மாயா பஜார்

மரத்தில் பாயும் மின்சாரம் ஏன் மரக்கட்டையில் பாய்வதில்லை? | டிங்குவிடம் கேளுங்கள்

Guest Author

பூமியில் நீர் வற்றிவிட்டால் என்ன ஆகும், டிங்கு? - எஸ். அருனித், 8-ம் வகுப்பு, எஸ்.ஆர்.வி. பப்ளிக் மேல்நிலைப் பள்ளி, சமயபுரம்.

உங்கள் கேள்வியைப் படிக்கும் போதே அச்சமாக இருக்கிறது. காற்றும் நீரும் இருப்பதால்தான் பூமி உயிர்கள் வாழக்கூடிய கோளாக இருக்கிறது. உயிரினங்களின் உடல் கணிசமான அளவு நீரால் ஆனது. பூமியில் நீர் வற்றிவிட்டால் உயினங்கள் சில நாள்களிலேயே இறந்துவிட நேரிடும்.

தாவரங்கள் அழிந்துவிட்டால் ஆக்சிஜனின் அளவு குறைந்து கார்பன் டைஆக்சைடின் அளவு அதிகரித்து விடும். இதனால் எஞ்சியிருக்கும் உயிரினங்களும் மடிந்துபோகும்.

குளங்கள், ஆறுகள், கடல்களில் நீர் இல்லாமல் போனால், வெப்பநிலை தாங்கிக்கொள்ள இயலாத அளவுக்குச் சென்றுவிடும். நீர்நிலைகள் இல்லாததால் நீராவி, மேகம், மழை என்பதெல்லாம் இல்லாமல் போய்விடும். அதிக வெப்பத்தால் காய்ந்துபோன மரங்கள் தீப்பற்றி எரியும். பூமியே பாலைவனமாகிவிடும், அனிருத்.

தண்ணீரில் மின்சாரம் பாய்கிறது. ஆனால், தண்ணீர் ஊற்றி வளர்ந்த மரக்கட்டையில் ஏன் மின்சாரம் பாய்வதில்லை, டிங்கு? - ஜெ. பாலவிக்னேஸ்வரன், 7-ம் வகுப்பு, ஊ.ஒ.ந.நிலைப் பள்ளி. தங்களாச்சேரி. மதுரை.

நல்ல கேள்வி பாலவிக்னேஸ்வரன். தண்ணீர் மின்சாரத்தைக் கடத்துவது உண்மைதான். ஆனால், தூய்மையான தண்ணீர் மின்சாரத்தைக் கடத்தாது. தண்ணீரில் கலந்துள்ள உப்புகளும் தாதுக்களும்தான் மின்சாரத்தைக் கடத்துகின்றன.

மரங்கள் தண்ணீரை உறிஞ்சும்போது தண்ணீரில் கலந்துள்ள உப்புகளும் தாதுக்களும் உள்ளே சென்றுவிடும். அதனால் பச்சை மரங்கள் மின்சாரத்தைக் கடத்துகின்றன.

ஆனால், காய்ந்த மரக்கட்டைகளில் நீர்ச்சத்து இல்லை என்பதால், அவை மின்சாரத்தைக் கடத்துவதில்லை. அதனால்தான் மின்சாரம் தொடர்பான வேலைகளில் ஈடுபடும்போது, மரக்கட்டை அல்லது மரத்தால் செய்யப்பட்ட முக்காலி மீது நின்றுகொண்டு வேலை செய்யச் சொல்கிறார்கள்.

வயதானால் முடிகள் நரைப்பது ஏன், டிங்கு? – சு. அஷ்மிதா, 8-ம் வகுப்பு, புனித அந்தோணியார் மெட்ரிக். பள்ளி, கோவை.

நம் முடிக்கால்களில் மெலனோ சைட்டுகள் என்கிற செல்கள் இருக்கின்றன. இவை மெலனின் என்கிற நிறமியை உற்பத்தி செய்கின்றன. இந்த மெலனின்தான் முடிக்குக் கறுப்பு நிறத்தை அளிக்கிறது.

வயதாகும்போது மெலனோசைட்டுகள் தங்களின் வேலை செய்யும் திறனைக் கொஞ்சம் கொஞ்சமாக இழக்கின்றன. ஒரு கட்டத்தில் மெலனின் உற்பத்தியை நிறுத்திவிடுவதால், முடி வெள்ளையாக நரைத்துவிடுகிறது, அஷ்மிதா.

SCROLL FOR NEXT