மகிழ்புரி மன்னர் இந்திரவர்மன் மந்திரியோடு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். பாடலிபுரம் அருகே வந்தபோது ஒரு பெரிய ஆற்றைக் கண்டார். அதன் குறுக்கே கட்டப்பட்டிருந்த அணையையும் பார்த்தார்.
சுற்றிலும் வயல் வரப்புகளும் தோப்புகளும் பசுமையாகக் காட்சியளித்தன. “மந்திரியாரே, இந்த நாடு நமக்குச் சொந்தமானால் எப்படி இருக்கும்?” என்று கேட்டார் மன்னர்.
“நன்றாகத்தான் இருக்கும். ஆனால்?” “என்ன ஆனால்?” “பாடலிபுர மன்னர் மிகவும் நல்லவர். மற்ற நாட்டு மன்னர்களோடு நட்பைப் பேணுபவர். அவருடன் போரிடுவதில் எனக்கு விருப்பம் இல்லை மன்னா.” “பாடலிபுரத்தை என் ராஜ்ஜியத்தின் கீழ் கொண்டு வருவேன்” என்றார் மன்னார்.
பாடலிபுரம் மன்னருக்கு ஓலை ஒன்றை ஒற்றர் மூலம் இந்திரவர்மன் அனுப்பி வைத்தார். ஓலையைப் படித்துவிட்டு, முதலில் அதிர்ந்தாலும் போரை எதிர்கொள்ளத் தயங்கவில்லை. அறுவடை முடிந்த பிறகு போரை வைத்துக்கொள்ளலாம் என்று ஓலை அனுப்பி வைத்தார்.
போருக்கான நாள்கள் நெருங்கிக்கொண்டிருந்தன. அப்போது மகிழ்புரியில் புதிய நோய் ஒன்று உருவானது. அது மக்களோடு நின்று விடாமல் மன்னரையும் தாக்கியது. மன்னர் மந்திரியாரை அழைத்து, “நம் படை வீரர்கள் எல்லாரும் நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்களே, நம் வைத்தியர்கள் என்ன செய்கிறார்கள்?” என்று கேட்டார்.
“மன்னா, வைத்தியர்களும் நோயால் முடங்கிவிட்டனர். பாடலிபுரத்தில் வைத்தியர் ஒருவர் இருக்கிறார். அவரால் மட்டுமே இந்த நோய்க்கு மருந்து கொடுக்க முடியும். அவரை அழைத்து வரலாமா?” “என்னது, பாடலிபுரத்து வைத்தியரா? நாம் அந்த நாட்டின் மீது போர் தொடுக்க ஆயத்தமாகி வருகிறோமே?” “படை வீரர்கள் நன்றாக இருந்தால்தானே போர்புரிய முடியும்?” “ஆம். அழைத்து வாருங்கள்.”
இரண்டாவது நாள் பாடலிபுரத்து வைத்தியர் அரண்மனைக்கு வந்தார். “வணங்குகிறேன் மன்னா. புதிதாகப் பரவியுள்ள நோய் பற்றி அறிவேன். காரணத்தைக் கண்டறிந்து தகுந்த சிகிச்சை அளிக்கிறேன்” என்றார் வைத்தியர். ” மிக்க மகிழ்ச்சி வைத்தியரே.” வைத்தியர் ஆய்வுகளை மேற்கொண்டு நோய்க்கான காரணத்தைக் கண்டறிந்தார். குடிநீரில் மாசு கலந்திருப்பதால் அதைக் குடித்த அனைவருமே பாதிக்கப்பட்டது தெரியவந்தது.
உடனே அதற்கான மருந்தைத் தயாரித்தார். நாட்டு மக்களுக்கு அந்த மருந்தைக் கொடுக்கச் சொல்லி மன்னர் உத்தரவிட்டார். சில நாள்களில் நோயிலிருந்து அனைவரும் விடுபட்டார்கள். வைத்தியர் மன்னரிடம் வந்தார். “மன்னா, நான் என் நாட்டுக்குத் திரும்ப வேண்டும்” என்றார். “என்னையும் என் நாட்டு மக்களையும் காப்பாற்றி இருக்கிறீர்கள்.
தங்களுக்கு உரிய மரியாதை அளித்து கௌரவிக்க வேண்டும். எப்போது உமது வேஷத்தைக் கலைக்கப் போகிறீர்? ” “என்ன சொல்கிறீர்கள் மன்னா?” “பாடலிபுரத்து மன்னரே, அருமை நண்பரே, தங்களை அடையாளம் காண முடியாதா என்ன? நீங்கள் எமக்குச் செய்த பேருதவியை என்றென்றும் மறக்க மாட்டேன்” என்றார் இந்திரவர்மன்.
“வெகுமதி எல்லாம் வேண்டாம். எப்போது நமது போரை வைத்துக்கொள்ளலாம்?” “போரா, உம் நாட்டின் மீதா? உங்கள் நாட்டின் செல்வச் செழிப்பைப் பார்க்கும்போது எனக்குள் அந்தப் பொல்லாத எண்ணம் உண்டானது உண்மைதான்.
ஆனால், தாங்கள் பகைவன் என்று தெரிந்தும் மாறுவேடத்தில் வந்து என்னையும் என் நாட்டு மக்களையும் நோயிலிருந்து மீட்டெடுத்ததற்குக் காலம் முழுவதும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.” “நன்றி நண்பரே, வருகிறேன்.”