மாயா பஜார்

தேனடை ஏன் அறுங்கோண வடிவில் உள்ளது? | டிங்குவிடம் கேளுங்கள்

Guest Author

அப்பளம் நிறையச் சாப்பிட்டால் காது கேட்காமல் போகும் என்கிறார் பாட்டி. அது உண்மையா, டிங்கு? – ரா. தமிழினி, 4-ம் வகுப்பு, ஏ.எம்.எம். மெட்ரிக். பள்ளி, கோட்டூர்புரம், சென்னை.  

அப்பளம் அதிகமாகச் சாப்பிடுவதால் காது கேட்காமல் போகாது. அப்பளங்கள் உளுந்து, அரிசி போன்றவற்றால் தயாரிக்கப்படுகின்றன. அப்பளத்தில் உப்பு அதிகமாக இருக்கும்.

அதை எண்ணெய்யில் பொரிக்கிறோம். அளவுக்கு அதிகமான உப்பும் எண்ணெய்யும் உடல் நலத்துக்குக் கேடு விளைவிக்கும் என்பதால், உங்கள் பாட்டி அதிகமாக அப்பளம் சாப்பிட்டால் காது கேட்காது என்று சொல்லியிருக்கலாம், தமிழினி.

செடிக்கு ஆதாரமே விதைதான். ஆனால், விதை இல்லாத திராட்சை எப்படி விளைவிக்கப்படுகிறது, டிங்கு? - ஜி. இனியா, 10-ம் வகுப்பு, தி விஜய் மில்லினியம் மேல்நிலைப் பள்ளி, கிருஷ்ணகிரி.

செடி உருவாக விதைதான் காரணம் என்பது உண்மைதான். இயற்கையிலேயே சில தாவரங்கள் முழுமையான விதைகளை உருவாக்கும் திறனை இழந்துவிடுகின்றன. இந்தத் தாவரங்களில் உருவாகும் பழங்களில் மிகச் சிறிய அளவில் விதைகள் இருக்கும்.

ஆனால், இந்த விதைகளால் புதிய தாவரங்களை உருவாக்க இயலாது. அதனால்தான் விதையில்லாப் பழங்கள் என்கிறோம். இதுபோன்ற தாவரங்களில் இருந்து தண்டுப் பகுதிகளை வெட்டி இன்னொரு தாவரத்தின் தண்டுடன் இணைத்தும் பதியன் போட்டும் புதிய தாவரங்களை உருவாக்குகிறார்கள், இனியா.

தேனடையில் உள்ள அறுங்கோண வடிவத்தை, தேனீக்கள் எப்படி உருவாக்குகின்றன, டிங்கு? - வீ. வீர ரகுபாண்டி. 8-ம் வகுப்பு. ஊ.ஒ.ந.நி.பள்ளி. தங்களாச்சேரி, மதுரை.

நல்ல கேள்வி வீர ரகுபாண்டி. தேனீக்கள் மெழுகை வைத்துக் கூட்டை உருவாக்கும்போது வட்டம் அல்லது உருளை வடிவிலேயே கூட்டை உருவாக்குகின்றன. பல்லாயிரக்கணக்கான தேனீக்கள் ஒன்றுகூடி, உடலிலிருந்து வெப்பம் வெளியேற்றி, மெழுகைக் கொஞ்சம் உருக வைக்கின்றன. அப்போதுதான் அவை அறுங்கோண வடிவை அடைகின்றன.

அதாவது, கூட்டில் உள்ள பல உருளை வடிவ அறைகள் வெப்பத்தால் உருகி, ஒன்றை மற்றொன்று நெருக்கமாக அழுத்தும்போது, மேற்பரப்பு இழுவிசையாலும் அழுத்தத்தின் சமநிலையாலும் அந்த வட்டங்கள் இயற்கையாகவே அறுங்கோண வடிவமாக மாறுகின்றன. இந்த வடிவத்தில் தேனை அதிக அளவில் சேமிக்க முடியும், கூட்டுக்கு இது உறுதியையும் தருகிறது.

SCROLL FOR NEXT