செளரவ் குமார் (9) - பிஹாரைச் சேர்ந்தவர். கிராமத்தில் உள்ள ஆற்றுநீரில் எதிர்பாராமல் 3 சிறுமிகள் விழுந்து, தத்தளித்தனர். அது ஆழமான பகுதி என்பதால் பலரும் ஆற்றில் இறங்க தயங்கினர்.
சட்டென்று ஆற்றில் குதித்து, மூன்று சிறுமிகளையும் ஒருவர் பின் ஒருவராகக் கரைசேர்த்தார் செளரவ் குமார். இந்த வீரதீரச் செயலைப் பாராட்டி, பிரதம மந்திரியின் ராஷ்டிரிய பால புரஸ்கார் விருது, குடியரசுத் தலைவரால் வழங்கப்பட்டது.
ஏ.எஸ். ஷர்வாணிகா (10) - அரியலூர் மாவட்டம் உடையார் பாளையத்தைச் சேர்ந்தவர். கஸகஸ்தானில் நடைபெற்ற 10 வயதுக்கு உள்பட்டோருக்கான கேடட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார்! இதன் மூலம் 10 வயதுக்கு உள்பட்டோருக்கான பிரிவில் பதக்கம் வென்ற மூன்றாவது வீராங்கனை என்கிற சிறப்பையும் பெற்றார்.
வைபவ் சூர்யவன்ஷி (14) - பிஹாரைச் சேர்ந்தவர். இந்தியாவின் இளம் கிரிக்கெட்வீரர். 9 வயதிலேயே கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க ஆரம்பித்தார். 12 வயதில் பிஹாருக்காக ரஞ்சிக் கோப்பையில் விளையாடியவர்.
13 வயதில் ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதற்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் சேர்க்கப்பட்டார்.டி20 போட்டியில் சதம் அடித்த இளம் வீரர் என்கிற சாதனையை இந்த ஆண்டு படைத்தார்.
ஜியா தோஷி (17) - மும்பையைச் சேர்ந்த ஆங்கில எழுத்தாளர். 5 வயதிலிருந்தே எழுத ஆரம்பித்துவிட்டார். 2 நாவல்களும் ஒரு கவிதைத் தொகுப்பும் வெளிவந்துள்ளன. 2025ஆம் ஆண்டுக்கான ‘சர்வதேச கோல்டன் புக்அவார்டு’ இவரது முதல் நாவலுக்குக் (Huntress of the Gloom: Lost Lands of Elysia) கிடைத்திருக்கிறது.
இதே நூலுக்கு 18 வயதுக்கு உள்பட்ட இளம் எழுத்தாளர் விருதும் கிடைத்திருக்கிறது. இந்த ஆண்டுக்கான டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் Unstoppable 21 என்கிற விருதும் இவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
தேஜஸ்வி மனோஜ் (17) - அமெரிக்காவின் டெக்சாஸில் வசிக்கிறார். இந்திய வம்சா வளியைச் சேர்ந்த கண்டு பிடிப் பாளர். இணைய மோசடிகளில் இருந்து முதியோரைப் பாதுகாக்கும் விதத்தில் Shield Seniors என்கிற செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான தளத்தை உருவாக்கியிருக்கிறார்.
இந்த ஆண்டுக்கான டைம் இதழின் Kid of the Year ஆக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். தனது சமூகப் பங்களிப்புக்காக ‘ Service Star’ என்கிற பட்டத்தைப் பெறும் முதல் நபராகவும் தேஜஸ்வி திகழ்கிறார்.