மாயா பஜார்

வியாழனுக்கும் சனிக்கும் ஏன் அதிக நிலவுகள்? | வானம் நமக்கொரு போதிமரம் 15

த.வி.வெங்கடேஸ்வரன்

சர்வதேச வானியல் ஒன்றியத்தின் பட்டியலின்படி, ஜனவரி 2026இல் வியாழன் கோளுக்கு 95 நிலவுகளும், சனிக்கோளுக்கு 146 நிலவுகளும் உள்ளன. நம் பூமிக்கு ஒரே ஒரு நிலவு. வெள்ளி, புதன் கோள்களுக்கு நிலவு ஏதுமில்லை.

ஒரு கோள், துணைக்கோள்களை (நிலவு) மூன்று விதங்களில் பெறுகிறது. முதலாவது, கோள் உருவாகும்போதே அதனுடன் சேர்ந்து உருவாவது. இப்படி ‘ஐயோ’, ‘யூரோபா’, ‘கனிமீட்’, ‘காலிஸ்டோ’ போன்ற வியாழன் கோளின் பெரிய நிலவுகள் உருவாயின.

இவை வியாழன் கோள் உருவான அதே கோள்திரள் தட்டில் திரண்டு, உருண்டு உருவானவை. எனவே இவை வியாழன் கோளின் உடன்பிறப்பு போன்றவை. கோளின் இளமைக் காலத்தில் ஒரு பெரிய வான்பொருள் மோதி, அதில் இருந்து தெறித்த துண்டுகள் திரண்டு, கோளைச் சுற்றி வலம்வரலாம்.

          

இவ்வாறுதான் பூமியின் நிலவு உருவானது எனக் கருதப்படுகிறது. இது தாய், சேய் போன்ற உறவு. எங்கோ பிறந்து வளர்ந்த இருவர் நண்பர்களாகச் சேர்வதுபோல, தற்செயலாக வானில் அருகே செல்லும் ஒரு வான்பொருளை, கூடுதல் ஈர்ப்பு ஆற்றல் கொண்ட கோள்களால் இழுத்துக்கொள்ள முடியும். இப்படித்தான் வியாழன் கோளின் தொலைவில் வெளிப்புறமாக உள்ள பல நிலவுகள் உருவாயின எனக் கருதப்படுகிறது.

கோளுடன் சேர்ந்து உருவாகும் நிலவுகள், கோள் தன்னைத்தானே சுற்றும் அதே தளத்திலும், அதே திசையிலும் சுற்றிவரும். மேலும், அவற்றின் சுற்றுக் காலங்கள் ஒத்திசைவுடன் இருக்கும். மையக் கோளைச் சுற்றிவரும் இரண்டு துணைக்கோள்கள் தங்கள் சுற்றுப்பாதையில் அருகருகே வரும்போது, ஒன்றின் ஈர்ப்பு விசை மற்றதின் மீது தாக்கம் செலுத்தும்.

3:1 விகிதத்தில் பற்களைக் கொண்ட இரண்டு கியர் சக்கரங்களில், சிறிய கியரின் ஒவ்வொரு மூன்றாவது திருப்பத்திலும் இரண்டு கியர்களின் குறிப்பிட்ட பற்கள் ஒரே புள்ளியில் சந்திக்கும்.

அதேபோல், அந்த இரண்டு துணைக்கோள்களும் காலப்போக்கில் அதே புள்ளியில் முழுவெண் விகிதத்தில் சந்திக்கும் நிலை உருவாகும். சந்திக்கும் புள்ளியில், இரண்டும் ஒன்றின் மீது மற்றொன்று தாக்கம் செலுத்தும்.

இதன் தொடர்ச்சியாகத்தான் ஐயோ, யூரோபா, கனிமீட் ஆகியவை 1:2:4 என்கிற ஒத்திசைவு ஊசலைக் கொண்டுள்ளன. அதாவது, ஐயோ ஒருமுறை வியாழனைச் சுற்றிவரும் அதே கால அளவில், யூரோபா இரண்டு முறையும், கனிமீட் நான்கு முறையும் சுற்றிவரும்.

இதைச் ‘சுற்றுப்பாதை ஒத்திசைவு’ (Orbital Resonance) என்பர். கோளுடன் சேர்ந்து உருவான துணைக்கோள்களின் தனிச் சிறப்பு இது. அவற்றின் சுற்றுப்பாதைக் காலங்கள் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் ஒத்துப்போகின்றன.

வேறு எங்காவது பிறந்து, வியாழனின் பிடியில் சிக்கிக்கொண்டு, துணைக்கோளாக மாறிய பொருள்களின் பாதையில் வேறுபாடு தென்படும். அவற்றின் சுற்றுத் திசை, கோளின் சுற்றுத் திசைக்கு எதிர்ப்புறமாக அமையலாம்.

அவற்றின் பாதை சாய்ந்து காணப்படலாம். எனவேதான், வியாழன் கோளின் வெளிப்புற நிலவுகள் வேறு எங்கோ பிறந்து, வியாழனின் பிடியில் சிக்கிக்கொண்டவை எனக் கருதப்படுகின்றன.

வியாழன் கோளைப்போல் ஆயிரம் மடங்கு கூடுதல் நிறை கொண்ட சூரியனின் ஈர்ப்புப் புலமே சூரிய மண்டலத்தில் வலுவானது. எனவே பொதுவாகச் சூரியக் குடும்பத்தில் உள்ள பொருள்களைக் கவர்ந்து, தன்னைச் சுற்றி வரச் செய்வது சூரியன்தான். எனினும், ஒரு பொருள் வியாழன் கோளுக்கு அருகே செல்லும்போது, வியாழன் கோளின் ஈர்ப்பும் சூரியனின் ஈர்ப்பும் இழுபறி நிலைக்கு உள்ளாகும்.

வியாழன் கோளுக்கு மிக அருகில் இருந்தால், அதன் கை ஓங்கி, அந்தப் பொருள் வியாழனின் ஈர்ப்பில் விழுந்துவிடும். ஒரு கோளின் ஈர்ப்பு விசை மேலோங்கி இருக்கும் பகுதியை ‘ஹில் பகுதி’ (Hill sphere) என்பர். நிலவின் அளவே உள்ள புதன் கோளின் ஹில் பகுதி வெறும் 1.75 லட்சம் கி.மீ. மட்டுமே.

அதாவது, இந்தத் தொலைவுக்குள் உள்ள பொருள்களை மட்டுமே புதன் கவர்ந்து தன்னைச் சுற்றிவர வைக்க முடியும். எனவேதான் புதன் கோளுக்கு நிலவே இல்லை. புதன் கோளைப் போல் 18 மடங்கு கூடுதல் நிறை கொண்ட பூமியின் ஹில் பகுதி 14.7 லட்சம் கி.மீ. எனவேதான், 3.8 லட்சம் கி.மீ. தொலைவில் உள்ள நிலா பூமியின் பிடியில் உள்ளது.

மீன் பிடிக்கும்போது, வீசும் வலை பெரிதாக இருந்தால் கூடுதல் மீன் அகப்படும். அதுபோல, பூமியைவிட 318 மடங்கு கூடுதல் நிறை கொண்டுள்ள வியாழன் கோள், சூரியக் குடும்பத்தில் உள்ள மற்ற அனைத்துக் கோள்களின் மொத்த நிறையைவிட 2.5 மடங்கு அதிக நிறை கொண்டது. ஒரு கோளின் நிறையைப் பொறுத்து அதன் ஈர்ப்புப் புலம் அமையும்.

எனவே, வியாழனின் ஹில் பகுதி 505 லட்சம் கி.மீ. வரை பரந்துள்ளது. இதன் விளைவாக, வியாழன் கோளால் கூடுதல் வான்பொருள்களைக் கவர்ந்து துணைக்கோள்களாக மாற்றிவிட முடிகிறது. சூரியனிடம் இருந்து உள்ள தொலைவும் கோளின் நிறையும் சேர்ந்து ஹில் பகுதியின் விரிவைத் தீர்மானிக்கின்றன.

வியாழன் கோளைவிட வெகு தொலைவில் சனிக்கோள் உள்ளதால், அங்கே சூரியனின் ஈர்ப்புப் புலம் குறைவாக உள்ளது. எனவேதான், சனிக்கோளின் ஹில் பகுதி 616 லட்சம் கி.மீ. இது வியாழன் கோளைவிடக் கூடுதலானது. எனவேதான், சனிக்கோள் 146 துணைக்கோள்களைக் கொண்டுள்ளது.

(அறிவோம்)

- tvv123@gmail.com

SCROLL FOR NEXT