும் இரண்டாவது முறை டெங்கு நோய்த் தொற்றுகள், உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடிய டெங்கு ரத்தக் கசிவுக் காய்ச்சலாக உருமாறுவதற்கான மிக அதிக அபாயத்தைக் கொண்டுள்ளன.
பாதுகாப்பு வழிமுறைகள்
வீட்டில் தண்ணீர் சேமித்து வைக்கும் குடிநீர்த் தொட்டிகள், குடங்கள், டிரம்கள், பாத்திரங்களை இறுக்கமாக மூடி வையுங்கள். வீட்டைச் சுற்றியுள்ள டயர்கள், உடைந்த பிளாஸ்டிக் பொருள்கள், தேங்காய்ச் சிரட்டைகள் போன்ற தண்ணீர் தேங்க வாய்ப்புள்ள பொருள்களை அப்புறப்படுத்த வேண்டும். பூந்தொட்டிகளின் கீழ் உள்ள தட்டுகள், குளிர்சாதனப்பெட்டியில் பின்புறம் உள்ள நீர் தேங்கும் தட்டு ஆகியவற்றை வாரம் ஒருமுறை சுத்தம் செய்ய வேண்டும்.
ஜன்னல், கதவுகளில் கொசு வலைகளைப் பொருத்தலாம். பகலில் முழு உடலையும் மூடும் விதத்தில் நீளமான ஆடைகளை அணியுங்கள். டெங்கு காய்ச்சலின்போது தேவையான ரத்தப் பரிசோதனைகளும், முழுமையான சிகிச்சைகளும் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இலவசமாகக் கிடைக்கின்றன. பாதிக்கப்படுபவர்களை தொடக்கத்திலேயே அழைத்து வந்து டெங்கு தாக்கத்திலிருந்து விடுவிப்பது நல்லது.
டெங்குக் கொசுவும் சாதாரணக் கொசுவும்
டெங்குக் கொசுவில் (Aedes) கறுப்பு உடலில் வெள்ளைக் கோடுகள் (White stripes) கால்களிலும் உடலிலும் இருக்கும். சாதாரணக் கொசுக்கள் (Culex / Anopheles) பழுப்பு அல்லது சாம்பல் நிறத்தில் இருக்கும். உடலில் பிரத்யேக அடையாளங்கள் இருக்காது.
டெங்குக் கொசு முதன்மையாகப் பகல் நேரத்தில் கடிக்கும். சாதாரணக் கொசுக்கள் பெரும்பாலும் இரவு, அந்திப் பொழுதுகளில் கடிக்கும். டெங்குக் கொசு வீடுகளில் உள்ள சுத்தமான, தேங்கிய நீரில் (பூந்தொட்டி, டயர், மொட்டைமாடி, குடங்கள்) வளரும். சாதாரணக் கொசு சாக்கடை, அழுக்கு நீர், வாய்க்கால்கள், குப்பைக் கூடங்களில் இனப்பெருக்கம் செய்யும்.
டெங்குக் கொசுக்கள் டெங்கு காய்ச்சல், சிக்குன்குனியா, ஸிகா வைரஸ் நோய்களைப் பரப்பும். சாதாரணக் கொசுக்கள் மலேரியா, யானைக்கால் நோயை ஏற்படுத்தும்.
- கட்டுரையாளர்: இணைப் பேராசிரியர், குழந்தைகள் நலத்துறை; sppillai26@yahoo.co.inv