குறுங்கோள்கள் பூமியைத் தாக்குமா? | வானம் நமக்கொரு போதிமரம் 12

குறுங்கோள்கள் பூமியைத் தாக்குமா? | வானம் நமக்கொரு போதிமரம் 12
Updated on
2 min read

சுமார் 6.6 கோடி ஆண்டுகளுக்கு முன்பு, 10-15 கி.மீ. அகலமுள்ள ஒரு குறுங்கோள் பூமியைத் தாக்கியது. அந்தத் தாக்கத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட பேரலை, எரிமலை வெடிப்புகள், அடர்ந்த தூசி மேகங்கள் டைனசோர்கள் உள்பட, சுமார் 75 சதவீத உயிரினங்களை அழித்துவிட்டன.

இதே போன்று எதிர்காலத்திலும் நிகழக்கூடும். ஒரு பிரம்மாண்டமான குறுங்கோள் பூமியைத் தாக்கும் வாய்ப்புகள் மிகக் குறைவு. ஆனால், அது நடந்தால் ஏற்படும் பேரழிவு மனித குலத்தை அழித்தொழிக்கக்கூடிய அளவுக்கு இருக்கும். பூமியைத் தாக்க இருக்கும் குறுங்கோளை எதிர்கொள்ள முடியாத நிலையில் டைனசோர்கள் இருந்தன. ஆனால், நாம் இன்று அத்தகைய தாக்கம் நடக்கக்கூடிய சாத்தியம் இருந்தால், அந்த அச்சுறுத்தலை எதிர்கொள்ளத் தயாராகி வருகிறோம்.

பூமியைத் தாக்கக்கூடிய அபாயம் கொண்ட சுமார் 26,115 குறுங்கோள்களை, உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அவற்றின் சுற்றுப்பாதைகள் பூமியை அபாயகரமான அளவில் நெருங்குகின்றனவா என்பதைக் கண்காணிப்பதே இதன் நோக்கம்.

எதிர்காலத்தில் ஏதேனும் ஒரு குறுங்கோள் மோதும் அபாயம் ஏற்பட்டால், ‘உதைத்துத் தள்ளும்’ நுட்ப முறையைக் கொண்டு நம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

2022இல் நாசா இந்த நுட்பத்தைப் பரிசோதித்தது. டிடிமோஸ் என்கிற 780 மீட்டர் அகலமுள்ள முதன்மைக் குறுங்கோளைச் சுற்றிவந்த, 160 மீட்டர் விட்டம் கொண்ட டைமார்போஸ் என்கிற சிறிய குறுங்கோள்மீது, திட்டமிட்ட முறையில் ஒரு விண்கலத்தை அதிவேகத்தில் மோதச் செய்யப்பட்டது. செப்டம்பர் 27, 2022 அன்று காலை 4:44 மணிக்கு (IST), டார்ட் விண்கலம் டைமார்போஸ் மீது நேரடியாக மோதியது.

இந்த மோதலின் விளைவாகக் குறுங்கோளின் உந்தத்தை மாற்றி, அதன் பாதையைத் திசைதிருப்ப முடியுமா என்பதை இந்தச் சோதனை மூலம் ஆய்வு செய்யப்பட்டது. டார்ட் விண்கலம் ஒரு ஆட்டோ ரிக் ஷா அளவுதான்; அதன் எடை 600 கிலோ. ஆனால், டைமார்போஸ் ஒரு கால்பந்தாட்ட மைதானம் அளவு உள்ளதாகவும், ஐந்து பில்லியன் கிலோ நிறை உள்ளதாகவும் இருந்தது.

கொசு மோதினால் யானைக்கு என்ன விளைவு ஏற்படும் என நாம் வியக்கலாம். அதிவேகத்தில் செல்லும் ஒரு மோட்டர் சைக்கிள் லாரியில் மோதினால், சைக்கிள் பெரும் சேதம் அடைவது உறுதி. என்றாலும், அந்த மோதல் லாரியையும் சிறிதளவு திசைதிருப்பும். இதுவே ‘தள்ளுதல்’ நுட்பத்தின் சாரம்.

நிறை குறைவாக இருந்தாலும், மணிக்கு 23,760 கி.மீ. என்கிற மிகைவேகத்தில் மோதியதால் ஏற்பட்ட உந்தம் டைமார்போஸின் கோண உந்தத்தில் சிறிய அளவிலான மாற்றத்தை ஏற்படுத்த போதுமானதாக இருந்தது. இதன் விளைவாக, அந்தக் குறுங்கோளின் வேகம் சற்று அதிகரித்து, அதன் பாதை நகர்ந்து, டிடிமோஸுக்கு நெருக்கமாக வந்தது.

இதன் தொடர்ச்சியாக, முதன்மைக் குறுங்கோளைச் சுற்றி டைமார்போஸ் எடுத்துக்கொண்ட கால அளவு குறைந்தது. இதன் மொத்த விளைவாக, இந்த இரட்டைக் குறுங்கோள்களின் சுற்றுப்பாதை திசைதிருப்பப்பட்டது. வெகு தொலைவில் அதன் பாதையின் கோணம் சிறிதளவு மாறினாலே போதும். நமக்கு அருகே வரும்போது அது பாதுகாப்பான தொலைவில் கடந்து சென்றுவிடும்.

மோதலின் விளைவாக எவ்வளவு உந்த மாற்றம் நிகழும் என்பது, அந்தக் குறுங்கோளின் தன்மையைப் பொறுத்தது. ஒரு பந்தைக் கெட்டியான சுவரை நோக்கியும், ஒரு மணல் குழியை நோக்கியும் எறிவதை ஒப்பிடுங்கள். டைமார்போஸ் கெட்டியான திடப்பொருளாக இருந்திருந்தால், மோதிய விண்கலம் அதன் மேற்பரப்பில் ஒரு குழியை உருவாக்கி, அதன் கோண உந்தத்தில் சிறிய மாற்றத்தை மட்டுமே ஏற்படுத்தியிருக்கும்.

ஆனால் உண்மையில், ஈர்ப்பு விசையால் தளர்வாகப் பிணைக்கப்பட்டுள்ள ஒரு கற்குவியல் போன்ற அமைப்பாக டைமார்போஸ் இருந்தது. எனவே, மணலில் பந்து மோதினால் துகள்கள் சிதறுவது போல, மோதலின் தாக்கம் அந்தக் கற்குவியலில் அலைபோல பரவி, துகள்கள் வெவ்வேறு திசைகளில் சிதறின.

ஒவ்வொரு சிறு துகளும் சிறிதளவு உந்தத்தையும் ஆற்றலையும் எடுத்துச் சென்றதால், குறுங்கோள் கணிசமான உந்த இழப்பைச் சந்தித்தது. இதன் விளைவாக, அதன் பாதையில் கூடுதல் திசைமாற்றம் ஏற்பட்டது. அதாவது, குறுங்கோள் திடமானதாக இருந்தாலும் சுய ஈர்ப்பு விசையால் பிணைக்கப்பட்ட கற்குவியலாக இருந்தாலும், அதன் பாதையை மாற்ற முடியும் என இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

நாசாவைப் பின்பற்றி, சீனா 2026இல் சுமார் 40 மீட்டர் விட்டமுள்ள, பூமியின் வழியே செல்லும் 2020 பி.என்.1 என்கிற குறுங்கோளைத் திசைதிருப்பத் திட்டமிட்டுள்ளது. நாசாவின் அணுகுமுறைக்கு மாறாக, இந்தத் திட்டத்தில் ஒரு மோதும் கலம் (Impactor), ஒரு பார்வையாளர் கலம் (Observer) என இரண்டு விண்கலங்கள் ஈடுபடுத்தப்படும்.

மோதும் கலம் மோதும்போது, பாதுகாப்பான தொலைவிலிருந்து பார்வையாளர் கலம் நிகழ்வை நேரலையில் பதிவுசெய்யும். இதன் மூலம் இந்த வழிமுறையின் செயல்திறனைத் துல்லியமாக அளவிடுவதே இந்தத் திட்டத்தின் நோக்கம்.

இந்த ஆய்வுகளின் தொடர்ச்சியாக, ஒரு நாள் பூமியை நோக்கி வரும் அபாயகரமான குறுங்கோளை, அதன் பாதையில் இருந்து பாதுகாப்பாகத் திசைதிருப்பி, ஒரு பேரழிவு மோதலில் இருந்து மனிதகுலத்தைக் காப்பாற்ற இயலும்.

(அறிவோம்)

- tvv123@gmail.com

குறுங்கோள்கள் பூமியைத் தாக்குமா? | வானம் நமக்கொரு போதிமரம் 12
விண்வெளிக் குப்பையால் பூமிக்கு ஆபத்தா? | வானம் நமக்கொரு போதிமரம் 11

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in